2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  பாவமீட்சி தேடல்

  பாவமீட்சி தேடல்
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வணக்கத்திற்குரிய இறைவன் அவன் ஒருவனே என்பதற்கு ஒவ்வொரு பொருளில் இருந்தும் ஆதாரத்தை அவன் நிலைநாட்டினான். தன்னுடைய படைப்பினங்களின் மீது தனது நாட்டப்படி அதிகாரத்துடனும் ஆற்றல் கொண்டும் ஆட்சி செலுத்தினான். அவனே இறைபக்தர்களைத் தேர்ந்தெடுத்தான். அமைதியையும் ஈமான் எனும் விசுவாசத்தையும் அவர்களுக்கு வழங்கினான். பாவம் செய்தோர் அனைவருக்கும் தனது சகிப்புத்தன்மை மற்றும் கிருபையினால் மன்னிப்பு வழங்கினான். தனது கட்டளையை மீறியவர்களின் ரிஜ்க் வாழ்வாதாரங்களை அவன் துண்டிக்கவில்லை. இது அவனது கொடையும் கருணையுமாகும். தன்னுடைய கட்டளைகளை வாய்மையுடன் பின்பற்றுபவர்களுக்கு தன்னோடு நெருங்கி வருதல் எனும் தென்றலை வழங்கி மகிழ்வூட்டினான்.
  கணக்குத் தீர்க்கும் (மறுமை) நாளின் கடுமையான துன்பங்கள் குறித்து எச்சரிக்கை செய்தான். இறை திருப்தியை நோக்கி நடைபோடுபவருக்கு அவர் செல்லும் பாதையில் பாதுகாப்பு அளித்தான். இறைநம்பிக்கையாளருக்குக் கண்ணியம் அளித்;தான். அவரது உள்ளத்தில் ஈமான் எனும் நம்பிக்கையைப் பதித்தான். தன் படைப்பினங்களில் சட்டம் பிறப்பித்தான். சிலவற்றைக் கடமையாக்கினான். வேறு சிலவற்றைத் தடுத்தான்! பலவீனப்பட்டு வலுவிழந்த சட்ட விதிகளைத் தனது உதவியால் நிலைப்படுத்தினான். பராமுகத்திலும் மறதியிலும் இருந்தவர்களுக்கு நல்லுரை வழங்கி விழிப்பூட்டினான். பாவம் செய்தவர்களைப் பாவமீட்சி தேடுமாறு அழைத்தான். அவர்களது பாவத்தை மன்னிப்பதற்காக!
  மனிதர்களுடன் ஒப்பாகும் நிலையை விட்டும் உயர்ந்த மாண்பு மிக்க இரட்சகன்! கண்ணியமிக்கவன்., தன்னிறைவு உடையவன்! உணவு, பானத்தின் எத்தேவையும் இல்லாதவன்! மனிதர்கள் தாம் என்றென்றும் அவன் பக்கம் தேவை உடையவர்களாயும் இரவு, பகல் எந்நேரமும் அவனது அருளைப் பெறவேண்டிய நிர்பந்த நிலையிலும் உள்ளனர்.
  அல்லாஹ்வை புகழ்கிறேன். தன் இரட்சனை வணங்கி வழிபடுபவனின் புகழாகும் இது! தன் பாவங்களையும் தவறுகளையும் அவனிடம் எடுத்துச் சொல்லி மன்னிப்புக் கோருபவனின் புகழாகும் இது!
  வணக்கதிற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இல்லை., அவன் தனித்தவன்., அவனுக்கு நிகரில்லை என்று சாட்சி சொல்கிறேன். இது வாய்மையான உள்ளம் உடையவனின் சாட்சியாகும். மேலும் முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சியம் சொல்கிறேன். அவர்கள் இறைக்கட்சியினரில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்!
  நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அவர்களின் உற்ற தோழரான அபூ பக்ர் மீதும், எவர் நடந்து செல்லும் வழியில் சைத்தான் செல்லமாட்டானோ அப்படிப் பட்டவரான உமர் மீதும், போர்க்களத்தில் அல்ல., (வீட்டில் வைத்துக் கொலை செய்யப்பட்டு) ஷஹீத் ஆன உஸ்மான் மீதும், போரில் நபியவர்களுக்குத் துணை நின்ற அலீ மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! நபியவர்களின் குடும்பத் தினர், தோழர்கள் அவர்களின் வழி காட்டலின்படி நேர்வழி பெற்றவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  சகோதரர்களே! அல்லாஹ்விடம் பாவமீட்சி தேடுவது கொண்டும் அவனது அன்பைப் பெறக்கூடிய நற்பணிகள் செய்து அவன் பக்கம் மீளுவதுகொண்டும் ரமளான் மாதத்தை நிறைவுபடுத்துங்கள்! ஏனெனில் மனிதன் என்றால் எவரிடம் சில தவறுகளும் குறைபாடுகளும் இருக்கத்தான் செய்யும்! தவறுகளே செய்யாமல் யாரும் இருக்க முடியாது. ஆதத்தின் மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்தாம்! தவறு செய்பவர்களிலே சிறந்தவர்கள் பாவமன்னிப்புத் தேடுபவர்களே!
  அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் மீளுவதற்கு அல்லாஹ் தன் திருவேதத்திலும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய பொன்மொழிகளிலும் ஆர்வமூட்டியுள்ளார்கள்! அல்லாஹ் கூறுகிறான்:
  மேலும் நீங்கள் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்புங்கள். அப்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அழகான வாழ்வாதாரங்களை வழங்கி இன்புறச் செய்வான். மேலும் சிறப்புக்குரியவர் ஒவ்வொருவருக்கும் அவருடைய சிறப்புக்கேற்ப தன் அருளை வழங்குவான். நீங்கள் புறக்கிணிப்பீர்களாயின் திகிலூட்டக்கூடிய மாபெரும் நாளின் வேதனை உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்! (11 : 3)
  மேலும் கூறுகிறான்:
  (நபியே, இவர்களிடம்) கூறும்: நான் ஒரு மனிதன் தான். உங்களைப் போன்று! வஹி - இறையருட் செய்தியின் மூலம் எனக்கு அறிவிக்கப்படுகிறது: உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான் என்று!. எனவே நீங்கள் அவன் பக்கமே நேராக நிலைகொள்ளுங்கள்! அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்" (41 : 6)
  மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
  இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்" (24 : 31)
  மேலும் கூறுகிறான்:
  இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். தூய்மையான பாவமன்னிப்பாக! விரைவில் அல்லாஹ் உங்கள் தீமைகளை அகற்றவும் செய்யலாம். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் உங்களைப் பிரவேசிக்கவும் செய்யலாம்" (66 : 8)
  மேலும் கூறுகிறான்:
  திண்ணமாக அல்லாஹ் - தீமையிலிருந்து விலகி பாவமன்னிப்புக் கோருபவர்களையும் தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கிறான் (2 : 222)
  பாவமீட்சி பற்றி பேசுகிற இறைவசனங்கள் ஏராளம் உள்ளன. நபிமொழிகள் வருமாறு:
  அகர்ரு பின் யஸார்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:"மனிதர்களே! பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். திண்ணமாக நான் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்புப் கோருகிறேன்" (நூல்: முஸ்லிம்)
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக்கேட்டுள்ளேன்: திண்ணமாக ஒரு நாளில் எழுபது தடவைக்கும் அதிகமாக நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன்" (நூல் : புகாரி)
  அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: அல்லாஹ்வின் ஓர் அடியான் பாவமன்னிப்புக்கோரி அவன் பக்கம் மீளும் போது அது குறித்து அல்லாஹ் அதிக அளவு மகிழ்ச்சியடைபவனாக இருக்கிறான். அது உங்களில் ஒருவர் அடையும் மகிழ்;சியை விட அதிகமாகும். அவர் ஒரு பாலைவனப் பகுதியில் தன் வாகனத்தின் மீது பயணமாகிக் கொண்டிருந்தார். திடீரென அவரை விட்டும் அது காணாமல் போய்விட்டது! அவருக்குத் தேவையான உணவும் பானமும் அதிலேதான் இருந்தன. இனி அந்த வாகனம் கிடைக்கப் போவதில்லை என அவர் நிராசை அடைந்தார். பிறகு ஒரு மரத்தடிக்கு வந்து அதன் நிழலில் ஓய்வாகப் படுத்திருந்தார். தன் வாகனம் கிடைக்குமென்ற நம்பிக்கையே அவருக்கில்லை! இந்த நிலையில் திடீரென அவ்வாகனத்தை அவர் காண்கிறார்., அவர் முன்னால் அது நின்று கொண்டிருக்கிறது! உடனே அதன் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி பொங்கக் கூறினார்: யா அல்லாஹ்! நீ தான் எனது அடிமை., நான் உன் எஜமானன் என்று! - அதிக அளவு மகிழ்ச்சியினால் அவரது பேச்சு தடு மாறியது" (நூல்: முஸ்லிம்)
  அடியான் பாவமீட்சி பெறுவது குறித்து அல்லாஹ் மகிழ்ச்சி அடைவதற்குக் காரணம், மன்னிப்பதையும் பிழை பாறுப்பதையும் அல்லாஹ் விரும்புவதேயாகும். அவனுடைய அடியான் அவனை விட்டும் விரண்டோடிய பிறகு மீண்டும் அவனிடம் திரும்பி வருவதை அவன் பெரிதும் நேசிப்பதேயாகும்.
  அனஸ்(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஆதத்தின் மகனுக்கு (மனிதனுக்கு) ஓர் ஓடை நிறைய தங்கம் இருந்தால் இன்னும் இரண்டு ஓடைகள் நிறைய தங்கம் வேண்டுமென விரும்புகிறான். மண் தான் அவனது வாயை நிரப்பக் கூடியது! ஆனால் பாவமன்னிப்புக் கோருபவர் யாரோ அவரை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான்" (புகாரி, முஸ்லிம்)
  தௌபா -பாவமீட்சி தேடுவதென்பது, அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதை விட்டுவிட்டு கீழ்ப்படிவதன் பக்கம் திரும்புவதாகும். ஏனெனில் அல்லாஹ் ஒருவனே வணக்க வழிபாட்டிற்குத் தகுதியான உண்மையான இறைவன். வணக்கத்திற்குரிய இறைவனின் முன்னிலையில் உள்ளன்புடனும் கண்ணியத்துடனும் கீழடங்கி பணிவைக் கடைப்பிடிப்பதே வணக்க வழிபாட்டின் எதார்த்த நிலை! ஓர் அடியானிடம் அவனுடைய இரட்சகனுக்குக் கீழ்ப்படியாத நிலை முரட்டுப் பிடிவாதம் ஏற்பட்டால் அதிலிருந்து அவன் பாவமன்னிப்புத் தேடுவதென்பது அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவன் முன்னிலையில் அச்சமும் பணிவடக்கமும் கொண்ட ஏழையாக - அவனது வாசலில் நிற்பதாகும்!
  தௌபா - பாவமன்னிப்புத் தேடுவது உடனடியாகச் செய்ய வேண்டிய கடமையாகும். அதைப் பிற்படுத்துவதோ தள்ளிப் போடுவதோ கூடவே கூடாது! ஏனெனில் இது அல்லாஹ்வும் அவனுடய தூதரும் இட்ட கட்டளை! அல்லாஹ் - ரஸ_லின் அனைத்துக் கட்டளைகளும் விரைவாக - உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவையாகும். ஏனெனில் அவற்றைத் தாமதப்படுத்தினால் எதிர்காலத்தில் எத்தகைய சூழ்நிலை அவனுக்கு எற்படுமென்பதை அடியான் அறியமாட்டான். மரணம் திடீரென அவனைத் தழுவிக் கொள்ளலாம்! அப்போது அவனால் பாவமன்னிப்புத் தேடிட இயலாது!
  அது மட்டுமல்ல, பாவம் செய்வதில் பிடிவாதமாக இருப்பது மனத்தைக் கல்லாக்கிவிடும். அல்லாஹ்வை விட்டும் அடியான் தூர விலகிச் செல்லவே அது வழிவகுக்கும். ஈமான் எனும் விசுவாசத்தில் பலவீனத்தையும் அது ஏற்படுத்தும். ஏனெனில் ஈமான்-விசுவாசம் என்பது நன்மைகளினால் அதிகரிக்கக் கூடியதாகவும் தீமைகளினால் குறையக்கூடியதாகவும் உள்ளது.
  பாவத்தை விடாப்படியாகத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் அதிலே பழக்கப்பட்டு அதையே விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ளும் நிலை உருவாகும். ஏனெனில் மனம் ஒரு காரியத்தில் பழகிவிட்டால் அதை விட்டு விலகுவது அதற்குக் கடினம். அதன் பிறகு பாவச்செயலிலிருந்து விடுபடுவது மனிதனுக்குச் சிரமமாகிவிடும். இப்பொழுது எந்தப் பாவத்தில் சிக்கியுள்ளானோ அதைவிடவும் கடுமையான வேறு பல பெரும் பாவங்களின் வாயிலை சைத்தான் அவன் மீது திறந்து விடுவான்!
  இதனால்தான் அறிவில் சிறந்த ஆன்றோரும் சான்றோரும் சொன்னார்கள்: நிச்சயமாக பாவங்கள் குஃப்ர் எனும் இறை நிராகரிப்பின் அஞ்சல் ஆகும். பாவங்களில் சிக்குண்ட மனிதன், ஒவ்வொரு நிலையாகக் கடந்து வந்து இறுதியில் இறை நெறியை விட்டும் முற்றாக வழி சறுகிப்போகிறான்! - ஈடேற்றமும் இலகுவும் வழங்குமாறு இறைவனை இறைஞ்சுவோமாக!
  அல்லாஹ் கட்டளையிட்டுள்ள பாவமன்னிப்பென்பது தூய்மையான பாவமன்னிப்புத் தேடலாகும்., பாவமன்னிப்பிற்குரிய நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும்! அந்த நிபந்தனைகள் ஐந்து.
  முதல் நிபந்தனை, பாவமன்னிப்புக் கோரிக்கை அல்லாஹ்வுக்கென தூய்மையானதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் அன்பு, அவனுக்குக் கண்ணியமளித்தல், அவனது நற்கூலியை ஆதரவு வைத்தல் அவனது தண்டனைக்கு அஞ்சுதல் ஆகியன பாவமன்னிப்புத் தேடுமாறு தூண்டும் காரணிகளாக இருக்க வேண்டும்!
  ஆகவே பாவன்னிப்புத் தேடுவதன் மூலம் உலகியல் ஆதாயத்தை நாடக்கூடாது. மனிதர்களிடத்தில் நெருக்கமான அந்தஸ்தையும் எதிர்பார்க்கக்கூடாது! இவற்றை ஒருவன் நாடினால் அவனது பாவமன்னிப்புக் கோரிக்கை ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் இப்படிப்பட்டவன் அல்லாஹ்வை நோக்கித் திரும்பவில்லை. எந்ந நோக்கத்தைத் தனது மனதில் கொண்டுள்ளானோ அந்த நோக்கத்தின் பக்கமே திரும்புகிறான்.
  இரண்டாவது நிபந்தனை, தான் செய்த பாவத்தைக் குறித்துக் கவலைப்பட்டு மனம் நொந்தவனாக இருக்கவேண்டும். தாம் இதனைச் செய்யாமல் இருந்திருக்கக்கூடாதா என்று ஏக்கம் கொள்ள வேண்டும். எதற்காகவெனில், இத்தகைய மனநோகல் தான் இறைவன் பக்கம் அவனைத் திருப்பச் செய்கிறது. அவனுக்கு முன்னால் பணிவடக்கம் கொள்ளச் செய்கிறது. தீமை செய்யுமாறு தூண்டிய தனது மனத்தின் மீது கோபம் கொள்ளத் தூண்டுகிறது. இப்படிப்பட்ட பாவமன்னிப்புதான் கொள்கைப் பிடிப்புமிக்க மற்றும் உணர்வுப்பூர்வமான பாவ மன்னிப்பாகும்.
  மூன்றாவது நிபந்தனை, உடனே பாவத்திலிருந்து முற்றாக விலகிவிட வேண்டும் என்பதாகும். ஹராமான- விலக்கப்பட்ட செயலைச் செய்வதான பாவமாக இருந்தால் உடனே அதனை விட்டுவிட வேண்டும். கடமை ஒன்றை விட்டு விட்டதான பாவமாக இருந்தால் அது ஜகாத், ஹஜ் போன்று ‘களா’ செய்வது சாத்தியமான கடமையாக இருக்கும் பட்சத்தில், உடனே அதனை நிறைவேற்றிட வேண்டும்.
  பாவத்தை விடாப்பிடியாகச்; செய்து கொண்டு பாவமன்னிப்புத் தேடுவது சரியல்ல! எடுத்துக்காட்டாக, ஒருவன் வட்டியிலிருந்து பாவமீட்சி - தௌபா தேடிவிட்டேன் என்று சொல்கிறான். ஆனால் வட்டிக் கொடுக்கல் - வாங்கலில் தொடர்ந்து ஈடுபடுகிறான் என்றால் அவன் பாவமன்னிப்புத் தேடுவது நிறைவேறாது! மாறாக அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் கேலி செய்வதாகவே அது அமையும்! அல்லாஹ்வை விட்டு மேலும் தூரமாக விலகிச்செல்லும் நிலையைத் தான் அவனுக்கு அது ஏற்படுத்தும்
  அந்தப் பாவம், மக்கள் உரிமை தொடர்பானதாக இருந்தால் அந்த உரிமையை வழங்கி அந்தப் பொறுப்பிலிருந்து விடுபடாத வரை அவனது தௌபா பாவமீட்சி நிறைவேறாது!
  பிறருடைய பொருளைக் கொடுக்க மறுத்தோ அல்லது பறித்தோ ஒருவன் பாவம் செய்திருந்தால் அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்காத வரையில் அவனது பாவமன்னிப்புத் தேடல் நிறைவேறாது. இது அவர் உயிருடன் இருக்கும் பட்சத்தில்! அவர் இறந்துவிட்டாலோ அவருடைய வாரிசுகளிடம் அதனை ஒப்படைக்காத வரையில் அவனுடைய பாவ மன்னிப்புக் கோரிக்கை நிறைவேறாது. அவருக்கு வாரிசுகள் இல்லையெனில் பைத்துல் மால் எனும் முஸ்லிம்களின் பொது நிதியில் அதனை ஒப்படைத்திட வேண்டும்.
  அந்தப்பொருளின் உரிமையாளர் யாரென அறியவில்லை எனில் அவரது பெயரில் அதனைத் தர்மம் செய்திட வேண்டும். அல்லாஹ் அவரை நன்கு அறிவான்.
  ஒரு முஸ்லிமைப் பற்றி புறம் பேசிய பாவமாக இருந்தால் அவரிடம் சென்று அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவது கடமையாகும். அவரைக் குறித்துப் புறம் பேசியதை அவர் அறியாதிருந்தாலோ அது அவருக்குத் தெரிந்து விடுமோ என இவன் அஞ்சினாலோ இப்படிச் செய்ய வேண்டும். இல்லையெனில் அவருக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் எந்தச் சபையில் அவரைக்குறித்து புறம் பேசினானோ அந்தச் சபையில் அவருடைய நற்பண்புகளை எடுத்துரைத்துப் புகழாரம் சூட்டிட வேண்டும். ஏனெனில் நன்மைகள் தீமைகளைக் களையக் கூடியவையாகும்!
  ஒரு பாவத்தில் பிடிவாதமாக இருந்து கொண்டு பிறிதொரு பாவத்திலிருந்து மன்னிப்புத் தேடுவது கூடும்! ஏனெனில் அமல்கள் பல கூறுகளாக உள்ளன. மேலும் ஈமான் எனும் விசுவாசமும் ஏற்றதாழ்வு உடையதாய் உள்ளது! ஆயினும் இப்படிப்பட்டவன் தௌபாவின் நிறைவான தன்மைக்கும் தகுதி பெறமாட்டான். பொதுவாக பாவமன்னிப்புத் தேடக் கூடியவர்களின் தகுதிக்கும் நற்புகழுக்கும் உயர் அந்தஸ்துக்கும் இவன் தகுதி பெறமாட்டான்., எல்லாப் பாவங்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பக்கம் மீளாத வரையில்!
  நான்காவது நிபந்தனை எதிர் காலத்தில் மீண்டும் பாவம் செய்யாதிருக்க உறுதி கொள்வதாகும். ஏனெனில் இதுதான் பாவ மன்னிப்புத் தேடலின் பலனும் அதை மேற்கொள்பவரின் வாய்மைக்கு அடையாளமும் ஆகும்.
  ஒருவன் நான் பாவமன்னிப்புத் தேடிவிட்டேன் என்று கூறுகிறான். ஆனால் என்றாவது ஒரு நாள் மீண்டும் பாவம் செய்ய வேண்டும் எனும் உறுதியுடன் இருக்கிறான். அல்லது பாவத்தில் இருந்து விலகுவதில் தயக்கம் கொள்கிறான் எனில் அவனது பாவமன்னிப்பும் நிறைவேறாது. ஏனெனில் இந்தப் பாவமன்னிப்புத் தேடல் தற்காலிகமானது. இதில் இந்த நபர் பொருத்தமான சூழ்நிலைகளுக்காகக் காத்திருந்து ஏதோ செய்கிறார். அவ்வளவுதான்! பாவம் செய்வதை இவர் வெறுக்கிறார் என்பதையோ அதை விட்டு விட்டு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதன் பக்கம் விரைந்து வருகிறார் என்பதையோ இது காட்டாது.
  ஐந்தாவது நிபந்தனை, தௌபா ஒப்புக்கொள்ளப்படுவதற்குரிய நேரம் முடிவடைவதற்கு முன்பே பாவமன்னிப்புத் தேடுவதாகும். அதற்குப் பிறகு பாவமன்னிப்புத் தேடினால் அது ஒப்புக் கொள்ளப்படமாட்டாது!
  ஒப்புக்கொள்வதற்குரிய நேரம் முடிவடைவது, இரண்டு வகையில் உள்ளது. ஒன்று எல்லோருக்கும் பொதுவானது. இரண்டாவது ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானது.
  எல்லோருக்கும் பொதுவானது என்பது சூரியன் மேற்கில் இருந்து உதிப்பதாகும். சூரியன் மேற்கிலிருந்து உதித்து வந்தால் அப்பொழுது பாவமன்னிப்புத் தேடுவது பயன் தராது. அல்லாஹ் கூறுகிறான் :
  உம் இறைவனின் சான்றுகளில் சில வெளிப்படும் நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதவருக்கும் அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதனுடன் யாதொரு நன்மையும் சம்பாதிக்காதவர்க்கும் அவருடைய நம்பிக்கை எவ்விதப் பயனும் அளிக்காது" (6 : 158)
  சான்றுகளில் சில என்பது சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதாகும். இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.
  அம்ர் பின் ஆஸ்(ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  சூரியன் மேற்கிலிருந்து உதயமாகாத வரையில் தௌபா-பாவ மன்னிப்புக் கோரிக்கை தொடர்ந்து ஒப்புக்கொள்ளப்பட்டு வரும். சூரியன் மேற்கிலிருந்து உதயமாகி விட்டால் ஒவ்வொரு(வரின்) உள்ளத்தின் மீதும் அதில் எது உள்ளதோ அதனுடன் சீல் வைக்கப்பட்டு விடும்! பிறகு மக்களுக்கு அவரவரின் அமல்கள் தான் போதுமானதாக இருக்கும்" - இப்னு கதீர் கூறுகிறார்கள்: "இந்த நபிமொழியின் அறிவிப்புத் தொடர் ஆதாரப்பூர்வமானதே"
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அருளினார்கள் :
  சூரியன் மேற்கிலிருந்து உதயமாகத் தொடங்கும் முன்னர் யார் யாரெல்லாம் பாவமன்னிப்புக் கோருகிறார்களோ அவர்களின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்" (நூல்: முஸ்லிம்)
  ஒவ்வொருவருக்கும் குறிப்பான நேரம் என்பது மரணம் நெருங்கிடும் நேரமாகும். மரணம் நெருங்கிடும்போது மரணத்தைக் கண்ணெதிரில் காணும்போது பாவமன்னிப்புத்தேடினால் அது அவருக்குப் பயனளிக்காது! அவரிடம் இருந்து அது ஒப்புக் கொள்ளப்படவும் மாட்டாது! அல்லாஹ் கூறுகிறான்:
  எவர்கள் தீய செயல்கள் புரிந்த வண்ணம் இருந்து மரணம் நெருங்கும்போது நான் இப்பொழுது மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறுகிறார்களோ அப்படிப்பட்டவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது" (4 : 18)
  அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
  உயிர் மூச்சு இழுத்துக் கொண்டிருக்கும் (சக்ராத்) நேரம் வரும் முன்னர் அடியான் பாவமன்னிப்புத் தேடுவதைத் திண்ணமாக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்" (நூல்: அஹ்மத், திர்மிதி)
  பாவமன்னிப்புத் தேடல் என்பது - அதன் எல்லா நிபந்தனைகளும் ஒன்றிணைந்து சரியாக அமையும்போது அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்கிறான். மேலும் அந்த நபர் எந்தப் பாவத்திலிருந்து மன்னிப்புத் தேடினாரோ அந்தப் பாவத்தை - அது எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் சரி - அல்லாஹ் அழித்துவிடுகிறான். அல்லாஹ் கூறுகிறான்:
  (நபியே,) கூறுவீராக: தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக்கொண்ட என்னுடைய அடிமைகளே! அல்லாஹ்வின் கருணை குறித்து நம்பிக்கை இழந்து விடாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான். அவன் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணையாளனாகவும் இருக்கிறான்" ( 39 : 53 )
  இந்த வசனம் - பாவமன்னிப்புக் கோரித் தங்கள் இரட்சகனின் பக்கம் திரும்பி, முற்றிலும் அவனுக்குக் கீழ்ப் படிந்து வாழக்கூடிய மக்கள் விஷயத்தில் இறங்கியதாகும். அல்லாஹ் கூறுகிறான்:
  ஒருவர் தீய செயல் செய்து கொண்டு அல்லது தனக்குத் தானே அநீதி இழைத்துக் கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்" (4 :110)
  ஆகவே தூய்மையான பாவமன்னிப்புத் தேடலை விரைந்து மேற்கொண்டு உங்கள் இறைவன் பக்கம் மீளுங்கள்., மரணம் திடீரென உங்களைப் பற்றிக் கொள்வதற்கு முன்பு இதைச் செய்து விடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ஆயுளில் அருள் வளம் புரிவான்! அவ்வாறில்லாது திடீரென மரணம் உங்களைப் பற்றிக் கொண்டால் உங்களால் ஈடேற்றம் பெற இயலாது போய்விடும்!
  யா அல்லாஹ்! தூய்மையான மன்னிப்புத் தேடலை மேற்கொள்ள எங்களுக்கு நல்லருள் புரிவாயாக! நாங்கள் முன்னர் செய்த பாவங்களை எல்லாம் அதன் மூலம் களைவாயாக! மேலும் இலகுவானதன் பக்கம் செல்ல எங்களுக்கு வழிவகை செய்வாயாக! கடினமானதை விட்டும் எங்களைத் தூரப்படுத்துவாயாக! எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் பாவமன்னிப்பு வழங்குவாயாக! கருணையாளர்களிலெல்லாம் கருணைமிக்கோனே உனது கருணைகொண்டு!