2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  நரகம் செல்ல வழிவகுக்கும் காரணிகள் (2)

  நரகம் செல்ல வழிவகுக்கும் காரணிகள் (2)
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே தனது ஆற்றலால் மனிதர்களை உருவாக்கினான். தனது அறிவு நுட்பத்தின் அதிசயங்களை அவர்களில் வெளிப்படுத்தினான்! தான் மட்டுமே வணக்கத்திற்குரிய இறைவன் என்று தன்னுடைய சான்றுகளின் மூலம் நிரூபித்தான்!
  பாவம் செய்தவனுக்கு - இறைக்கட்டயையை அவன் மீறியதால் தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்தான். பிறகு பாவமன்னிப்புத் தேடுமாறு அவனை அழைத்தான். அவனது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவன் மீது கருணை புரிந்தான்!
  (உலக மாந்தரே!) அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருடைய அழைப்புக்கு பதில் அளியுங்கள்! அவனது சுவனத்தை நோக்கி விரைந்து செல்லுங்கள். உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். தனது அருள்களில் இருந்து இருமடங்கு உங்களுக்கு வழங்குவான்.
  அவனுடைய மாண்புக்குரிய முழுமையான ஆற்றல்களின் பேரில் அவனை புகழ்கிறேன். அவன் அளித்த நல்லுதவிக்காகவும் நிறைவான அருட்கொடைகளுக்காகவும் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறில்லை என்று சாட்சி சொல்கிறேன். அவன் தனித்தவன். வழிபாட்டுக்குரியவன் எனும் தகுதியிலும் படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றலிலும் அவனுக்கு இணையேதுமில்லை!
  முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். இறைவிசுவாசிகளுக்கு சுவனம் கொண்டு நற்செய்தி சொல்பவர்களாகவும் நிராகரிப்பாளர்களுக்கு இறைவனின் நரகத்தைக் கொண்டும் கடுமையான பிடியைக் கொண்டும் எச்சரிக்கை விடுப்பவர்களாகவும் அவர்கள் அனுப்பப்பட்டார்கள்!
  நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அவர்களுடைய பிரதிநிதியாக சமுதாயத்தில் பணியாற்றிய அபூபக்ர் மீதும் - நிராகரிப்பாளர்களின் மீது கடுமையாக நடப்பதிலும் அதிகாரம் செலுத்துவதிலும் பிரபலமானவரான உமர் மீதும் - தமக்கு எற்பட்ட சோதனையில் தமது இலட்சியத்தை நிறைவேற்றியவரான உஸ்மான் மீதும் - நபியவர்களின் சகோதரராகவும் மருமகனாகவும் திகழ்ந்த அலீ மீதும்- நபியவர்களின் குடும்பத்தினர் - தோழர்கள்- அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்தோர் அனைவர் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அனைவர்க்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  அன்புச் சகோதரர்களே! நரகம் புகுவதற்கும் அதில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பதற்கும் வழிவகுக்கக்கூடிய முதல்வகைக் காரணிகளில் பலவற்றை முந்தைய மஜ்லிஸில் விளக்கினோம். இதோ! அல்லாஹ்வின் உதவியால் - இந்த மஜ்லிஸில் இரண்டாம் வகைக் காரணிகள் எவை எனக் கூற இருக்கிறோம். இவை எத்தகைய காரணிகள் எனில் இவற்றைச் செய்பவன் கண்டிப்பாக நரகம் சென்றே தீர வேண்டியது வரும்! ஆயினும் இவை நரகில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பதற்கு வழிவகுக்காது!
  ஒன்று: பெற்றோரை நிந்திப்பது! அவர்கள் தாயும் தந்தையுமாவர். அவர்களை நிந்திப்பதென்பது அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடை, பந்த உறவு போன்ற கடமைகளை நிறுத்திவிடுவதாகும். அல்லது சொல்லால் - செயலால் அவர் களுக்குத் தீங்கிழைப் பதாகும் அல்லாஹ் கூறுகிறான்:
  உமது இறைவன் (ஷரீஅத்தில்) விதி வகுத்துள்ளான்: அல்லாஹ்வைத் தவிர வேறொரு கடவுளை வணங்காதீர்கள்! தாய் தந்தையரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்த நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை சீ என்று கூட கூறாதீர்! மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர்! அவர்களிடம் கண்ணிமான வார்த்தை பேசுவீராக! கருணையோடு பணிவு எனும் இறக்கையினை அவர்களின் முன்னால் தாழ்த்துவீராக! மேலும் இவ்வாறு இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக: என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை அவர்கள் கருணை யுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு அவர்கள் மீது நீ கருணை புரிவாயாக" (17 : 23 - 24)
  (இதனால்தான் மனிதனுக்கு அறிவுரை கூறினோம்) எனக்கு நன்றி செலுத்து. உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்து. திரும்பி வர வேண்டியது என் பக்கமேயாகும்" (31 : 14)
  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். "மூன்று பேருக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராம் - விலக்கப்பட்டதாக்கிவிட்டான். மதுவுக்கு அடிமையானவன்., தம் பெற்றோரை நிந்திப்பவன், தன் மனைவியிடம் பிறர் மானக்கேடாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மானம் இழந்தவன்" (முஸ்னத் அஹ்மத், நஸாஈ)
  இரண்டாவது: உறவை முறித்துக்கொள்வது! மனிதன் தன்னுடைய சொந்தக்காரர்களுடனான உறவை முறித்துக் கொள்வதும் உடல் மற்றும் பொருள் ரீதியில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் தடுத்துக் கொள்வதுமாகும்.
  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முறித்துக் கொள்பவன் சுவனம் புகமாட்டான்" (நூல்: புகாரி, முஸ்லிம்)- ஸ{ஃப்யான் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: இதன் கருத்து பந்த உறவை முறித்துக் கொள்பவன் என்பதாகும்.
  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரத்த பந்தம் எழுந்து அல்லாஹ்வை நோக்கிக் கூறியது: இறைவா! உறவை முறிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுபவனின் இடமாகும் இது! அதற்கு அல்லாஹ் சொன்னான்: ஆம்! எவன் உன்னுடன் இணைந்து வாழ்கிறானோ அவனோடு நான் இணக்கமாகிறேன்., எவன் உன்னைத் துண்டித்து வாழ்கிறானோ அவனை நானும் துண்டித்துக் கொள்கிறேன்! இதை நீ திருப்தி கொள்ளவில்லையா?" அதற்கு அது ஆம்" நான் திருப்தி கொண்டேன்" என்று கூறியது. இறைவன்- இது தான் உனக்குரியதாகும்,. என்றான்! பிறகு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நீங்கள் விரும்பினால் இந்த வசனத்தை ஓதுங்கள்:
  (இறைக்கட்டளை ஏற்று போர்செய்யாமல் நீங்கள் பின்வாங்கிச் சென்றால் பூமியில் மீண்டும் அராஜகம் செய்வீர்கள் என்பதையும் எங்கள் உறவுகளைப் பரஸ்பரம் துண்டித்துக் கொள்வீர்கள் என்பதையும் தவிர வேறெதையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா, என்ன? இப்படிச் செய்பவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களைச் செவிடர்களாயும் குருடர்களாயும் ஆக்கிவிட்டான்" (46: 22 - 23)
  இன்றைய காலத்தில் பெற்றோர் மற்றும் இரத்த பந்துக்களின் உரிமைகளை நிறைவேற்றுவதில் பெரும்பாலான முஸ்லிம்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். சொந்த பந்தத்தின் பிணைப்பைத் துண்டித்துக் கொள்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்கு உரிய விசயமாகும். அவர்களில் சிலர் ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்: எங்களுடைய உறவினர்கள் எங்களுடன் இணைந்து வாழவில்லையே என்று! இந்த வாதம் எவ்விதப் பயனும் அளிக்காது. ஏனெனில் எங்களுடன் இணைந்து வாழ்பவர்களுடன் மட்டும் தான் இணைந்து வாழ் வோம் என்று சொன்னால் அது அல்லாஹ்வுக்காக என்கிற தூய எண்ணம் கொண்டதாக ஆகாது. பதிலுக்கு பதிலாகச் செய்யப்பட்டதாகத் தான் ஆகும்! நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது போன்று!
  "பதிலுக்கு பதில் எனும் வகையில் உறவு முறையை இணைப்பவன் சொந்த பந்தத்தை இணைத்து வாழ்பவன் அல்லன். சொந்த பந்தத்ததைப் பேணுபவன் யார் எனில், உறவினர்கள் உறவைத் துண்டித்துக் கொண்டாலும்கூட அதை இணைத்து வாழ்கிறானே அவன்தான்" (நூல்: புகாரி)
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர் சிலர் உள்ளனர். நான் அவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும் அவர்கள் என்னை விட்டும் துண்டித்து வாழ்கிறார்கள். நான் அவர்களுக்கு உபகாரம் செய்தாலும் அவர்கள் எனக்கு உபத்திரவம்தான் செய்கிறார்கள். நான் அவர்களுடன் சீராக நடந்து கொண்டாலும் அவர்கள் என்னுடன் அபத்தமாகவே நடக்கின்றனர்"
  அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "நீர் சொல்வது போன்றே நடந்து கொள்கிறீர் எனில், அவர்களது முகத்தில் கரி பூசியதுபோல் ஆகிறீர்! நீர் அவ்வாறு தொடர்ந்து நடந்தீராயின் அல்லாஹ்வின் சார்பில் ஓர் உதவியாளர் உம்முடன் இருந்து கொண்டே இருப்பார்" (முஸ்லிம்)
  உறவினர்கள் அவனை விட்டும் விலகிச் செல்வார்களாயின் நல்ல முடிவு நிச்சயம் அவனுக்கே உண்டு. விரைவில் அவர்கள் வருவார்கள். அவன் அவர்களுடன் இணைந்து வாழ்வதுபோல் அவர்களும் அவனுடன் இணைந்து வாழ்வார்கள்., அல்லாஹ் நலனை நாடினால்!
  மூன்று: வட்டி உண்பது! குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
  இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்., அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் வெற்றி பெறக்கூடும்! இறைநிராகரிப்பாளர்களுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! உங்களுக்கு கருணை வழங்கப்படலாம்" (3:130- 133)
  அல்லாஹ்வின் அறிவுரையும் எச்சரிக்கையும் கிடைத்த பிறகு எவன் மீண்டும் வட்டிக்குத் திரும்புகிறானோ அவனுக்கு அல்லாஹ் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறான்., அப்படிப்பட்டவன் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடக்க நேரும் என்று சொல்கிறான்!
  வட்டி உண்பவர்கள் சைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங்கொண்டவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள்! அதற்குக் காரணம், வணிகமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும். உண்மையில் அல்லாஹ் வணிகத்தை ஹலால் - ஆகுமானதாகவும் வட்டியை ஹராம் - தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். ஆகவே எவர் தம் இறைவனிடமிருந்து அறிவுரை வந்த பிறகு (வட்டி வாங்குவதை விட்டு) விலகிக் கொள்கிறாறோ அவர் முன்னர் வாங்கியது வாங்கியது தான். என்றாலும் அவரது விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. ஆனால் இதன் பிறகும் எவரேனும் வட்டிக்குத் திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே. அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்" (2 : 275)
  நான்காவது: அநாதைகளின் சொத்தை உண்பது! அந்த அநாதைகள் ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரியே! அதில் கையாடல் செய்வது!
  அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். அதிவிரைவில் கொழுந்து விட்டெரியும் நரகம் செல்வார்கள்"(4 : 10)
  அநாதைகள் என்றால் பருவ வயதை அடையாத நிலையில் தந்தையை இழந்தவர்கள் ஆவர்!
  ஐந்தாவது: பொய்ச்சாட்சியம் சொல்வது! இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்., நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  பொய்ச்சாட்சியம் சொல்பவன் - (மறுமை நாளில்) அவன் நரகம் சென்றேயாக வேண்டும் என அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை -தனது இடத்தை விட்டும் நகர முடியாது" (இப்னு மாஜா, ஹாகிம்) - இமாம் ஹாகிம் இன்னும் சொன்னார்கள்: இதன் அறிவிப்புத் தொடர் ஆதாரப் பூர்வமானது" (இது ஹாகிம் அவர்களின் கவனக்குறைவாகும். இதன் அறிவிப்புத் தொடர் மிகவும் பலவீனமானதாகும் என்பதே சரி! ஆயினும் இமாம் அஹ்மத் அவர்கள், நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர்களின் தொடர் கொண்டு இதனை அறிவித்து வலிமை சேர்த்துள்ளார்கள்., ஆனால் இப்னு உமர் அவர்களிடம் இருந்து கேட்ட தாபிஈயீன்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை!)
  பொய்ச்சாட்சியம் என்பது, அறியாத ஒரு விசயம் குறித்து அதை நான் அறிந்துள்ளேன் என்றோ அறிந்திருக்கும் ஒரு விசயத்தைக் குறித்து அது எனக்குத் தெரியாது என்றோ சொல்வதாகும். நியாயமான சாட்சியம் என்பது, சாட்சியம் அளிப்பவன் எந்த விசயத்தை அறிந்திருக்கிறானோ அதைக் கொண்டு சாட்சியம் அளிப்பதேயாகும்!
  நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் கேட்டார்கள்: "சூரியனைப் பார்க்கத்தானே செய்கிறாய்? அதற்கு அவர் ‘ஆம்‘ என்று சொன்னார். நபியவர்கள் சொன்னார்கள்: சாட்சியம் சொல்வதாயின் இது போன்ற விசயத்தில் சாட்சியம் சொல்., இல்லையெனில் பேசாமல் இரு"
  ஆறாவது: சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பதாகும். அல்லது வாங்குவதாககும்.
  அப்துல்லாஹ் பின் அமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "லஞ்சம் கொடுப்பவனும் வாங்குபவனும் - இருவரும் நரகம்தான் செல்வர்" (தபரானி)
  அந்நிஹாயா எனும் நூலில் அதன் ஆசிரியர் சொல்கிறார்: "லஞ்சம் கொடுப்பவன் என்றால் ஒரு தீமையில் தனக்கு உதவுவதற்காக கையூட்டு கொடுப்பவன் ஆவான். அதனைப் பெறுபவன் லஞ்சம் வாங்குபவன் ஆவான். ஆனால் தனது உரிமையைப் பெறுவதற்காக அல்லது ஓர் அநீதியைத் தடுப்பதற்காக வழங்கப்படுவது இதன் கீழ் வராது"
  ஏழாவது : பொய்ச் சத்தியமாகும்.
  ஹாரிஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஹஜ்ஜின்போது கல்லெறியும் இரண்டு தூண்களுக்கு இடையே நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள் ளேன்: பொய்ச் சத்தியம் செய்து தன் சகோதரனின் சொத்தை அபகரித்துக் கொண்டவன் (நாளை மறுமையில்) தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்! உங்களில் இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு இதனை அறிவித்து விடுங்கள்" (நூல்: முஸ்னத் அஹ்மத் ஹாகிம்)
  இதற்கு அரபி மொழியில் அல் யமீனுல் ஃகமூஸ் - மூழ்கடிக்கும் சத்தியம் எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இப்படிச் சத்தியம் செய்பவனை, அவனது சத்தியம் பாவத்தில் மூழ்கடிக்கிறது. பிறகு நரகத்தில் மூழ்கடிக்கிறது! அவன் வாதிடும் விசயத்தில் பொய்ச் சத்தியம் செய்து அதன் மூலம் அவனுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டாலும் சரி அல்லது அவன் மறுக்கிற விசயத்தில் அவனது சத்தியத்தைக் கொண்டு அவன் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டாலும் சரி! இரண்டுமே பொய்ச் சத்தியங்கள்தான்!
  எட்டாவது: அறியாமையுடனும் அநீதியுடனும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவது!
  புரைதா பின் ஹ{ஸைப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீதி வழங்குபவர்கள் மூன்று விதமாய் உள்ளனர். ஒருவர் சுவனம் செல்வார். இருவர் நரகம் செல்லக்கூடியவர்களாவர். சுவனம் செல்லக் கூடியவர் சத்தியத்தை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர். எவர் சத்தியத்தை அறிந்தும் அநீதியாகத் தீர்ப்பளித்தாரோ அவர் நரகம் செல்வார். எவர் அறியாமையுடன் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கினாரோ அவரும் நரகம் செல்வார்"(நூல்: அபூ தாவூது, திர்மிதி, இப்னு மாஜா) (புலூகுல் மறாமில் இப்னு ஹஜர் அவர்கள் சொல்கிறார்கள்: இதனை புகாரி, முஸ்லிம் நீங்கலாக மீதி நால்வரும் அறிவித்துள்ளார்கள். ஹாகிம் அவர்கள் இதனை ஸஹீஹ் என்று சொல்லியுள்ளார்கள்.)
  ஒன்பதாவது: தனது பொறுப்பின் கீழ் உள்ளவர்களை ஏமாற்றுவது, அவர்களின் நலனை நாடாதிருப்பது! அவர்களின் நலனுக்கோ தான் ஏற்றுக்;கொண்ட பணிகளுக்கோ இசைவில்லாத காரியங்களை ஒரு பொறுப்பாளர் செய்வது! மஅகல் பின் யஸார்(ரலி) அவர்கள் அறிவிக்கறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  அல்லாஹ் ஒரு மனிதனை சில மக்களின் மீது பொறுப்பாளராக ஆக்குகிறான்., அந்த மனிதன் தன் பொறுப்பின் கீழ் உள்ளவர்களுக்கு மோசடி செய்யக் கூடியவனாகவே மரணம் அடைகிறான் எனில் அல்லாஹ் சுவனத்தை அவன் மீது ஹராம் - விலக்கப்பட்டதாக்கியே தீருவான்" (நூல் புகாரி, முஸ்லிம்)
  ஒரு மனிதன் தன் குடும்பத்தினர் மீது பொறுப்பாளராய் இருப்பதையும் ஓர் அரசன் தன் நாட்டு மக்களுக்குப் பொறுப்பாளராய் இருப்பதையும் ஏனைய பொறுப்பாளர்கள் அனைவரையும் இது உள்ளடக்கும்.
  ஏனெனில் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாகவே இருக்கிறீர்கள். உங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து உங்களிடம் விசாரணை செய்யப்படும். அரசன் ஒரு பொறுப்பாளன். அவனது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து அவனிடம் விசாரணை செய்யப்படும். ஓர் ஆண் தன் குடும்பத்தினர் மீது பொறுப்பாளர்., அவரது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து அவரிடம் விசாரணை செய்யப்படும். ஒரு பெண் தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளர்., அவளது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து அவளிடம் விசாரணை செய்யப்படும். ஒரு பணியாள் தன் எஜமானனின் உடமைகளுக்குப் பொறுப்பாளர். அவனது பொறுப்பில் உள்ளவை குறித்து அவனிடம் விசாரணை செய்யப்படும் -உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பார்களே! உங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து உங்களிடம் விசாரணை செய்யப்படும்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  பத்தாவது: மனிதனுக்கோ பிற உயிர்ப்பிராணிகளுக்கோ படம் வரைவது!
  இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டேன்: உருவப்படம் வரைகிற ஒவ்வொருவருக்கும் நரகம் தான். அவன் தீட்டிய உருவப்படத்துக்குப் பகரமாக ஓர் உயிரை அவன் மீது அல்லாஹ் சாட்டுவான். அது அவனை நரகத்தில் வேதனைப் படுத்திக் கொண்டேயிருக்கும்" (நூல்: முஸ்லிம்)
  ஸஹீஹ{ல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது: "யாராவது உருவப்படம் வரைந்தால் அதிலே அவன் உயிர் ஊதுகிற வரை அல்லாஹ் அவனை வேதனைப்படுத்திக் கொண்டேயிருப்பான்- அதனுள் அவனால் ஒருக்காலும் உயிரை ஊத முடியாது"
  ஆனால் மரங்கள், செடிகொடிகள், பழங்கள் போன்று - அல்லாஹ்வின் படைப்புகளில் வளரும் தன்மை கொண்ட பொருள்களை ஓவியம் தீட்டுவதில் குற்றமில்லை. இது மார்க்க அறிஞர்களில் பெரும்பாலோரின் கருத்தாகும். அறிஞர்களில் வேறு சிலர் இதனையும் தடை செய்துள்ளார்கள். ஏனெனில் அபூ ஹ{ஸைமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய படைப்புகளைப் போன்று படைப்பதற்குப் புறப்பட்டவர்களை விடவும் கொடுமைக்காரர் யார் இருக்க முடியும்? அவர்கள் ஓர் எறும்பைப் படைக்கட்டும் பார்க்கலாம்! அல்லது ஒரு தானியத்தை -ஒரு கோதுமையப் படைக்கட்டும் பார்க்கலாம்" (புகாரி)
  பதினொன்றாவது: ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள நபிமொழியில் கூறப்பட்டதாகும். அதாவது,
  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும் பெரும் கஞ்சனாகவும் ஆணவக்காரனாகவும் உள்ள ஒவ்வொருத்தனும் நரகவாசிதான்" (புகாரி, முஸ்லிம்)
  அல் உதுல்லு: இரக்கமற்ற கொடுமைக்காரன் - அதாவது, கடினமானவனாகவும் வன் நெஞ்சம் கொண்டவனாகவும் இருப்பவன். சத்தியத்திற்கும் பணியமாட்டான். மக்களுக்கும் பணிய மாட்டான்.
  ஜவ்வாழ் - பெரிய கஞ்சன் - அதாவது, எல்லாவற்றையும் தனக்கென ஒதுக்கிக் கொள்பவன். எவருக்கும் எதுவும் கொடுக்க மாட்டான்!
  முஸ்தக்பிர் -ஆணவக்காரன்., அதாவது, சத்தியத்தை ஏற்க மறுப்பவன். மக்களுடன் பணிவுடன் பழகாதவன். அனைவரை விடவும் தானே உயர்ந்தவன் என நினைப்பான். சத்தியத்தை விட தனது கருத்துதான் சரியானது எனக் கருதுவான்!
  பனிரெண்டாவது: உண்ணவும் பருகவும் தங்கம் - வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது! ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி (இதுவும் நரகம் சேர்க்கக் கூடியதே!)
  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிப் பாத்திரங்களில் நீர் அருந்துபவன் யாரோ அவன் தனது வயிற்றில் நரக நெருப்பை ஊற்றியவன் ஆவான்" (அறிவிப்பு: உம்மு ஸல்மா நூல்: பகாரி)
  ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: தங்கம் - வெள்ளிப் பாத்திரங்களில் நீர் அருந்துபவன் யாரோ அவன் தனது வயிற்றினுள் நரக நெருப்பை ஊற்றியவன் ஆவான்"
  சகோதரர்களே! நரகம் செல்ல வழிவகுக்கும் காரணிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். நரகத்தை விட்டும் உங்களைத் தூரமாக்கக்கூடிய அமல்கள் புரியுங்கள்! மறுமை எனும் நிலையான உலகில் வெற்றி அடைவீர்கள்!
  அறிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக இவ்வுலகம் ஒரு சில நாட்களின் சுக வாழ்வு தான். இது விரைவாக மறையக் கூடியது., அழியக்கூடியது! எனவே மரணம் அடையும் வரையில் சத்தியத்தில் நிலைத்திருப்பதற்கு உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்! அல்லாஹ் எவர்களின் மீது அருள் புரிந்தானோ அத்தகைய இறைவிசுவாசிகளுடன் மறுமையில் ஒன்று சேர்ப்பதற்கும் இறைஞ்;சுங்கள்!
  யா அல்லாஹ்! சத்தியத்தின் மீது எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக! அதன் மீதே எங்களை மரணம் அடையச் செய்வாயாக! கருணைமிக்க இறைவனே! உனது கருணையால் எங்களுக்கும் எங்கள் பெற்றோர்க்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!