2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  நரகம் செல்ல வழிவகுக்கும் காரணிகள் (1)

  நரகம் செல்ல வழிவகுக்கும் காரணிகள் (1)
  ________________________________________
  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் வலிமையும் உறுதியும் நிறைந்தவன். வெளிப்படையானவன். யாரையும் அடக்கி ஆளுபவன். உண்மையைத் தெளிவுபடுத்துபவன்! மெல்லிய முனங்கல் கூட அவனால் கேட்டுக்கொள்ளப்படும். கருவிலுள்ள சிசுவின் அசைவு கூட அவனது பார்வையை விட்டும் மறைந்திடாது. வல்லமை மிக்க மன்னர்கள் கூட அவனது பெருமைக்கு எதிரில் பணிந்தாக வேண்டும். அவனுடைய ஆற்றலுக்கு எதிரில் சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சி விணாகிப்போகும்.
  தவறிழைத்தவர்கள் மீது தனது நாட்டப்படி தீர்ப்பளித்தான். உலகத்தார்களில் யார் யாரை இறைத்தூதர்களாக அவன் தேர்வு செய்தானே -அந்தத் தேர்வு முன்பே நடந்து முடிந்து விட்டது!
  இவர்கள் இடது பக்கத்தார். அவர்கள் வலது பக்கத்தார். இந்த விதி- வழிபாடு செலுத்துவோரின் வழிபாட்டிற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது!
  வலது பக்கத்தார் -இடது பக்கத்தார் என்கிற இந்தப் பங்கீடு இல்லையானால் இறைவழிப் போராளிகள் புரிந்த அறப்போர் வீணாகிப் போயிருக்கும். இறைநிராகரிப்பாளர்கள் யார், விசுவாசிகள் யார் என்றும் சந்தேகத்தில் உழல்வோர் யார், உறுதிப்பாடு உடையோர் யார் என்றும் அறியப்பட்டிருக்காது! இந்தப் பங்கீடு இல்லையானால் பாவிகளை நரகத்தில்போட்டு நிரப்புதல் என்பது இருந்திருக்காது!
  ‘நாம் நாடியிருந்தால் ஆரம்பத்திலேயே ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியைக் காண்பித்திருப்போம். ஆயினும் ஜின்கள்-மனிதர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நிரப்புவேன் என்று கூறியிருந்த எனது வாக்கு நிறைவேறி விட்டது" (32: 13)
  சகோதரரே! அல்லாஹ்வின் நுட்பமான தீர்ப்பாகும் இது! தீர்ப்பளிப்போர் யாவரினும் நேர்த்தியாகத் தீர்ப்பளிப்பவன் அவனே!
  தூய்மையாளனாகிய அந்த இறைவனை- நன்றி செலுத்துவோர் புகழ்வது போல் நான் புகழ்கிறேன். பொறுமையாளர்களுக்குக் கிட்டும் உதவியை அவனிடம் நான் யாசிக்கிறேன். இழிவுபடுத்தக்கூடிய தண்டனையிலிருந்து அவனைக்கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்!
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்று சாட்சி சொல்கிறேன். அவன் அரசன்., உண்மையை உண்மையாக்கிக் காட்டுபவன்! முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார் தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாணயத்திற்கு உரிய வர்கள்!
  நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! இறைமார்க்கத்தைப் பின்பற்றும் முதல் ஆண்மகனாகத் திகழ்ந்த நபித்தோழர் அபூபக்ர் மீதும் - அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல் படுத்துவதில் உறுதியாக இருந்தவரும் யாரிடமும் குழைந்து போகாதவரும் ஆன உமர் மீதும் - நபியவர்களின் இரண்டு பெண் மக்களை (ஒருவர் பின் ஒருவராக) மணம் புரிந்தவரும் சிறந்த கணவராகத் திகழ்ந்தவருமான உஸ்மான் மீதும் -கல்விக்கடலாய் விளங்கிய, நிறைஞானமும் வாதத்திறனும் பெற்றுத் திகழ்ந்த அலீ மீதும் - பரிசுத்தமானவர்களான நபியவர்களின் குடும்பத்தினர் மீதும் - அவர்களைப் பின்பற்றி இறைநெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்தோர் மீதும்- மறுமைநாள் வரையில் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  அன்புச் சகோதரர்களே! அறிந்து கொள்ளுங்கள்: நரகம் செல்ல வழிவகுக்கக்கூடிய காரணிகள் சில உள்ளன. அவற்றை அல்லாஹ் தனது வேதத்தில் விவரித்துள்ளான். தன்னுடைய தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் நாவின் மூலமாகவும் விளக்கியுள்ளான். அவை குறித்து மக்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அவற்றை விட்டு விலகிடவும் வேண்டும் என்பதே நோக்கம்!
  இந்தக் காரணிகள் இரண்டு வகைப்படும்.
  ஒன்று: குஃப்ர் எனும் இறைநிராகரிப்பில் கொண்டு சேர்க்கக்கூடிய காரணிகள். இந்த வகைக் காரணிகள் ஈமான் எனும் இறை விசுவாசத்தில் இருந்து வெளியேற்;றி விடும். நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடக்கக் கட்டாயம் வழிவகுத்து விடும்!
  இரண்டு: பாவத்திலும் தீமையிலும் ஆழ்த்தக்கூடிய காரணிகள். இவை மனிதனை நீதியிலிருந்து வெளியேற்றி பாவத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். இதனால் அவன் நரகம்தான் செல்ல நேரிடும்! ஆனாலும் (முதல்வகைக் காரணிகளைப் போல்) அவன் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க இவை வழிவகுக்காது!
  முதல் வகைக் காரணிகள் வருமாறு:
  ஒன்று : அல்லாஹ்வுக்கு இணை ஏற்படுத்துவதாகும். இது -படைத்துப் பரிபாலிக்கும் தன்மையிலும் வணக்கத்திற்குத் தகுதியாகும் விஷயத்திலும் அல்லாஹ்வின் ஸிஃபாத்து (தன்மைகள்) விஷயத்திலும் இணைக்கடவுளை ஏற்படுத்துவதாகும்.
  அல்லாஹ்வுடன், வேறொரு படைப்பாளன் - கூட்டாகவோ தனியாகவோ - உண்டு என்று ஒருவன் நம்பினால்,
  வணக்கவழிபாடுகளுக்குத் தகுதியான வேறொரு இறைவன் உண்டென்று ஒருவன் நம்பினால் அல்லது அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளையும் வணங்கி வழிபட்டால் அல்லது வழிபாட்டின் ஒருபகுதியை இதர கடவுள்களுக்கும் செலுத்தினால்,
  அல்லாஹ்வின் ஞானமும் ஆற்றலும் மகத்துவமும் பிரத்தியேகமானவை., இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பது போன்று வேறொருவருக்கும் இருப்பதாக ஒருவன் நம்பினால்,
  -இப்படி நம்புகிறவர்கள் - செய்கிறவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் எனும் கொடியகுற்றத்தைப் பெரிய அளவில் செய்தவர்களாகிறார்கள். அதனால் நரகத்தில் நிரந்தரமாகவே வீழ்வதற்கு ஆளாகி விடுகிறார்கள்!
  அல்லாஹ் கூறுகிறான்: "அல்லாஹ்வுடன் இணைக்கடவுளை யார் ஏற்படுத்துகிறானோ அவனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டான். அவனது இருப்பிடம் நரகமாகும். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை" (5 : 72)
  இரண்டு: அல்லாஹ்வை ஏற்க மறுப்பது அல்லது அவனுடைய மலக்குளையோ வேதங்களையோ தூதர்களையோ மறுவுலகத்தையோ அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிகளையோ ஏற்க மறுப்பது! இவற்றுள் ஒன்றை - பொய்ப்படுத்துபவனும் மறுப்பவனும் சந்தேகிப்பவனும் நிராகரிப்பாளன் தான்! அவன் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பான்! அல்லாஹ் கூறுகி றான்:
  யார் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் வேற்றுமையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ, நாங்கள் இறைத்தூதர்களில் சிலரை ஏற்றுக்கொள்வோம்., வேறு சிலரை ஏற்கமாட்டோம் என்று கூறுகிறார்களோ மேலும் இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடைப்பட்ட வழியொன்றை அமைத்திட விரும்புகிறார்களோ அவர்கள் தாம் உண்மையில் அப்பட்டமான நிராகரிப்போர் ஆவர்! இந்திராகரிப்பாளர்களுக்கு இழிவு படுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக் கிறோம்" (4 : 150-151)
  திண்ணமாக, நிராகரிப்பாளர்களை அல்லாஹ் சபித்து விட்டான். மேலும் கொழுந்து விட்டெரியும் நெருப்பையும் அவர்களுக்காகத் தயார் செய்துள்ளான். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். எந்த ஓர் ஆதரவாளரையும் உதவியாளரையும் அவர்கள் பெறமாட்டார்கள். எந்நாளில் அவர்களுடைய முகங்கள் நெருப்பில் புரட்டி எடுக்கப்படுமோ அந்நாளில் அவர்கள் கூறுவார்கள்: அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிந்தோமில்லையே! மேலும் கூறுவார்கள்: எங்கள் இறைவனே! நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும் பெரியார்களுக்கும் கீழ்ப்படிந்து விட்டோமே! அவர்கள் எங்களை நேரிய வழியிலிருந்து பிறழச்செய்து விட்டார்களே! எங்கள் இறைவனே! இவர்களுக்கு இருமடங்கு வேதனை கொடுப்பாயாக! மேலும் இவர்களைக் கடுமையாகச் சபிப்பாயாக" (33 : 64 - 68)
  மூன்றாவது: இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளில் ஏதேனும் ஒன்றை - அது கடமையல்ல என்று மறுப்பது!
  - அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுக் கொள்வதன் கடமையை ஒருவன் மறுத்தால், அல்லது முஹம்மத் நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சியம் சொல்வதன் கடமையை மறுத்தால் அல்லது நபியவர்கள், மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்ட உலகத்தூதர் என்பதை மறுத்தால் அல்லது ஐவேளைத் தொழுகைகள் கடமை என்பதையோ ஜகாத் கடமை என்பதையோ ரமளான் மாத நோன்பு கடமை என்பதையோ ஹஜ் கடமை என்பதையோ ஏற்க மறுத்தால் அவன் காஃபிர் - நிராகரித்தவன் ஆவான். ஏனெனில் அவன், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவையும் பொய்ப்படுத்தியவன் ஆவான்!
  இதுபோல ஷிர்க் - இறைவனுக்கு இணைவைப்பது ஹராம் (விலக்கப்பட்டது) என்பதை ஒருவன் ஏற்க மறுத்தால், அல்லாஹ் மதிப்பளித்துள்ள மனித உயிரைக் கொலை செய்வது ஹராம் என்பதையோ விபச்சாரம் ஹராம் என்பதையோ ஓரினச்சேர்க்கை மூலம் சுகம் அனுபவிப்பது ஹராம் என்பதையோ மது ஹராம் என்பதையோ மேலும் குர்ஆனில் அல்லது நபிமொழியில் ஹராம் என்று வெளிப்படையாக - தெளிவாகக் குறிப்பிட்டவற்றை ஹராம் என்பதையோ ஏற்க மறுத்தால் அவனும் காஃபிர் - நிராகரிப்பாளனே ஆவான்! ஏனெனில் அவன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்க மறுத்தவன் ஆகிறான்.
  ஆனால் ஒருவன் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்ற காரணத்தால் இவற்றை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவனை காஃபிர் என்று சொல்லப்படமாட்டாது., அவனுக்கு அறிவுறை வழங்கி - முறையான அறிவை அவன் பெற்ற பின்பும் இவற்றை அவன் ஏற்க மறுத்தால் - நிராகரித்தால் அவன் காஃபிர் என்று தீர்ப்பளிக்கப்படும்!
  நான்காவது : அல்லாஹ்வையோ அவனுடைய மார்க்கத்தையோ அவனுடைய தூதரையோ பரிகாசம் செய்வது!
  சைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஒருவன் திட்டினால் அவன், வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் காஃபிர்- நிராகரிப்பாளன் ஆவான். இப்படித் திட்டுவது ஹராம் என்பதைக் கொள்கையளவில் அவன் ஏற்றுக் கொண்டிருந்தாலும் சரி அல்லது அலட்சியத்துடன் இருந்தாலும் சரியே! - நம் அறிஞர்கள் சொன்னார்கள் : இப்படிப்பட்டவன் காஃபிர் ஆவான். விளையாட்டாகத் திட்டினாலும் சரியே!- இந்தக் கருத்து முற்றிலும் சரியானதும் உறுதியானதும் ஆகும். - இப்னு தைமிய்யா அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: ஏனைய நபிமார்களைத் திட்டுவதன் சட்டம் என்னவெனில் நம்முடைய முஹம்மத் நபி(ஸல்) அவர்களைத் திட்டுவது போன்று ஹராம் -தடுக்கப்பட்டதேயாகும்! அப்படித் திட்டுபவன் காஃபிர் ஆவான். எனவே குர்ஆனில் கூறப்பட்ட பிரபலமான நபிமார்களில் ஒருவரை பெயர் கூறித் திட்டினால் அல்லது பொதுவாக நபியெனக் கூறப்பட்டவரை ஒருவன் திட்டினால் -அப்படிக் கூறப்படுவது எவ்வாறெனில், நபி ஒருவர் இப்படிச் செய்தார்., இப்படிச் சொன்னார் என ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பது போன்று! -அப்படிச் செய்தவர் அல்லது அப்படிச் சொன்னவர் ஒரு நபிதான் என அறிந்து கொண்டே ஒருவன் அவரைத் திட்டினால் அவன் காஃபிர்தான்!
  ஆனால் நபிமார்கள் அல்லாதவர்களைத் திட்டுவதன் சட்டம் என்னவெனில், திட்டுவதன் நோக்கம் நபியைத் தி;ட்டுவதாக இருந்தால்- எடுத்துக்காட்டாக, ஒருவர் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் திட்டுவது போன்று! ஏனெனில் தோழமை கொண்டவர், யாருடன் தோழமை கொண்டாரோ அவரையே பின்பற்றுகிறார்.
  - நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவர் மீது விபச்சாரக்குற்றம் சுமத்துவது போன்று!- இப்படிச் செய்பவனும் காஃபிர்தான்! ஏனெனில் இது நபி(ஸல்) அவர்களைக் களங்கப்படுத்துவதும் திட்டுவதுமாகும்! அல்லாஹ்குர்ஆனில் கூறுகிறான்:
  ஒழுக்கங்கெட்ட பெண்கள் ஒழுக்கங்கெட்ட ஆண்களுக்குரியவர்கள் ஆவர்" (24 : 26)
  ஆறாவது, அல்லாஹ் இறக்கியருளிய சட்டங்களை விட்டு விட்டு வேறு சட்டத்தைக்கொண்டு தீர்ப்பு வழங்குவதும், அதுவே சத்தியத்திற்கு நெருக்கமானது என்றும் மக்களின் நலனுக்கு உகந்தது அல்லது அது அல்லாஹ்வின் சட்டத்திற்கு நிகரானது என்றும் அதனைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடும் என்றும் கருதியவாறு தீர்ப்பு வழங்குவதும் ஆகும்! அவ்வாறு தீர்ப்பு வழங்குபவன் காஃபிர் ஆவான்!
  அல்லாஹ் இறக்கியருளிய சட்டங்களைக் கொண்டு யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் நிராகரிப்பாளர்கள் ஆவர்" (5:44) இவ்வாறே அல்லாஹ் அல்லாதவர்களின் தீர்ப்பு அல்லாஹ்வின் தீர்ப்பை விடச் சிறந்தது என்றோ அதற்கு நிகரானது என்றோ அதனைக்கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடும் என்றோ ஒருவன் நம்பினால் அவனும் நிராகரிப்பாளனே! மற்ற சட்டங்களைக் கொண்டு அவன் தீர்ப்பு எதுவும் வழங்கவில்லையானாலும் சரி! ஏனெனில் அவன் இந்த இறை வசனத்தைப் பொய்ப்படுத்தியவன் ஆகிறான்:
  (அல்லாஹ்வின் மீது) உறுதியான நம்பிக்கை கொண்ட மக்களைப் பொறுத்தவரை அல்லாஹ்வைவிட அழகிய தீர்ப்பு வழங்குபவன் யார்?" (5:50) அப்படிப்பட்டவன் நிராகரிப்பாளன் என்பதையே பின்வரும் இறைவசனம் வலியுறுத்துகிறது:
  அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப எவர்கள் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் தாம் நிராகரிப்பவர்கள்" (5:44)
  ஏழாவது: நயவஞ்சகம்! உள்ளத்தால் நிராகரித்துக் கொண்டு, தான் ஒரு முஸ்லிம் என சொல்லாலும் செயலாலும் வெளிக்காட்டிக் கொள்வதாகும் இது. அல்லாஹ் கூறுகிறான்:
  திண்ணமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் அடித்தட்டிற்கே செல்வார்கள்., அவர்களுக்கு உதவி செய்வோர் யாரையும் நீர் காணமாட்டீர்" (4 : 145)
  முன்னர் குறிப்பிட்டவர்களை விடவும் இந்த வகையினர் மிகவும் கொடியவாகளாவர். இதனால்தான் நயவஞ்சகர்ளின் தண்டனையும் மிகவும் கடுமையாக உள்ளது. அவர்கள், நரகத்தின் மிக அடித்தட்டிற்கே செல்லக்கூடியயவர்களாவர். இதற்குக் காரணம், நிராகரிப்பு, ஏமாற்றுதல், அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் தூதரையும் பரிகாசம் செய்தல் ஆகிய அனைத்தையும் இவர்களின் நிராகரிப்பு உள்ளடக்கியுள்ளது! இவர்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்:
  இன்னும் அல்லாஹ்வையும் இறுதித் தீர்ப்புநாளையும் நம்புகிறோம் எனக் கூறுவோர் சிலர் மக்களில் உள்ளனர். ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (இப்படிக் கூறி) அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் அவர்கள் ஏமாற்றுகின்றனர். உண்மையில் அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே தவிர வேறில்லை. எனினும் அவர்கள் (இதனை) உணர்வதில்லை. அவர்களது நெஞ்சங்களில் நோய் உள்ளது. அல்லாஹ் (அந்)நோயை அவர்களுக்கு இன்னும் அதிகப்படுத்தினான். மேலும் அவர்கள் பொய் உரைத்துக் கொண்டிருந்த காரணத்தால் கொடிய தண்டனையும் அவர்களுக்கு உண்டு. பூமியில் குழப்பம் விளைவிக்காதீர் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே! என்று கூறுகிறார்கள். எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பவாதிகள். ஆயினும் அவர்கள் உணர்வதில்லை. மேலும் மற்ற மனிதர்கள் ஈமான் - நம்பிக்கை கொண்டதுபோல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் மூடர்கள் நம்பிக்கை கொள்வது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா? என்றே பதில் சொல்கிறார்கள். - எச்சரிக்கை! நிச்சயமாக இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும் அவர்கள் அறிவதில்லை. இறைநம்பிக்கை கொண்டவர்களை அவர்கள் சந்தித்தால் நாங்களும் நம்பிக்கைகொண்டிருக்கிறோம் எனச் சொல்கிறார்கள். தங்களுடைய ஷைத்தான்களுடன் அவர்கள் தனிமையில் இருக்கும் போது நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம்., உண்மையில் நாங்கள் அவர்களைப் பரிகாசம்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்கின்றனர்!-அல்லாஹ் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான். மேலும் அவர்களுக்கு அவகாசம் அளித்துக் கொண்டிருக்கிறான். அவர்களோ தமது வரம்பு மீறிய நடத்தையில் கண்மூடித்தனமாக உழன்றுகொண்டே இருக்கிறார்கள்" (2 : 8-19)
  நயவஞ்சகத்திற்கு அதிகமான அடையாளங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று அல்லாஹ் இறக்கியருளிய (வழிகாட்டலில், வேதத்)தில் சந்தேகம் கொள்வது! தானும் ஒரு விசுவாசியே என மக்களுக்கு வெளிரங்கத்தில் அவன் காண்பித்துக் கொண்டி ருந்தாலும் சரியே! அல்லாஹ் கூறுகிறான்:
  யார் அல்லாஹ் மீதும் மறுமைநாள் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லையோ மேலும் எவருடைய உள்ளங்களில் ஐயம் உள்ளதோ அவர்கள் தாம் (போரில் கலந்து கொள்ளாதிருக்க) உங்களிடம் அனுமதி கேட்கிறார்கள். அத்தகையவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்" (9 :46)
  நயவஞ்சகத்தின் மற்றொரு அடையாளம் அல்லாஹ்வும் ரஸ_லும் அளித்த தீர்ப்பை வெறுப்பது! அல்லாஹ் கூறுகிறான்:
  (நபியே) நீர் இவர்களைப் பார்க்கவில்லையா? உமக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் இறக்கி அருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று சொல்கிறார்கள். எனினும் அவர்கள் தீர்ப்புக்காகத் தமது விவகாரங்களை தாஃகூத்திடம் (ஷைத்தானியத் தலைவர்களிடம்) கொண்டு செல்லவே விரும்புகிறார்கள். ஆனால் தாஃகூத்தை நிராகரிக்குமாறு தான் அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது! – ஷைத்தான் அவர்களை முற்றிலும் வழி கெடுத்து வெகுதூரம் கொண்டுசெல்ல விரும்புகிறான். மேலும் அல்லாஹ் இறக்கி வைத்த (சட்டத்)தின் பக்கமும் தூதரின் பக்கமும் வாருங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வராமல் விலகிச் செல்வதையே நீர் பார்க்கிறீர்" (4:61-62)
  அந்த அடையாளங்களில் மற்றொன்று இஸ்லாம் மேலோங்குவதையும் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதையும் வெறுப்பதும் அவர்களின் தோல்வி குறித்து மகிழ்வதுமாகும். அல்லாஹ் கூறுறான்:
  உமக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால் அது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் - நாங்கள் முன்னரே எங்கள் விசயத்தில் எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம் என்று கூறிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்" (9 : 50)
  அவர்கள் உங்களைச் சந்திக்கும் போது (உங்களுடைய தூதரையும் வேதத்தையும்) நாங்களும் நம்பிக்கை கொண்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கிறார்கள். -அவர்களிம் நீர் கூறுவீராக: நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே சாகுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்" -உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச்செய்கிறது. மேலும் உங்களுக்குத் துன்பம் நேர்ந்த விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது! ஆனால் நீங்கள் நிலை குலையாமலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கு எதிராக) அவர்கள் கையாளுகிற சூழ்ச்சி எந்தப் பயனையும் தரப் போவதில்லை. திண்ணமாக அவர்கள் செய்து கொண்டிருக்கிற அனைத்ததையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டி ருக்கிறான்" (3 : 119-20)
  நயவஞ்சகத்தின் மற்றோர் அடையாளம், முஸ்லிம்களிடையே குழப்பம் விளைவிக்க முயல்வதும் அவர்களுடைய ஒற்றுமையைக் குலைப்பதும் அதில் ஆர்வம் காட்டுவதும் ஆகும். அல்லாஹ் கூறியுள்ளான்:
  (போரில் கலந்து கொள்ள) உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர வேறெதையும் உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள். மேலும் உங்களிடையே கோள் மூட்டிருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் கூற்றைச் செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்" (9:46)
  அதன் இன்னோர் அடையாளம், இஸ்லாத்தின் எதிரிகளையும் நிராகரிப்புக் கொள்கையின் முன்னோடிகளையும் நேசிப்பதும் அவர்களைப் புகழ்வதும் இஸ்லாத்திற்கு எதிரான அவர்களின் கருத்துக்களைப் பரப்புவதுமாகும். அல்லாஹ் கூறியுள்ளான்:
  அல்லாஹ்வின் சினத்திற்குள்ளான ஒரு கூட்டத்தாருடன் தோழமை பாராட்டியவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களும் அல்லர்., அவர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர்! மேலும் அவர்கள் அறிந்துகொண்டே பொய்யான விசயத்தின் மீது சத்தியம் செய்கிறார்கள்" (58 : 14)
  நயவஞ்சகத்தின் பிறிதோர் அடையாளம் முஸ்லிம்களைக் குறித்து புறம் கூறுவதும் இறைவழிபாடுகளில் அவர்களைக் குறை பேசுவதுமாகும். குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
  முஸ்லிம்களில் தாராளமாகத் தர்மம் செய்பவர்களையும் பொருள் வசதியில்லாததால் தங்கள் உழைப்பைத் தானமாகக் கொடுப்பவர்களையும் இந்நயவஞ்சகர்கள் குறை கூறுகிறார்கள். அவர்களை ஏளனமும் செய்கிறார்கள் - அல்லாஹ் இவர்களை ஏளனம் செய்கிறான். நோவினை தரும் வேதனையும் இவர்களுக்கு உண்டு" (9: 79)
  ஆம்! வணக்கவழிபாட்டில் அழுத்தமான முயற்சியுடன் ஈடுபடுபவர்களின் ஈடுபாட்டை முகஸ்துதியென இந்த நயவஞ்சகர்கள் குறை சொல்கிறார்கள். அப்படி ஈடுபட இயலாதவர்களையோ குறைபாடு செய்துவிட்டதாகக் குறைபேசுகிறார்கள்!
  நயவஞ்சகர்களின் மற்றோர் அடையாளம் என்னவெனில், பிரார்த்தனை செய்கிறோம்., வாருங்கள் என்று முஸ்லிம்கள் அழைத்தால் இந்நயவஞ்சகர்கள் அதை ஆணவத்தால் புறக்கணிக்கிறார்கள். அதைக் கேவலமாகக் கருதுகிறார்கள்! அல்லாஹ் அதை குறிப்பிடுகிறான்:
  வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புப்கோரி இறைஞ்சுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால் தங்களது தலையை அவர்கள் திருப்பிக்கொள்வதையும் ஆணவத்தால் வராமல் நின்று விடுவதையும் காண்பீர்" (63 : 5)
  நயவஞ்சகர்களின் மற்றோர் அடையாளம், தொழுகையைப் பாரமாகக் கருதுவதும் சோம்பல் பட்டுக் கொண்டு தொழவராமல் இருப்பதுமாகும். அல்லாஹ் கூறுகிறான் :
  நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால் அவன்தான் அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறான். மேலும் தொழுகையில் அவர்கள் நின்றால்; சோம்பல் பட்டுக்கொண்டே நிற்கிறார்கள். பிறருக்குக் காண்பிக்கவே தொழுகிறார்கள். இன்னும் குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூர்வதில்லை" (4 : 142)
  நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: நயவஞ்கர்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகள் இஷா தொழுகையும் ஃபஜ்ர் தொழுகையும் ஆகும்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  நயவஞ்சகர்களின் மற்றோர் அடையாளம், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் தொல்லை கொடுப்பதாகும். அல்லாஹ் கூறுகிறான்:
  இந்நயவஞ்சகர்களில் சிலர் நபிக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்,,
  யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தொல்லை கொடுக்கிறார்களோ அவர்களை, இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். மேலும் இழிவுபடுத்தும் வேதனையையும் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கிறான். எங்கள் பெற்றோருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நீ பாவமன்னிப்பு வழங்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!