2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  “விண்வெளி ஏணி” (Space Ladder-Space Escalator) ஆர்வமூட்டும் அல்குர்ஆன்

  “விண்வெளி ஏணி” (Space Ladder-Space Escalator) ஆர்வமூட்டும் அல்குர்ஆன்

   

   

   பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

    S.ஹலரத் அலி

  மனித சமூதாயத்திற்கு அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியதன் காரணம், இறை வசனங்களை படித்தறிந்து  சிந்தித்து செயல்பட்டு நேர்வழி பெறவேண்டும் என்பதுவே. அல்குர்ஆனின் வசனங்களை எளிதாக விளக்குவதற்காக ஏராளமான உதாரணங்களையும் அல்லாஹ்  கூறுகின்றான். அப்படி கூறப்படும் உதாரணங்கள் நாம் அறிந்த ஒன்றாகவே  இருக்கும். மனித அறிவுக்குப் புலனாகாத உதாரணங்களை அல்லாஹ் கூறுவதில்லை. குறிப்பாக, கூறும் உதாரணத்தில் கூட உண்மையல்லாததை அல்லாஹ் கூறுவதில்லை.

   குர் ஆன், இறக்கப்பட்ட அன்றிலிருந்து இறுதி முடிவு நாள்வரை, வழி வழியாக வரும் எல்லாக் கால மக்களுக்கும் நேர் வழி காட்டியாக உள்ளது. இனி வரப்போகும் மக்களுக்கும் இதில் அறிவார்ந்த செய்திகள் உள்ளன. 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் மத்தியில் இறங்கிய ஒரு வசனம் இப்படி கூறுகிறது.

   மனு ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல சக்தி பெருவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.”    அல் குர்ஆன் 55:33.

  வானம், பூமியின் எல்லைகளைக் கடந்து செல்ல மனிதர்களால் முடியும் ஆனால் அதற்குரிய சக்தி அறிவாற்றல் இன்றி செல்ல முடியாது என்று அம்மக்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான். அன்றைய மனிதர்களுக்கு எல்லை கடக்கும் அறிவாற்றல் சாத்தியப்படவில்லை. இன்றைய இருபதாம் நூற்றாண்டு மனிதர்களுக்கு அதற்குரிய அறிவாற்றல் கொடுக்கப்பட்டதால் இன்று விண்வெளிப் பயணம் சாதாரணமாகிவிட்டது. ஆக நடக்கக்கூடிய ஒன்றையே அல்லாஹ் உதாரணமாக கூறுவான். நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை அல்லாஹ் உதாரணமாக கூறுவதில்லை.

   வானம் பூமியின் எல்லையைக் கடப்பதற்கு இன்று சக்தி வாய்ந்த ராக்கெட் என்ஜின்களை பயன்படுத்துகிறார்கள்.பூமியின் புவி ஈர்ப்பு சக்தியை மீறி செல்வதற்கு விடுபடும்  வேகம் (Escape Velocity) வினாடிக்கு  11.2 கி.மீ ( மணிக்கு 40,320 கி.மீ.) தேவைப்படுகிறது. ஒரு கிலோ எடையுள்ள பொருளை பூமியின் எல்லையை தாண்டி தூக்கிச் செல்ல சுமார் 25,000 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றது.மேலும் தூக்கிச் செல்லும் ராக்கெட் முற்றிலும் அழிந்து விடுவதால் மீண்டும் செல்ல புதிய ராக்கெட்டுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளதால் விண்வெளிப்பயணம் செலவு  மிகுந்த ஒன்றாக உள்ளது.விண் ஏணி மூலம் ஒரு கிலோவிற்கு சுமார் 200 டாலர் மட்டுமே செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

   குறைந்த செலவில் உயரே  ஏறுவதற்கு என்ன வழி என்று மனிதன் சிந்தனை செய்தான்.சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கான்ஸ்டன்டைன் (Konstantin Tsiolkovsky-1895) என்பவர்.

  சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை முன்வைக்கிறார். விண் ஏணி! (Space Ladder), ஒரு நாள் ஈபில் டவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த சிந்தனை தோன்றியதாம். இதே கோபுரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தினால் வானத்திற்கு ஏணி அமைத்துவிடமுடியும் என்று நம்பினார். அவர் முயற்சி செய்த உயரம் 35,786 K.M பூமியின் தரைப் பகுதியிலிருந்து புவிநிலைச்   சுற்றுப்பாதை ( Geo Stationary Orbit ) அமைந்திருக்கும் உயரம். இந்த உயரத்தில் செயற்கை கோளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அவர் திட்டம்.

   3500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விண்வெளி ஏணித் திட்டம், எகிப்தை ஆண்ட “பாரோ” மன்னனுக்கு வந்ததாக அல்குர் ஆன் கூறுகிறது.

   ஹாமானே! உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெரும்பொருட்டு! ஆம்! வானங்களின் பாதைகளை அடைந்து மூசாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்;…..    அல் குர்ஆன்.40:36.37.

   உயரமான இடத்திற்கு ஏறுவதற்கு நாம் ஏணியை பயன்படுத்துகிறோம். இதுபோல் விண்ணில் ஏறுவதற்கு ஒரு ஏணியை உருவாக்கினால் செலவு குறைந்த பயணமாக ஆகும் என்ற கருத்தில் விண்ஏணி, விண் தூக்கி, (Space Ladder-Space Lift-Space Elevator) குறித்து ஆய்வுகள் இன்று நடந்து வருகின்றன.

  http://www.extremetech.com/extreme/176625-60000-miles-up-geostationary-space-elevator-could-be-built-by-2035-says-new-study
  http://en.wikipedia.org/wiki/Space_elevator

    இறுதி உம்மத்தான நாளைய மனிதர்களால் இதுவும் சாத்தியமே என்றே அல்குர் ஆனும் கூறுகிறது.விண்ணில் ஏணி மூலம் ஏறிச் செல்ல,  மனிதர்களை ஊக்குவிக்கிறது.

   நபியே! அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரும் கஷ்டமாக இருந்தால்,உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஒரு அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வாரும். அல்குர்ஆன்  6:35

     “..அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற-Space Ladder) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.”  அல்குர்ஆன்.38:10

  “..அல்லது அவர்களுக்கு ஏணி ( Space Ladder-Space Elevator)  இருந்து அதன் மூலம் (வானத்தின் ரகசியங்களை) கேட்டு வருகிறார்களா? அவ்வாறாயின் அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதை தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும். அல் குர்ஆன்.52:38

    இப்படி விண் ஏணியின் மூலம்  இவர்கள் வானத்திற்கு சென்றாலும் நிராகரிப்பவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள் என்பதையும் அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.

   இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அதில் அவர்கள் (நாள்  முழுவதும் தொடர்ந்து) ஏறிக்கொண்டிருந்தாலும் (அவர்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள்). அல்குர்ஆன்.15:14

   “..அல்லது ஒரு தங்க மாளிகை உமக்கு இருந்தாலன்றி; அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும்.அங்கிருந்து எங்களுக்காக நாங்கள் பார்க்ககூடிய வேத (நூலை)த்  நீர் கொண்டு வந்து தரும் வரையிலும், நீர் வானத்தில் ஏறியதையும் நாங்கள் நம்பமாட்டோம்.என்று கூறுகிறார்.”  அல்குர்ஆன் 17:93

  இப்படி பல வசனங்களில் வானத்தில் ஏறக்கூடிய ஏணி போன்ற சாதனங்களைப் பற்றி இறுதி சமூதாய மக்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்.

   உயரமான இடங்களுக்குச் செல்ல நாம் ஏணியை பயன்படுத்துகின்றோம். மிக உயரமான கட்டிடங்களின் உச்சிக்கு செல்ல மின் ஏணியை (LIFT) பயன்படுத்துகிறோம். இதையே நாம் ஏன் விண்வெளிக்கு பயன்படுத்தக்கூடாது என்று யோசித்ததன் விளைவுதான் (Space Ladder Project)விண் ஏணித் திட்டம் அமெரிக்காவின் நாசாவால் (NASA) உருவாக்கப்பட்டது. பூமியிலிருந்து அடிக்கடி விண்வெளி ஓடத்தை அனுப்புவதைக் காட்டிலும் ஒரு ஏணி இருந்தால் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான பொருள்களை மிகக் குறைந்த செலவில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லலாம் என்று திட்டமிட்டு இம்முயற்சியில் இறங்கியது.

  ஏறக்குறைய மூன்று முறை இத்திட்டம் தோல்வி அடைந்த நிலையில், தற்போது ஜப்பானிய நிறுவனம் ஒன்று இம்முயற்சியில் தீவீரமாக ஈடுபட்டுள்ளது. விண்வெளிக்கு சென்று வர, 2050ம் ஆண்டிற்குள், ‘லிப்ட்’ அமைக்கப்படும்’ என்று ஜப்பான் நாட்டின் பிரபல கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது. ஜப்பானின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான, ‘ஒபாயஷி’ வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: நேர்கோட்டில், காந்த மோட்டாரில் இயங்கும் ரோபாட்டிக் கார்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் வரை கொண்டு செல்லப்படும். 96,000 கி.மீ., உயரம் வரை செல்லும் இந்த லிப்ட்டில், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சென்று வரவும், பொருட்களை கொண்டு வரவும் செல்லவும் முடியும். விண்ணில் ஏவப்படும் ராக்கெட் தயாரிப்பு செலவை விட, லிப்ட் தயாரிப்பு செலவு மிகவும் குறைவு. இந்த ‘லிப்ட்’ டில், விண்வெளி ஆய்வு நிலையத்தை ஏழு நாட்களில் சென்றடையலாம். விண்வெளி வரை கொண்டு செல்வதற்குத் தேவையான நீண்ட கேபிள்கள், 2030ம் ஆண்டிற்குள் தயாரிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. பூமியிலிருந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம், 330 கி.மீ., துாரத்தில் உள்ளது..

    

  50 மாடி, 100 மாடி லிப்ட் கேள்விப்பட்டிருக்கலாம். விண்வெளிக்கு, அதாவது சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு லிப்ட் அமைப்பது குறித்து ஜப்பானின் ஒபயாஷி நிறுவன விஞ்ஞானிகள் (ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஸ்டீலைவிட 100 மடங்கு உறுதியான கார்பன் நானோ டியூப் ( carbon nanotube or boron nitride nanotube ) பயன்படுத்தி, பூமியில் இருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு ஒரு பிரமாண்ட போஸ்ட் நடவேண்டும். அதன் உச்சியில் ஆய்வு மையம் மற்றும் சுற்றுலா தலம் அமைக்கப்படும். போஸ்ட்டின் உச்சிக்கு லிப்ட்டிலேயே போகலாம். இந்த லிப்ட்  மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு நேரத்தில் 30 பயணிகள் சென்றுவர முடியும். ஆராய்ச்சியை தீவிரப்படுத்தினால், 2050-ம் ஆண்டுக்குள் விண்வெளி லிப்ட் ரெடி என்று சர்வசாதாரணமாக சொல்கிறார் ஆய்வு நிறுவனத்தின் தலைவி ஒபயாஷி

   


  தற்போது கார்பன் நானோ இழைகளைக்காட்டிலும் மிக மெல்லிய ஆனால் உறுதியான வைர நானோ இழைகள் (Diamond nanothreads) அமெரிக்க ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

  Want to ride an elevator into space? While the idea has been around for more than 100 years, a breakthrough in nanotechnology could mean we will be riding into space on a cable made of diamonds.”

  Scientists at Penn State University in the US released a research paper last month that showed the way forward to producing ultra-thin “diamond nanothreads” that have a strength and stiffness greater than that of today’s strongest nanotubes and polymers.

  http://edition.cnn.com/2014/10/10/tech/innovation/space-elevator-nanotechnology/
  http://www.abc.net.au/news/2014-09-21/japanese-construction-giants-promise-space-elevator-by-2050/5756206

   பூமியிலிருந்து வானத்திற்கு கயிற்றின் மூலம் ஏறுவது பற்றிய உதாரணச் செய்தியை புஹாரி ஹதீஸில் பார்க்கலாம்.

   ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு;குறைவாக பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச்சேர்ந்தது.அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்றார்.பிறகு (நான்காவதாக) இன்னோரு மனிதர் (வந்து) அதைப்பற்றிக் கொள்ள அந்தக்கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது.” என்றார்.

  அப்போது (அங்கிருந்த) அபூபக்கர் (ரலி௦) அவர்கள், “இறைதூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ்வின் மீதாணையாக இந்தக்கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்கள்.அதற்க்கு நபி (ஸல்௦) அவர்கள் “சரி இதற்க்கு விளக்கம் சொல்லுங்கள்” என்றார்கள்.அபூபக்கர் (ரலி) அவர்கள், “அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்தது) சொட்டிக்கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும்.அதன் இனிமை சொட்டிக்கொண்டிருக்கிறது.குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாக பெற்றவர்களும் உள்ளனர்.

  வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிரானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய மார்க்கமாகும்.அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான்.பிறகு உங்களுக்கு பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார்.அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப்பற்றிக்கொண்டு அதன் மூலம் உயர்ந்து விடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார்.(ஆனால்) அது அவரோடு அறுந்து விடுகிறது.பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது.அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்.” என்று கூறிவிட்டு, “இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்.(நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?” என்று கேட்டார்கள்.

  நபி (ஸல்) அவர்கள், “ சிலவற்றை சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றை தவறாகச் சொல்லி விட்டீர்கள்”என்றார்கள். அபூ பக்கர் (ரலி) அவர்கள்,”இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்கள்.நபி (ஸல்) அவர்கள் “இனி சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை” என்றார்கள்.

                                அறிவிப்பாளர்: இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்கள்  ஸஹிஹுல் புஹாரி.7046.

   விண்வெளிக்கு செல்லும் ஆய்வாளர்களையும்,பயணிகளையும் பெரிதும் அச்சுறுத்தும் காஸ்மிக் கதிர்களின்(Cosmic Rays) தாக்கம் எதிபார்த்ததை விட மிகவும் குறைவாக இருப்பதாக சமீபத்திய MATROSHKA சோதனை முடிவுகள் தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ள செய்தி,விண் ஏணி பயணத்திற்கு ஆர்வமூட்டக்கூடியதாக உள்ளது.

   “Space travel is a bit safer than expected.” ScienceDaily. ScienceDaily, 3 December 2014. www.sciencedaily.com/releases/2014/12/141203111128.htm

     அமெரிக்கா சியாட்டில் நகரில் வரும் ஆகஸ்ட் 21-23 ல் நடக்க இருக்கும் விண் ஏணி சர்வதேச மாநாட்டில் இது குறித்து விரிவாக விவாதிக்க இருக்கிறார்கள்.

  http://www.isec.org/sec

    1400 ஆண்டுகளுக்கு முன் அல் குஆன் கூறிய  அறிவியல்  முன்னறிவிப்புகளை இன்றைய நவீன விஞ்ஞானம் ஆராய்ந்து உண்மைப் படுத்தி வருகிறது.அந்த வகையில் பூமியில் இருந்து வானுக்குச் செல்லும் கயிறாக கார்பன் நானோ இழைகளால் அமைக்கப்படும் விண் ஏணி மூலம் மனிதர்கள் வானில் ஏறுவது இன்னும் ஐம்பது வருடங்களில் சாத்தியமே.மனிதர்கள் வானத்தில் ஏறலாம்,பூமிக்குள் இறங்கலாம்;ஆனால் இவைகளை படைத்த இறைவனை ஏற்றுக் கொள்ளாதவரை மனிதனுக்கு வெற்றியில்லை விடிவுமில்லை.

   அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில்  சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் உள்ளன.”  அல்குர்ஆன்  45:13.