2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  - நரகத்தின் கொடூரம்!

  - நரகத்தின் கொடூரம்!
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே நித்திய ஜீவன்!, (பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவன்! நிலைத்திருப்பவன்., அவனல்லாதார் எவருமே நிலைத்திருக்க மாட்டார்கள். வானத்தை உயர்த்தினான். அதனை நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்தான்! எல்லைக்கற்கள் போன்ற மலைகளை ஊன்றி பூமியை நிலைப்படுத்தினான். தனது ஆற்றல் கொண்டு (மனிதர்களின்) உடல்களை வடிவமைத்தான். பிறகு அவர்களை மரணிக்கச் செய்தான். அத்துடன் அடிச்சுவடுகளைக்கூட அழித்துவிடுகிறான். பிறகு எக்காளத்தில் ஊதச் செய்வான். மரணித்தவர்கள் அனைவரும் அப்பொழுது எழுந்துவருவார்கள். ஒரு பிரிவினர் அருட்பேறுகள் நிறைந்த சுவனம் செல்வார்கள். மற்றொரு பிரிவினர் அனற்காற்று வீசும் நரகம் செல்வர்! அந்நரகவாசிகளில் ஒவ்வொரு பிரிவினர்க்கும் ஒவ்வொரு வாசல் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர உயரமான தூண்களில் அவர்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் நரக நெருப்பு அவர்களின் மீது சூழப்பட்டு பெருந்துயரங்களுக்கும் கவலைகளுக்கும் அவர்கள் ஆளாகியிருப்பார்கள்! மேலிருந்தும் பாதங்களுக்குக் கீழிருந்தும் வேதனை அவர்களைச் சூழ்ந்திருக்கும் நாளில் அவர்களில் எவருக்கும் இறையருள் கிடைக்காது!
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதும் இல்லை என்று சாட்சி சொல்கிறேன். ஈடேற்றத்தை நாடுபவனின் சாட்சியமாகும் இது! முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். அவர்களது மார்க்கத்திற்கு பாரசீகத்தின் மீதும் ரோமாபுரியின் மீது அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தான்.
  நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் தோழர்கள் மீதும் அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் மீதும் - மேகங்கள் மழையைக் கொட்டிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் ஸலவாத் பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  சகோதரர்களே! அல்லாஹ் தனது வேதத்தில் நரகத்தைக் குறித்து நம்மை எச்சரிக்கை செய்துள்ளான். அங்குள்ள பல வகையான வேதனைகள் பற்றி - ஈரல்கள் பிளந்து, இதயங்கள் பொங்கியெழும் அளவுக்கு நமக்கு அறிவித்துள்ளான். இவ்வாறு நரகத்தைப் பற்றி நமக்கு அவன் எச்சரிக்கை செய்ததும் அதன் விதவிதமான வேதனைகள் குறித்து நமக்கு அறி விப்புச் செய்துள்ளான்
  காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம். (76 : 4)
  கொடுமையாளர்களுக்காகத் திண்ணமாக நாம் ஒரு நெருப் பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றிவளைத்தாகிவிட்டது" (18 : 29)
  (ஓரிடத்தில் இப்லீஸிடம் அல்லாஹ் கூறுகிறான்:) ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகிறார்களோ அவர்களிடம் மட்டும்தான் உனது அதிகாரம் செல்லுபடியாகும். நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் அனைவருக்கும் நரகமே என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது! (இப்லீஸை பின்பற்றுவோருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள) அந்நரகத்திற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு பிரிவினருக்கென ஒதுக்கப்பட்டுள்ளது" (15 : 42 -44)
  இறைவனை நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் (இறுதித் தீர்ப்புக்குப் பிறகு) நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவ்வாறாக அவர்கள் நரகத்தை நெருங்கியதும் அதன் வாயில்கள் திறக்கப்படும்" (39 : 71)
  எவர்கள் தங்களுடைய இரட்சகனை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது! அதுமிகவும் கேடுகெட்ட இருப்பிடமாகும். அதில் அவர்கள் வீசியெறியப் படும் போது அதன் கடுமையான கர்ஜனையைக் கேட்பார்கள். அது கொதித்துக் கொண்டிருக்கும். கடுமையான கோபத்தால் வெடித்துவிடும் போலிருக்கும்" (67 : 61 - 63)
  அந்hளில் வேதனை இவர்களின் மேலிருந்தும் இவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் இவர்களைச் சுற்றிவளைத்துக் கொள் ளும்" (29 : 55)
  அவர்களின்மீது நெருப்புக்குடைகள் மேலிருந்தும் கீழிருந்தும் மூடியிருக்கும். இத்தகைய முடிவைக் குறித்துத்தான் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகிறான். என் அடியார்களே! என் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்" (39 : 16)
  மேலும் இடது பக்கத்தார்., இடது பக்கத்தார் (துர்ப்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது? அவர்கள் அனற் காற்றிலும் கொதிக்கும் நீரிலும் கரும் புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள். அது குளிர்ச்சியாகவும் இராது. சுகமாகவும் இராது" (56: 41-44)
  மேலும் கடுமையான இந்த வெப்ப காலத்தில் போருக்குப் புறப்படாதீர்கள் என்று (மக்களிடம்) கூறினார்கள். (இவர்களிடம்) கூறுவீராக: நரக நெருப்பு இதை விட அதிக வெப்பம் உடையது" (9 : 81)
  அது என்னவென்று உமக்கத் தெரியுமா என்ன? கொழுந்து விட்டெரியும் நெருப்பு" (101 : 11)
  இந்தக் குற்றவாளிகள் உண்மையில் தவறான கருத்துக்களில் உழல்கின்றார்கள். மேலும் இவர்களின் புத்தி பேதலித்திருக்கிறது. இவர்கள் நரக நெருப்புpல் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: இப்பொழுது சுவையுங்கள். நரக நெருப்பின் தீண்டுதலை" (54 : 47-48)
  மேலும் அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா என்ன? அது இருக்கவும் விடாது., விட்டும் வைக்காது! அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது" (74 : 26-29)
  இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பில் இருந்து உங்களையும் உங்கள் மனைவி - மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! அதன் மீது கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையை ஒருபோதும் மீற மாட்டார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டளை இடப்பட்டாலும் அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள்" (66 : 6)
  அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும். அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும்" (77:32-34)
  அந்நாளில் குற்றவாளிக(ளின் கைகால்)கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை நீர் காண்பீர். அவர்கள் தார் ஆடைகளை அணிந்திருப்பார்கள். மேலும் அவர்களின் முகங்களைத் தீக் கொழுந்துகள் சூழ்ந்திருக்கும்" (41:48-50)
  அப்பொழுது அவர்களுடைய கழுத்துகள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கும். அவர்கள் கொதிநீரின் பக்கம் இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள். பின்னர் நெருப்பில் போட்டு தீ மூட்டப்படுவார்கள்" (40:72)
  எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நெருப்பு ஆடைகள்; தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் தலைகளின் மேலிருந்து கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதனால் அவர்களின் தோல்கள் மட்டுமல்ல வயிற்றினுள் இருக்கும் பகுதிகளும் வெந்து உருகி விடும்! மேலும் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காக இரும்புக் சம்மட்டிகள் இருக்;கின்றன. மனவேதனையினால் நரகத்தில் இருந்து வெளியேற அவர்கள் முயற்சி செய்யும் போதெல்லாம் - சுட்டெரிக்கும் தண்டனையைச் சுவையுங்கள் என்று மீண்டும் அதிலேயே தள்ளப்படுவார்கள்" (22:22)
  திண்ணமாக ஸக்கூம் - கள்ளி மரம் பாவிகளின் உணவாக இருக்கும். அது எண்ணைக் கசடு போலிருக்கும். சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் கொதிக்கும்" (44:43-45)
  மற்றோரிடத்தில் அந்த மரத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்: "அது நரகின் அடித்தளத்தில் இருந்து முளைத்து வருகிற ஒரு மரம். அதன் பாளை சைத்தான்கள் தலை போல் இருக்கும்" (37:64-65)
  பின்னர், ஓ! வழிகெட்டவர்களே! பொய்யென்று தூற்றியவர்களே! நீங்கள் ஸக்கூம்- கள்ளி மரத்தைதையே உண்ணப் போகிறீர்கள்! நீங்கள் அதைக்கொண்டே வயிற்றை நிரப்புவீர்கள். அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள். அடங்கா தாகம் கொண்ட ஒட்டகத்தைப் போன்று" (56:51-55)
  அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின் உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடு கெட்ட பானமாகும். மேலும் அவர்களின் ஓய்விடம் தீயதாகும்" (18:29)
  (நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடக்கும்) அவர்களுக்கு கொதிக்கும் நீர் புகட்டப்படும். அது அவர்களின் குடல்களை எல்லாம் துண்டுதுண்டாக்கி விடும்" (47:15)
  அந்நரகவாசிக்குச் சீழ் புகட்டப்படும். அதனை அவன் கஷ்டப்பட்டு விழுங்க முயல்வான். எனினும் அதனை எளிதில் விழுங்கிட அவனால் முடியாது. அனைத்துத் திசைகளில் இருந்தும் மரணம் அவனை நோக்கி வரும். ஆயினும் அவனால் மரணம் அடைய முடியாது. அதைப் தவிர ஒரு கடும் வேதனை அவனது உயிரை வதைத்துக் கொண்டிருக்கும்" (14:16-17)
  குற்றவாளிகளோ நரக வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்களின் வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் அதில் நிராசையுற்றிருப்பார்கள். நாம் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை. அவர்கள் தாம் தமக்குத்தாமே கொடுமை இழைத்துக்கொண்டார்கள்! அவர்கள் மன்றாடுவார்கள்., மாலிகே! உம் அதிபதி எங்கள் பிரச்னையை முடிக்கட்டுமே! என்று! அதற்கு அவர்: நீங்கள் இப்படியேதான் கிடப்பீர்கள்... என்று பதிலளிப்பார்" (43:73-77)
  அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அதன் வெப்பம் தணியத் தொடங்கும் போதெல்hலம் நாம் அதனை இன்னும் அதிகம் கொழுந்து விட்டெரியச் செய்வோம்" (17:97)
  நிச்சயமாக எவர்கள் இறைவனை நிராகரித்தார்களோ மேலும் அக்கிரமம் புரிந்தார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான். அவர்களுக்கு நரகத்திற்கான வழியைத் தவிர வேறெந்த வழியையும் காண்பிக்கமாட்டான். அதில் அவர்கள் காலமெல்லாம் வீழ்ந்து கிடப்பார்கள். அவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதான காரியம்தான்" (4:168)
  நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் சபித்துவிட்டான். மேலும் அவர்களுக்காக, கொழுந்து விட்டெரியும் நெருப்பைத் தயார் செய்துள்ளான். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். எந்த ஓர் ஆதரவாளரையும் உதவியாளரையும் அவர்கள் பெறமாட்டார்கள்" (33:64-65)
  எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் திண்ணமாக அவருக்கு நரக நெருப்பு உண்டு! இப்படிப்பட்டவர்கள் அதில் நிரந்தரமாக-காலாகாலமாக வீழ்ந்து கிடப்பார்கள்" (72:22)
  சிதைத்துச் சின்னாப்பின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா? அது அல்லாஹ்வின் நெருப்பு., அது உக்கிரமமாக மூட்டப்பட்டிருக்கக் கூடியது., அது இதயங்கள் வரை சென்று பரவும். உயர உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில்) நிச்சயமாக அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள்" (104:5-9)
  நரகத்தின் கொடூரத்தை வர்ணிக்கக்கூடிய - ஓயாமல் துன்புறுத்தும் அதன் பல்வேறு வேதனைகளைச் சுட்டிக் காட்டக்கூடிய குர்ஆன் வசனங்கள் ஏராளம் உள்ளன!
  நபிமொழிகள் வருமாறு
  இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் கூறினார்கள்: (நரகத்தின்) கள்ளிச் செடியிலிருந்து ஒரு துளி இவ்வுலகத்தில் விழுந்தால் உலக மக்களின் வாழ்வாதாரங்களையே அது நாசமாக்கிவிடும்"(நூல்:நஸாயி, திர்மிதி, இப்னு மாஜா) (இதனை ஹாகிமும் அறிவித்துள்ளார்கள்: மேலும் சொன்னார்கள்: இது புகாரி, முஸ் லிமின் நபந்தனையின்படி ஸஹீஹ் ஆகும்.)
  நுஃமான் பின் பசீர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகில் வீழ்ந்து கிடப்பவர்களில் மிக லேசான தண்டனையை அனுபவிப்பவன் நெருப்பினால் செய்யப்பட்ட இரண்டு செருப்புககையும் இரண்டு வார்களையும் அணிந்திருப்பான். அவற்றின் வெப்பத்தினால் அவனது மூளை கொதிக்கும்., அடுப்பில் சட்டி கொதிப்பது போன்று! அனைவரை விடவும் லேசான வேதனையை அனுபவிப்பவன் அவனாகவே இருப்பான். ஆயினும் தன்னை விடவும் கடுமையான வேதனையை எவரும் பெற்றிருக்க மாட்டார் எனக் கருதுவான்" (நூல் : முஸ்லிம் - இதே போன்ற வாசகம் புகாரியிலும் பதிவாகியுள்ளது.
  அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலக மக்களில் மிகவும் சுக போகமாக வாழ்ந்தவன் -நரகம் செல்ல வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு நரகில் போடுவதற்காகக் கொண்டு வரப்படுவான். நரகத்தில் ஒரு தடவை அவனைப் போட்டு எடுக்கப் படும்., பிறகு கேட்கப்படும்: மனிதனே! நீ எப்போதாவது இன்ப நிலையை கண்டதுண்டா? உனது வாழ்வில் ஏதாவது சுகத்தை நீ அனுபவித்ததுண்டா? என்று! அவன் சொல்வான்: என் இரட்சனகனே! உன் மீது ஆணையாக! எந்த இன்பத்தை யும் நான் அனுபவிக்கவில்லை!
  இதேபோன்று உலக மக்களில் அதிக அளவு கஷ்டம் அனுபவித்தவர் - சுவனம் செல்லலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு - சுவனத்தில் சேர்ப்பதற்காகக் கொண்டு வரப்படுவார். சுவனத்தில் ஒரு தடவை அவர் புகுத்தப்பட்டு வெளியே கொண்டு வந்து அவரிம் கேட்கப்படும்: மனிதனே! நீ எப்போதாவது உனது வாழ்வில் துன்பம் அனுபவித்தது உண்டா? என்று! அதற்கு அவர், என் இரட்சகனே! உன் மீது சத்தியமாகச் சொல்கிறேன்: எந்த வறுமையையும் நான் பார்த்ததில்லை., எந்தக் கஷ்டத்தையும் நான் அனுபவித்ததில்லை" (முஸ்லிம்)
  - அதாவது, நரகவாசிகள் உலகில் அனுபவித்த எல்லா இன்பங்களையும் மறந்து விடுவார்கள். சுவனவாசிகள் உலகில் அனுபவித்த எல்லாக் கஷ்டங்களையும் மறந்துவிடுவார்கள்!
  அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளைச் சேர்ந்த ஒரு மனிதனிடம் கேட்கப்படும்: நீ என்ன சொல்கிறாய்? பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் உன்னிடம் இருந்திருந்தால் அவற்றை ஈடாகக்கொடுத்து வேதனையிலிருந்து நீ விடுபடலாம் எனக் கருதுகிறாயா, என்ன? அதற்கு அவன் ஆம் என்பான்! இறைவன் சொல்வான்: இதனை விட எளிதான ஒன்றைத்தானே உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன்! ஆதத்தின் முதுகில் நீ இருந்தபோது என்னோடு எது ஒன்றையும் நீ இணையாக்கக் கூடாது என்று உன்னிடம் வாக்குறுதி வாங்கினேன். ஆனால் எனக்கு இணைகற்பிப்பதில்தான் நீ பிடிவாதமாக இருந்தாய்" (நூல்:அஹ்மத் - முஸ்லிம் - புகாரியிலும் இது போல் பதிவாகியுள்ளது!
  யஃலா இப்னு முன்யா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவர் உமையாவின் மகன்., முன்யா என்பது அவருடைய தாய்): நரகவாசிகளின் மீது ஒரு மேகக்கூட்டத்தை அல்லாஹ் உருவாக்கிக் கொண்டு வருவான். அது அவர்களுக்கு மேல் நேராக வரும்போது அவர்களை நோக்கி இறைவன் கூறுவான்: நரகவாசிகளே! நீங்கள் விரும்புவது என்ன? கேட்பது என்ன?- அதனைப் பார்த்தவுடன் உலகத்து மேகங்களும் அவர்கள் மீது பொழிந்து கொண்டிருந்த மழையும் அவர்களின் நினைவுக்கு வரும் -இரட்சகனே! நாங்கள் கேட்பது மழையைத் தான் என்று அவர்கள் சொல்வார்கள். பிறகு விலங்குகளை அவர்கள் மீது அவன் பொழியச் செய்வான்., அது, அவர்களின் மீது பூட்டப்பட்டிருக்கும் விலங்குகளுடன் விலங்குகளாய் அதிகரிக்கச் செய்யும்! சங்கிலிகளைப் பொழியச் செய்வான்., அது, அவர்களைப் பிணைத்துக் கொள்ளும்! தீப்பிழம்புகளையும் பொழியச் செய்வான்., அது, அவர்களின் மீது தீயை நன்கு கொழுந்துவிட்டு எரியச் செய்யும்" (இப்னு மர்தவைஹ்)
  அபூ மூஸா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர் சுவனம் புகமாட்டார்கள். (1) குடிகாரன் (2) இரத்த பந்தத்தை முறிப்பவன் (3) சூனியத்தி(ன் செய்தியி)னை உண்மைப்படுத்துபவன்!- எவன் குடிகாரனாக இருந்து மரணம் அடைந்தானோ அவனுக்கு அல்லாஹ் ஃகூதா எனும் நதியிலிருந்து நீர்புகட்டுவான். ஃகூத்தா நதி என்பதுஎன்ன? என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அது விபச்சாரிகளின் மர்ம உறுப்புகளில் இருந்து வழிந்தோடும் நீர் ஆகும். அவர்களுடைய மர்ம உறுப்புகளின் துர்நாற்றம் நரக வாசிகளைச் சங்கடத்தில் ஆழ்த்தும்" (நூல்: அஹ்மத்) (ஹாகிம் இதனை ஸஹீஹ் என்று சொல்லியுள்ளார்கள். தஹபி அதனை ஏற்றுள்ளார்கள்.)
  ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவன் போதைப் பொருள்களை உட்கொண்டானோ அவனுக்கு அல்லாஹ் - (த்)தீனதுல் கபால் - இல் இருந்து நீர் அருந்தச் செய்வான். இது அல்லாஹ் செய்து கொண்ட ஒரு வாக்குறுதியாகும். (த்)தீனதுல் கபால் என்றால் என்ன என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அது நரக வாசிகளின் வியர்வை அல்லது பிழிவு ஆகும்" (நூல்: முஸ்லிம்)
  பின் வரும் அறிவிப்புகள் புகாரி - முஸ்லிமில் பதிவாகியுள்ளன: நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் (மறுமை நாளில்) கேட்கப்படும்: நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? என்று! அதற்கு அவர்கள் எங்கள் இரட்சகனே! எங்களுக்குத் தண்ணீர் கொடு என்று சொல்வார்கள். நீர் நிலைக்கு நீங்கள் வரக்கூடாதா? என்று! அவர்களிடம் சுட்டிக் காட்டப்படும். பிறகு நரகத்தின் பக்கமாக அவர்கள் ஓட்டிச் செல்லப்படுவார்கள். அது கானல் நீர் போன்றிருக்கும்! ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிப்பிணைந்து கொண்டிருக்கும். அவர்கள் நரகத்தில் ஒருவர் மேல் ஒருவராக வீழ்வார்கள்"
  ஹஸன்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தக் கூட்டத்தாரைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? அவர்கள் எந்த உணவும் உண்ணாமல், எந்த பானமும் அருந்தாமல் ஐம்பது ஆயிரம் ஆண்டுகள் கால் கடுக்க நின்று கொண்டிருப்பார்கள்! இறுதியில் தாகத்தால் அவர்களின் தொண்டை வரண்டு போய் விடும். பசியால் வயிறு பொசுங்கிப் போய்விடும். பிறகு அவர்கள் நரகத்தின் பால் அழைத்துச் செல்லப்படுவார்கள். கொதித்துக் கொண்டிருக்கும் ஊற்றிலிருந்து அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படும். அந்த ஊற்று நன்கு சூடேறிக் கடுமையாகப் பழுத்து விட்டிருக்கும்"
  இப்னு ஜௌஸி (ரஹ்)அவர்கள் நரகத்தை இப்படி வர்ணிக்கிறார்கள்: அது எப்படிப்பட்ட இருப்பிடம் எனில், அதில் வீசியெறிப்பட்டவர்கள் நன்மைகள் அனைத்தை விட்டும் தூரமாக்கப் படுவார்கள்., இன்பத்தை நுகரலாம் எனும் அபிலாசைகளை விட்டும் நற்பாக்கியங்களை விட்டும் தடுக்கப்படுவார்கள். அவர்களுடைய முகத்தின் செழுமை மாற்றப்பட்டு கருமையாக்கப்பட்டிருக்கும்! மலைகளைவிட வலுவான சம்மட்டிகள் கொண்டு அவர்கள் அடிக்கப்படுவார்கள். கடுமையான சீற்றமுடைய மலக்குகள் அந்நரகத்தின் மீது நியமிக்கப்பட்டி ருப்பார்கள்!
  அந்நரக வாசிகளை நீங்கள் பார்க்கவேண்டுமே! கொதிக்கும் நீரில் அவர்கள் மேய்ந்து கொண்டிருப்பார்கள். மேலும் கடுமையான குளிரின் மீது வீசியெறிப்படுவார்கள். அவர்களின் துயரம் நீடித்து நிற்கும். ஒரு போதும் மகிழ்வு இருக்காது. அவர்களின் தங்குமிடம் உறுதி செய்யப்பட்டதாகும். காலாகாலம் - நிரந்தரமாக அங்கு அவர்கள் வீழ்ந்துகிடக்க வேண்டியிருக்கும். கடுமையான சீற்;றமுடைய மலக்குகள் அங்கு நியமிக்கப்பட்டிருப்பார்கள்!
  நரகவாசிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் (நரகின்) வேதனையை விடக் கொடுமையானது! அவர்களின் கைசேதம் துன்பத்தை விடக் கடுமையானது! தங்களின் வாலிபப் பருவத்தை வீணாகக் கழித்தது குறித்து அவர்கள் அழுது கொண்டிருப்பார்கள். அழுது அழுது கண்ணீர் பெருக்கெடுத்த பின்பும் அழுகை நிற்காது., அதிகரிக்கும்! கடுமையான சீற்றம் உடைய மலக்குகள் அந்நரகின் மீது நியமிக்கப்பட்டிருப்பார்கள்!
  அந்தோ! நரகவாசிகளின் நிலைமை பரிதாபத்திற்கு உரியது., படைத்த இறைவனின் கோபத்தினால்! அந்தோ! அவர்களைப் பீடித்திருக்கும் தொல்லை எத்துணை கடுமையானது., தீங்குகளின் பெருக்கத்தினால்! அந்தோ! படைப்பினங்களுக்கு மத்தியில் - சாட்சியாளர்களின் முன்னிலையில் அவர்களுக்கு நேரும் இழிவு எத்துணை பெரியது!
  பதர்களை அள்ளிக் குவிப்பது போன்ற அவர்களின் சம்பாத்தியம் எங்கே? பாவமான காரியங்களில் மேற்கொண்ட அவர்களின் முயற்சிகள் எங்கே? அவையல்லாம் மனத்தைக் குழப்பிய வீணான கனவுகள் போன்றாகி விட்டனவே! - பின்னர் அவர்களின் உடல்கள் சுட்டுப் பொசுக்கப்படும்! சுட்டுப் பொசுக்கப்படும் ஒவ்வொரு முறையும் மீண்டும் பழைய நிலைக்கு அவ்வுடல்கள் மீட்கப்படும்!
  யா அல்லாஹ்! நரகத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! இழிவு மற்றும் அழிவின் இல்லத்திலிருந்து எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! மேலும் சான்றோர்களான பயபக்தியாளர்களின் இல்லத்தில் - உனது அருள் கொண்டு எங்களைத் தங்கச் செய்வாயாக! எங்களுக்கும் எங்கள் பெற்றோர்க்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் - கருணைமிக்கோனே, உனது கருணையால் - மன்னிப்பு வழங்குவாயாக!