2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  ரமளானின் கடைசி பத்து நாட்களின் சிறப்பு

  - ரமளானின் கடைசி பத்து நாட்களின் சிறப்பு
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனே மாண்பு, மகத்துவம், நிலைத்திருத்தல், பெருமை, கண்ணியம் ஆகியவற்றில் தனித்துவம் பெற்றுத் திகழ்பவன். ஒரே இறைவன்., ஏகன்., வல்லமை மிக்க அதிபதி. எவரிடத்தும் எத்தேவையும் இல்லாத அரசன். கற்பனையால் கூட நெருங்முடியாத அளவு உயர்ந்தவன். அறிவாலும் சிந்தனையால் கூட அறிந்திட முடியாத அளவு மகத்துவமும் மாண்பும் மிக்கவன். தன்னுடைய அனைத்துப் படைப்புகளை விட்டும் தேவைகள் அற்றவனாய் தன்னிறைவு உடையவனாய்த் திகழ்பவன்! அவனல்லாதார் என்றென்றும் அவனிடம் தேவையுடையவராய் உள்ளனர்!
  தான் நாடியவர்களுக்கு நல்லருள்பாலிப்பவன்! அப்படிப்பட்டவர்கள் அவன் மீது விசுவாசம் கொண்டனர்., நேர்வழியில் நிலைத்து நின்றனர். பிறகு தம்முடைய இறைவனோடு உரையாடும் இன்பத்தைப் பெற்றனர்., நித்திரையின் இன்பத்தைத் துறந்தனர்! ஆனாலும் நல்லவர்களோடு தோழமை கொண்டனர்! இரவுத் தொழுகைக்காகப் படுக்கைகளை விட்டும் எழுகின்றனர். உயர் அந்தஸ்து பெற ஆர்வம் கொள்கின்றனர்.
  இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் இதோ! அவர்கள் ஆன்மீகப் பயணம் புறப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க வேண்டுமே! அங்கே ஒருவர், தனது குற்றங்குறைகளைப் பொறுத்தருளுமாறு இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கிறார். மற்றொருவர் தனது ஆற்றாமையை முறையிட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொருவரோ எதையும் இறைவனிடம் இறைஞ்சாமல் அவனை திக்ர் செய்வதிலேயே ஈடுபட்டிருக்கிறார். மக்கள் எல்லாம் நித்திரையில் மூழ்கியிருக்கும்பொழுது இவர்களை மட்டும் விழித்தெழச் செய்திருக்கும் அந்த இறைவனை நான் துதிக்கிறேன்! மன்னித்துப் பொறுத்தருளிய இறைவன் மிகவும் அருட்பாக்கியம் உடையவன்! அவனே குற்றங்குறைகளை மறைத்து உதவி புரிந்தான். எல்லா மக்கள் மீதும் எல்லா உப காரங்களையும் பொழிந்தான்!
  அவன் பொழிந்த மகத்தான அருட்கொடைகளின் பேரில் அவனை நான் புகழ்கிறேன்., அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்., இஸ்லாம் எனும் அருட்கொடையைப் பாதுகாக்குமாறு அவனிடம் இறைஞ்சுகிறேன்!
  வணக்கதிற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்று சாட்சியம் அளிக்கிறேன். அவன் தனித்தவன்., அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனது உதவியால் யார் கண்ணியம் பெற்றாரோ அவர் வலிமை பெற்றுவிட்டார். எவ்வித அநீதிக்கும் அவர் ஆளாக மாட்டார். அவனுக்கு அடி பணியாமல் ஆணவம் கொண்டவர் பாவங்கள் புரிந்தவர் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகிவிட்டார்.
  மேலும் முஹம்மத் நபி(ஸல்) அல்லாஹ்வின் அடியார், (ஹலால் - ஹராம்) ஆகுமான, விலக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்திய தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன்.
  நபியவர்கள் மீதும் குகையில் சிறந்த பயணத்தோழராய்த் திகழ்ந்த அபூ பக்ர் ஸித்தீக் மீதும் - சீரான கருத்துகளின் பால் வழிகாட்டப்பட்டவரான உமர் மீதும்- துன்பங்களைப் பொறுமையோடு சகித்துக் கொண்டவரும் எதிரிகளின் கரங்களால் சஹாதத் (உயிர்த் தியாகம்) எனும் பெரும் சிறப்புப் பெற்ற வருமான உஸ்மான் மீதும் நபியவர்களுடைய பெரிய தந்தை அபூ தாலிபின் புதல்வர் அலீயின் மீதும் - அனைத்து ஸஹாபாக்கள் மீதும் அவர்களை வாய்மையுடன் பின்பற்றிய தாபிஈன்கள் மீதும் கீழ்வானில் தாரகைகள் மறைந்து கொண்டிருக்கும் காலெமெல்லாம் அல்லாஹ் ஸலவாத் பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  சகோதரர்களே! இப்போது ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. இந்நாட்களில் அதிக நன்மைகளும் நற்கூலிகளும் உள்ளன! இவற்றிற்குப் பற்பல சிறப்புத் தன்மைகளும் உண்டு. அவை பிரபலமானவை., மகத்தானவை.
  அத்தகைய சிறப்புகளில் ஒன்று என்னவெனில், நபி(ஸல்) அவர்கள் இந்நாட்களில் அமல் செய்வதில் அழுத்தமான முயற்சியுடன் ஈடுபடுபவர்களாய் இருந்தார்கள். மற்ற நாட்களைக் காட்டிலும் அதிகமாக!
  ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் (ரமளான்) கடைசி பத்து நாட்களில் அமல் செய்வதில் அழுத்தமான முயற்சியுடன் ஈடுபடுபவர்களாய் இருந்தார்கள். வேறு நாட்களில் இது போன்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்டதில்லை" (நூல்: முஸ்லிம்)
  மேலும் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "(ரமளானின் கடைசி)பத்து வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள்., தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  மேலும் நபி (ஸல்) அவர்கள் இறுதிப் பத்தின் இரவுகளில் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறவர்களாய் இருந்தார்கள். இதன் பொருள், நபி(ஸல்) அவர்கள் தொழுகையிலும் திக்ரிலும் முழுமையாக ஈடுபடுவதற்காகத் தம் மனைவியரை விட்டும் விலகியிருப்பார்கள் என்பதாகும்.
  மேலும் நபி(ஸல்) அவர்கள் இந்த நாட்களில் இரவு முழுவதும் விழித்திருந்து தொழுகையிலும் குர்ஆன் ஒதுவதிலும் திக்ர் செய்வதிலும் ஈடுபாட்டிருப்பார்கள்! அவர்கள் திக்ர் செய்வது உள்ளம், நாவு மற்றும் உறுப்புகளால் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது! நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுகளின் சிறப்புதான். மேலும் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதும் ஒரு காரணமாகும். அது எத்தகைய இரவெனில், அதில் இறைநம்பிக்கையுடனும் மறுமைக் கூலியை எதிர்பார்த்தும் எவர் தொழுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்!
  மேலே சொன்ன நபிமொழியின் வெளிப்படையான கருத்து என்னவெனில், நபி(ஸல்) அவர்கள் ரமளானின் நாட்களில் இரவு முழுவதும் தன் இரட்சகனுக்கு வணக்க வழிபாடுகள் செலுத்துவதில் ஈடுபட்டிருப்பார்கள் அதாவது திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில் தொழுவதில், இவற்றிற்காக தயாராகுவதில் இவை போன்றவற்றில் இரவு முழுவதும் ஈடுபட்டிருப்பார்கள்., ஸஹர் எனும் பின்னிரவு நேரத்தில் உண்பதும் இவற்றில் அடங்கும்.
  இந்த விளக்கத்தின் மூலம் இந்த நபிமொழிக்கும் - நபி(ஸல்) அவர்கள் எந்த இரவிலும் காலைவரை தொழுது கொண்டிருந்ததாக நான் அறியவில்லை என்கிற ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்புக்கும் (நூல்:ஸஹீஹ் முஸ்லிம்) கருத்தொற்றுமை ஏற்படுகிறது! ஏனெனில் கடைசிப் பத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இஹ்யாவுல் லைல் - இரவு முழுவதும் விழித்திருந்து வழிபடுதல் என்பது, தொழுவதைக் கொண்டும் பிற வகை வழிபாடுகளில் ஈடுபடுவதைக் கொண்டும் அமைவதாகும். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள் மறுத்திருப்பது நபியவர்கள் தொழுகையில் மட்டும் ஈடுபட்டு இரவைக் கழித்தார்கள் என்பதைத்தான்! - அல்லாஹ் மிக அறிந்த வன்!
  மேலும் கடைசிப் பத்து நாட்களின் சிறப்பு குறித்து இந்நபி மொழிகள் எடுத்துரைப்பது என்னவெனில், நபி(ஸல்) அவர்கள் இந்த நாட்களின் இரவுகளில் தொழுவதற்காகவும் திக்ர் செய்வதற்கவும் தங்கள் குடும்பத்தினரைத் தூக்கத்திலிருந்து எழுப்புவார்கள் என்பதாகும். அந்த அளவுக்கு பாக்கியமிக்க இந்த இரவுகளை அரிதாகக் கருதுவதிலும் பொருத்தமான வழிபாடுகளை நிறைவேற்றுவதிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார் கள்!
  எனவே இந்த இரவுகள் அல்லாஹ்வின் நற்பாக்கியம் பெற்ற மக்களுக்கு வாழ்நாளின் அரியதொரு அவகாசம். பேறற்கரிய புதயல்! மதிப்புமிக்க இந்த வாய்ப்பினைத் தானும் அடையாமல் தன் குடும்பத்தினரும் அடையாமல் கை நழுவிப்போகச் செய்வது, அறிவுடைய எந்த நம்பிக்கையாளருக்கும் உகந்ததல்ல! இவை ஒருசில குறிப்பிட்ட இரவுகள்தாம்! இந்த இரவுகளில் தன் இறைவன் புறத்திலிருந்து வீசும் சுகந்தங்களில் ஒன்றைச் சில நேரம் மனிதன் பெற்றிடலாம்! அது இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்குப் பெரும் பாக்கியமாக அமைந்து விடும்!
  ஆனால் முஸ்லிம்களின் நிலை அதிகக் கவலைக்குரியதாகவும் பெரிய துர்ப்பாக்கியமாகவும் உள்ளது. அவர்கள் மதிப்புமிக்க இந்த இரவுகளை எவ்விதப் பயனுமின்றி கழித்துக்கொண் டிருப்பதை நீங்கள் காணலாம்! இரவில் வெகுநேரம் வரை கண்விழித்திருந்து வீணான கேளிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். தொழுகையில் நிற்கும் நேரம் வந்துவிட்டால் தூங்கச் சென்று விடுகிறார்கள்! ஏராளமான நன்மைகளை வீணாக்கி விடுகிறார்கள். இந்த வருடம் போய்விட்டால் இனியொரு தடவை அவர்களால் இந்த ரமளானைப் பெறமுடியாமல் போகலாம்! இது சைத்தான் அவர்களை விளையாடி விட்டதன் விளைவாகும். சைத்தான் தனது சூழ்ச்சி வலையில் அவர்களைச் சிக்கவைத்ததனால் அல்லாஹ்வின் வழியை விட்டு அவர்களைத் தடுத்து திசை திருப்பியதனால் நேர்ந்த தீய கதியாகும்!
  அல்லாஹ் கூறுகிறான்: "(ஷைத்தானை நோக்கி) திண்ணமாக என்னுடைய (வாய்மையான) அடியார்கள் மீது உனது அதிகாரம் செல்லுபடியாகாது., ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகிறார்களோ அவர்களின் மீதே தவிர!" (15:42)
  ஓர் அறிவாளி அல்லாஹ்வை விடுத்து சைத்தானை தனது பாதுகாவலனாக - நேசத்திற்குரியவனாக ஆக்கிக் கொள்ளமாட்டான் தன்னோடு அவன் பகைமை கொண்டிருப்பதை அறிந்து கொண்டே! அப்படிச் செய்வது திண்ணமாக அறிவுக்கும் இறைநம்பிக்கைக்கும் முரணானதாகும். அல்லாஹ் கூறுகிறான்:
  நீங்கள் என்னை விடுத்து அவனை (ஷைத்தானை)யும் அவனுடைய சந்ததிகளையும் உங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டீர்களா? அவர்களோ உங்களின் பகைவர்களாய் உள்ளனரே! எத்தனை மோசமானதொரு மாற்றை இந்தக் கொடுமையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்" (18 : 50)
  திண்ணமாக ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால் நீங்கள் அவனை உங்கள் பகைவனாகக் கருதுங்கள். அவன் தன்னைப் பின்பற்றுபவர்களை அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளாய் ஆகிடவேண்டும் என்பதற்காகத்தான்!" (35 : 6)
  இந்த இறுதிப் பத்து நாட்களின் இன்னொரு சிறப்பு என்னவெனில், நபி(ஸல்) அவர்கள் இந்த நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் என்பதாகும். இஃதிகாஃப் என்பது அல்லாஹ்வின் வழிபாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக மஸ்ஜிதில் தங்கிவிடுவதாகும். இப்படிச் செய்வது குர்ஆன் மற்றும் ஹதீஸின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நெறிமுறைகளின் பாற்பட்டது! அல்லாஹ் கூறுகிறான்:
  ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் நிலையில் மனைவியரோடு வீடு கூடாதீர்கள்" (2 : 187)
  மேலும் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நபி யவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். நபியவர்களுடனும் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகும் இருந் தார்கள்.
  அபூ ஸயீத்-அல் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் இந்த (லைலதுல் கத்ர்) இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார்: அந்த இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது என்று! உங்களில் யார் (இந்தக் கடைசி நாட்களில்) இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும்"(முஸ்லிம்)
  ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதம் கடைசி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்து வந்தார்கள். அல்லாஹ், அவர்களை மரணம் அடையச் செய்யும் வரையில்! அவர்களுக்குப் பிறகு அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தார்கள்" (நூல் : புகாரி)
  அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதம் இறுதிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். பிறகு ஓர் ஆண்டில் அவர்கள் இஃதிகாஃப் இருக்கவில்லை. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்" (நூல்: முஸ்னத் அஹ்மத், திர்மிதி, இமாம் திர்மிதி, இதனை ஸஹீஹ் என்றார்கள்)
  ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது: "நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க விரும்பினால் ஸ{ப்ஹ{ தொழுவார்கள். பிறகு தமது இஃதிகாஃப் இடத்திற்குச் செல்வார்கள். ஆயிஷாவும் இஃதிகாஃப் இருக்க நபியவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி அனுமதி அளித்தார்கள். எனவே ஆயிஷாவுக்கென ஒருகூடாரம் அடிக்கப்பட்டது. ஹப்ஸா(ரலி) அவர்கள், தமக்காகவும் அனுமதி வாங்கித் தருமாறு ஆயிஷாவிடம் கேட்க ஆயிஷா அவ்வாறே செய்தார்கள். எனவே ஹப்ஸாவுக்காகவும் கூடாரம் அடிக்கப்பட்டது. ஜைனப்(ரலி) அவர்கள் இதனைக் கண்டபோது தமக்கும் ஒருகூடாரம் அடிக்கச் சொன்னார்கள். அதன்படி அவர்களுக்கும் ஒரு கூடாரம் அடிக்கப்பட்டது. நபி(ஸல்) இந்த கூடாரங்களைக் கண்டபோது - இது என்ன? என்று கேட்டார்கள். - ஆயிஷா, ஹப்ஸா, ஜைனப் ஆகியோரின் கூடாரங்கள் என்று தோழர்கள் பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இதன் மூலம் புண்ணியம் செய்ய நாடுகிறார்களா? இவற்றை அகற்றுங்கள். இனிமேல் நான் இவற்றை காணக்கூடாது!- அந்தக் கூடாரங்கள் அகற்றப்பட்டன! மேலும் நபி(ஸல்) அவர்கள் ரமளானில் இஃதிகாஃபை விட்டு விட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதத்தில் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்: இஃதிகாஃப் இருப்பது சுன்னத்-நபிவழி என்பதில் மாற்றுக் கருத்து எதனையும் மார்க்க அறிஞர்களிடம் நான் அறியவில்லை,,
  இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம் ஒருவன் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் அல்லாஹ்வை வழிபடுவதற்காக இருந்து விடுவதாகும். அவனது கிருபையையும் நற்கூலியையும் லைலத்துல் கத்ர் எனும் மாண்புமிகு இரவையும் அடைந்திடும் பொருட்டு!
  இதனால்தான் இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், தொழுகை தொழுவதில், பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருப்பது அவசியமாகும். மேலும் உலக விவகாரங்களைப் பேசுவது போன்ற தேவையற்ற காரியங்களை விட்டும் விலகி விடவேண்டும். ஆனால் இஃதிகாஃப் இருப்பவர் ஏதேனும் நலனை முன்னிட்டு தன் குடும்பத்தாருடன் அல்லது மற்றவர்களுடன் ஆகுமான பேச்சுகளைக் குறைவாகப் பேசுவதில் குற்றமில்லை.ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸஃபிய்யா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
  ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்: நான் அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் சென்றேன். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு (வீட்டுக்குத்) திரும்புவதற்காக எழுந்தேன். நபி (ஸல்) அவர்களும் (சிறிது தூரம்) என்னுடன் வருவதற்காக எழுந்தார்கள்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  உடலுறவும் அதற்கு முன்னுள்ள காரியங்களான - முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல் போன்றவையும் இஃதிபாஃப் இருப்பவருக்கு ஹராம் - விலக்கப்பட்டவையாகும். அல்லாஹ்: கட்டளை இட்டுள்ளான்:"ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதி காஃப் இருக்கும் நிலையில் மனைவியருடன் வீடு கூடாதீர்கள்" (2: 187)
  ஆனால் இஃதிகாஃப் இருப்பவர் மஸ்ஜிதில் இருந்து வெளியே வருவதெனில் அதில் சிறயதொரு விளக்கம் உள்ளது. அதாவது தலையையோ கால்களையோ வெளியே நீட்டுகிறார் என்றால் அதில் குற்றமில்லை. ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: "நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மஸ்ஜிதில் இருந்து கொண்டு தங்களது தலையை வெளியே நீட்டுவார்கள். அவர்களது தலையை கழுவி விடுவேன். அப்போது நான் மாதவிடாய் உடன் இருந்தேன்" (நூல்: புகாரி)
  மற்றோர் அறிவிப்பில் - "பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்த நபி (ஸல்) அவர்களின் தலைமுடியை ஆயிஷா(ரலி) அவர்கள் சீவி விடுவார்கள். அப்போது ஆயிஷா(ரலி) அவர்கள் மாதவிடாய் உடையவர்களாய் இருந்தார்கள்" - ஆயிஷா(ரலி) அவர்கள் அறையினுள் இருக்கவே அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தங்களது தலையை நீட்டியிருக்கிறார்கள்.
  ஆனால் மஸ்ஜிதை விட்டு வெளியே செல்வதென்றால் அதில்; மூன்று வகை உள்ளன.
  ஒன்று: இயற்கையாக அல்லது ஷரீஅத்தின் அடிப்படையில் முக்கியமான ஒரு காரியத்திற்காக வெளியே செல்வது. மலம் -ஜலம் கழிப்பது, கடமையான உளு, பெருந்துடக்கினாலோ வேறு காரணத்தினாலோ கடமையான குளிப்பு, உண்பது, பருகுவது ஆகியவை போன்று! - மஸ்ஜிதில் இவற்றிற்கு வசதி இல்லை எனில் வெளியே செல்வது கூடும். மஸ்ஜிதில் கழிப்பறையும் குளியலறையும் இருக்கிறது எனில், அங்கு அவர் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியுமெனில் -குளித்துக் கொள்ளவும் முடியும் எனில் மேலும் அவருக்கு உணவும் தண்ணீரும் கொண்டு வருவதற்கு ஒருவர் இருக் கிறார் எனில் அப்போது மஸ்ஜிதைவிட்டு வெளியே செல்வது கூடாது. ஏனெனில் அதற்கு தேவையே இல்லை!
  இரண்டு: கடமையல்லாத ஒரு காரியத்துக்கு வெளியே செல்வதாகும் இது. நோயாளியை நலம் விசாரிப்பது போன்று! மேலும் ஜனாஸாவைச் சென்று பார்ப்பது போன்று! இவற்றிற்காக அவர் வெளியே செல்லக்கூடாது. இஃதிகாஃபை தொடங்கும் போது இதனை ஒரு நிபந்தனையாக அவர் விதித்திருந்தாலே தவிர! எடுத்துக்காட்டாக, அவருடைய உறவினறோ நண்பரோ நோய்வாய்ப்பட்டுள்ளார்., அவரை இவர் நலம் விசாரிக்க விரும்புகிறார். அல்லது அந்த நோயாளி மரணம் அடைந்துவிடுவாரோ என்று அஞ்சுகிறார் எனில் தனது இஃதி காஃபின் தொடக்கத்தில் - அதற்காக வெளியே செல்வதற்கு நிபந்தனை விதித்திருந்தால் வெளியே செல்வதில் குற்றம் இல்லை!
  மூன்று: இஃதிகாஃபுக்கு முரணாக உள்ள காரியத்துக்காக வெளியே செல்வது. விற்பது- வாங்குவது, மனைவியுடன் வீடு கூடுவது, கூடிப்பழகுவது போன்ற காரியங்களுக்காக மஸ்ஜிதை விட்டும் வெளியே செல்வது போன்று! இஃதிகாஃப் இருப்பவர் இவற்றிற்காக வெளியே செல்லக்கூடாது. தொடக்கத்தில் நிபந்தனை விதித்திருந்தாலும் சரி விதிக்காவிட்டாலும் சரியே! இது இஃதிகாஃபுக்கு எதிரானதும் அதன் இலட்சியத்திற்கு முரணானதுமாகும்.
  இந்த கடைசி பத்து நாட்களின் மற்றொரு சிறப்பு யாதெனில், லைலத்துல் கத்ர் எனும் மாண்புமிக்க இரவு இந்நாட்களில் அமைந்திருப்பதாகும். அது ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவு.
  எனவே சகோதரர்களே! இந்நாட்களின் சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். இவற்றை வீணாக்கி விடாதீர்கள். இவற்றின் காலம் மதிப்புமிக்கது. இவற்றின் நன்மை வெளிப்படையானது!
  யா அல்லாஹ்! எங்களது தீன் -இறைமார்க்கம் மற்றும் உலக வாழ்க்கையின் நன்மை எவற்றில் உள்ளதோ அவற்றை அடைவதற்கு எங்களுக்கு நல்லருள் புரிவாயாக! எங்களது இறுதிநிலையை அழகாக்கவாயாக! கருணைமிக்க இறைவா! உனது கருணையால் எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!


  22 வது மஜ்லிஸ் - இறுதிப் பத்தும் லைலத்துல் கத்ரும்
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே, அந்தரங்கமான, பகிரங்கமான எல்லாவற்றையும் அறிபவன். முரடர்களின் முதுகை வல்லமை கொண்டு முறிப்பவன். நீர்த் துளிகளைக் கூட எண்ணிக் கணக்கிடுபவன்., அவை பெருவெள்ளமாகி நதியில் ஓடுகிறது. இரவில் இருள் படரச்செய்பவன்., அதிகாலை வெளிச்சம் அதனை அகற்றிவிடுகிறது! வழிபாடு செய்பவர்களுக்கு ஏராளமாய் நன்மை வழங்குபவன்., நிறைவாகக் கூலி கொடுப்பவன்! கண்களின் கள்ளத்தனத்தையும் நெஞ்சத்தில் மறைந்திருக்கும் இரகசியத்தையும் அறியக்கூடியவன்! எல்லாப் படைப்பினங்களுக்கும் பரவலாக உணவளிப்பவன். மணலில் ஊர்ந்து செல்லும் எறும்புக்கும் கூடுகளில் உள்ள குஞ்சுகளுக்கும் உணவளிக்காமல் அவன் விடவில்லை. அவனே செல்வத்தை வழங்குகிறான். ஏழ்மையைக் கொடுக்கிறான். செழிப்பும் வறுமையும் ஏற்படுவது அவனது ஞானத்தின் அடிப்படையிலேயே!
  படைப்புகளில் சிலவற்றிற்கு வேறு சிலவற்றை விடவும் அவன் சிறப்பளித்தான். கால - நேரங்களுக்கும் இது பொருந்தும். இதோ! லைலதுல் கத்ர் - இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகத் திகழ்கிறது!
  அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழ்கிறேன்., நன்றி செலுத்துகிறேன். இது அவனது உதவியை இன்னும் அதிகம் ஈர்த்து வரக்கூடியதாகும்.
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை., அவன் தனித்தவன்., அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்று சாட்சி சொல்கிறேன். இது வாய்மையான கொள்கையுடையவனின் தூய்மையான சாட்சியமாகும்.
  முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். கை விரல்களிடயே இருந்து தண்ணீர் பீரிட்டது எனும் அற்புதம் அவர்களுடையதே!
  நபியவர்களின் மீதும் - இன்பத்திலும் துன்பத்திலும் அவர்களுடன் தோழமை கொண்டிருந்த அபூபக்ர் மீதும் - இஸ்லாத்தின் பாதுகாப்பு அரணாகத்திகழ்ந்த உமர் மீதும் - குர்ஆனின் ஒரே உச்சரிப்பின் கீழ் மக்களை ஒன்று திரட்டிய உஸ்மான் மீதும் தனியொருவராய் நின்று போரில் எதிரிகளைச் சமாளித்த அலீ மீதும் - நபியவர்களின் குடும்பத்தினர் மீதும் செயலிலும் லட்சியத்திலும் வாய்மையாளர்களாய்த் திகழ்ந்த நபித்தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  அன்புச் சகோதரர்களே! பாக்கியமிக்க இந்தப் பத்து நாட்களில் தான் லைலதுல் கத்ர் எனும் அந்த இரவு உள்ளது. அல்லாஹ் இதனை ஏனைய இரவுகளைக் காட்டிலும் சிறப்பாக்கியுள்ளான். இந்த இரவில் ஏராளமான சிறப்புகளையும் நன்மைகளையும் வழங்கி இந்தச் சமுதாயத்தின் மீது அல்லாஹ் கருணை பொழிந்துள்ளாள். தெளிவான தனது வேதமாகிய குர்ஆனில் இதன் சிறப்பைத் வெகுவாகப் பாராட்டியுள்ளான்!
  இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் நாம் இறக்கி வைத்தோம். ஏனெனில் மக்கனை எச்சரிக்கை செய்ய நாம் நாடியிருந்தோம். அது எத்தகைய இரவு எனில், அதில் தான் உறுதி மிக்க ஒவ்வொரு விவகாரத்திற்கும் தீர்ப்பு பெறப்படுகிறது! இது நம்மிடத்தில் நின்றும் உள்ள கட்டளையின் அடிப்படையிலானது. திண்ணமாக நாம்தான் (தூதரை) அனுப்பக் கூடியவர்களாய் இருந்தோம். இது உம்முடைய இறைவனின் கருணையாகும். திண்ணமாக அவன் அனைத்தையும் கேட்கக் கூடியவனாகவும் அறியக்கூடியவனாகவும் இருக்கிறான். அவனே, வானங்களுக்கும் பூமிக்கும் அவ்விரண்டுக்குமிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதி (என்பதை) உறுதியான நம்பிக்கை உடையவர்களாய் இருந்தால் நீங்கள் (காண்பீர்கள்!) அவனைத் தவிர வணக்கதிற்குரிய இறைவன் வேறுயாரும் இல்லை. அவனே உயிரையும் மரணத்தையும் கொடுக்கிறான். உங்கள் இரட்சகனும் அவனே. முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் மூதா தையர்களின் இரட்சகனும் அவனே!" (44:3-8)
  இந்த இரவை அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அந்த அளவுக்கு இதன் நன்மையும் நற்பாக்கியமும் சிறப்பும் ஏராளம் உள்ளன. இந்த இரவின் பாக்கியம் என்னவெனில், சிறப்புக்குரிய இறைவேதம் குர்ஆன் இந்த இரவில்தான் இறக்கியருளப்பட்டது என்பதாகும்.
  மேலும் இந்த இரவில் உறுதிமிக்க ஒவ்வொரு விவகாரமும் பெறப்படுகிறது என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதாவது, இந்த ஆண்டு முழுவதும் - அல்லாஹ்வின் கட்டளையினால் நிகழவிருக்கும் ரிஜ்க் எனும் வாழ்வாதாரங்கள் வாழ்க்கைத் தவணைகள், நன்மைகள் - தீமைகள் போன்ற அனைத்தும் லௌஹ{ல் மஹ்ஃபூழ் எனும் மூல ஏட்டிலிருந்து பெறப் பட்டு எழுத்தர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன! உறுதிமிக்க ஒவ்வொரு விவகாரம் என்பது அல்லாஹ்வுடைய உறுதிமிக்க கட்டளைகளாகும். எப்படிப்பட்ட உறுதியான கட்டளைகள் எனில், அவற்றில் எவ்வித இடையூறோ குறைபாடோ மூடத்தனமோ வீண்நிலையோ கிடையாது. யாவற்றையும் மிகைத்தவனும் பேரறிவாளனுமாகிய அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப் பட்டவையாகும் அவை!
  மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) லைலத்துல் கத்ர் எனும் மாட்சிமை மிக்க இரவில் இறக்கி வைத்தோம். மாட்சிமைமிக்க அந்த இரவு என்ன என்று உமக்குத் தெரியுமா? மாட்சிமைமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும். அதில் மலக்குகளும் ரூஹ{ம் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்தியவண்ணம் இறங்குகிறார்கள். அந்த இரவு முழுவதும் சாந்திமயமாகத் திகழ்கிறது., வைகரை உதயமாகும் வரை" (97 : 1 - 5)
  (லைலத்துல் கத்ரில் உள்ள) கத்ர் என்பதன் பொருள், சிறப்பு, கண்ணியம்;. அல்லது இறைவன் நிர்ணயித்த விதி - தீர்ப்பு என்பதாகும். ஏனெனில் லைலதுல் கத்ர் இரவு சிறப்பும் மாண்பும் உடையது. மேலும் அந்த ஆண்டு முழுவதும் நிகழவிருக்கும் தன்னுடைய உறுதிமிக்க கட்டளைகளை அல்லாஹ் இந்த லைலத்துல் கத்ர் இரவில் நிர்ணயிக்கிறான்., தீர்ப்பளிக்கிறான்.
  லைலத்துல் கத்ர் ஆயிரம் மாதங்களைவிடவும் சிறந்ததாகும் - அதாவது, சிறப்பு, மாட்சிமை, ஏராளமான நன்மை - நற்கூலி ஆகியவற்றைப் பொறுத்து சிறந்த இரவாகும். இதனால்தான் எவர் லைலதுல் கத்ர் இரவில் ஈமானுடனும் மறுமையின் நற்கூலியை எதிர்பார்த்தும் தொழுகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.
  மலக்குளும் ரூஹ{ம் அதில் இறங்குகிறார்கள் - மலக்குகள் என்போர் அல்லாஹ்வுடைய அடியார்களில் ஒருபிரிவினர்! இரவு பகல் எந்நேரமும் அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவர்கள்.
  அவர்கள் கர்வம் கொண்டு அவனுக்கு இபாதத் - வழிபாடு செய்ய மறுப்பதில்லை., களைத்துப் போவதுமில்லை. இரவு-பகல் எந்நேரமும் அவனைப் புகழ்ந்து துதிபாடிக் கொண்டேயிருக்கிறார்கள்., சோர்வடைவதில்லை!
  அந்த மலக்குகள் லைலத்துல் கத்ர் இரவில் - நன்மைகள், அருட்பாக்கியங்கள், அருட்கொடைகள் ஆகியவற்றுடன் பூமியில் இறங்குகிறார்கள். இங்கு இடம் பெற்றுள்ள ரூஹ் எனும் சொல் ஜப்ரீலை குறிக்கும். அவரது சிறப்பையும் உயர்வையும் கவனித்து அவரது பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  அந்த இரவு முழுவதும் சாந்திமயமாகத் திகழ்கிறது அதாவது அனைத்து விதமான அச்சுறுத்தல்களை விட்டும் இறைநம்பிக்கையாளர்களுக்கு நிம்மதியும் சாந்தியும் அளிக்கக் கூடியதாக இந்த லைலத்துல் கத்ர் இரவு திகழ்கிறது. இதில் ஏராளமான மனிதர்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்., அதன் வேதனையிலிருந்து ஈடேற்றம் அடைகிறார்கள் எனும் அடிப்படையில்!
  வைகரை உதயமாகும் வரை - அதாவது, லைலத்துல் கத்ர் எனும் இரவு வைகரையின் உதயத்துடன் முடிவடைகிறது., இரவு அமல்கள் அத்துடன் முடிவடைந்து விடுவதனால்!
  இந்த அத்தியாயத்தில் லைலத்துல் கத்ரு இரவுக்கு பல்வேறு சிறப்புகள் எடுத்துரைக்கப்படுள்ளன!
  (1) மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடிய -அவர்களின் இம்மை மறுமையின் நற்பேறாகத் திகழ்கிற திருக்குர்ஆனை அல்லாஹ் இந்த இரவில்தான் இறக்கியருளினான்!
  (2) மாட்சிமைமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா? என்று இந்த வசனத்தில் கேள்வி கேட்டு அதன் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் அல்லாஹ் எடுத்துரைக் கிறான்.
  (3) அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு.
  (4)அந்த இரவில் மலக்குகள் இறங்குகிறார்கள். நன்மைகள் அருட்பாக்கியங்கள், கருணைகள் ஆகியவற்றுடன் அது அமைகிறது!
  (5) அந்த இரவு சாந்திமயமாகத் திகழ்கிறது., தண்டனை மற்றும் சோதனையிலிருந்து அதில் அதிக அளவு ஈடேற்றம் கிடைக்கிறது., அடியான் அதில் மேற்கொள்ளும் வழிபாட்டின் விளைவாக!
  (6) இந்த இரவின் சிறப்பு குறித்து எடுத்துரைக்கும் ஓர் அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கியருளி அது மறுமைநாள் வரை ஓதப்பட்டுவருகிறது!
  லைலைத்துல் கத்ரின் மற்றொரு சிறப்பு ஸஹீஹ{ல் புகாரியிலும் ஸஹீஹ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ள நபிமொழியில் கூறப்பட்டிருப்பதாகும்.
  அபூ ஹ{ரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "விசுவாசத்துடனும் மறுமை நன்மையை எதிர்பார்த்தும் எவர் லைலத்துல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன" (நூல்:புகாரி, முஸ்லிம்)
  ஈமானுடன் தொழுவது என்றால் அல்லாஹ்வின் மீதும் இந்த இரவில் தொழக்கூடியவர்களுக்கு அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ள மறுமை நலன்கள் மீதும் நம்பிக்கை கொண்டு என்று பொருள்.
  எதிர்பார்ப்புடன் தொழுவது என்றால் நற்கூலியையும் நன்மையையும் எதிர்பார்த்து என்று பொருள். இந்த இரவை அறிந்தவர்களுக்கும் இந்தச்சிறப்பு கிடைக்கும். அறியாதவர்களுக்கும் கிடைக்கும். ஏனெனில் இந்தக்கூலி கிடைக்கும் விஷயத்தில் இந்த இரவை அறிந்திருக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் நிபந்தனை விதிக்கவில்லை!
  லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் உள்ளது. ஏனெனில் அந்த இரவில் அல்லாஹ் குர்ஆனை இறக்கியருளினான். மேலும் அதை இறக்கியது ரமளான் மாதத்தில்தான் என்றும் அறிவித்துள்ளான்.
  அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்: "திண்ணமாக நாம் அதை லைலத்துல் கத்ர் இரவில் இறக்கியருளினோம்"-வேறோர் இடத்தில், - "ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில்தான் குர்ஆன் இறக்கியருளப்பட்டது"எனக் கூறுகிறான். இவ்விருவசனங்களில் இருந்தும் - லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தில்தான் உள்ளது என்பது தெளிவாகிறது.
  லைலத்துல் கத்ர் இரவு முந்தைய எல்லாச் சமுதாயங்களிடமும் இருந்தது. இந்தச் சமுதாயத்திமும்- மறுமைநாள் வரையிலும் நீடித்திருக்கும். ஏனெனில் அபூ தர்ரு(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
  நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள்., அது ரமளான் மாதத்தில் உள்ளதா? வேறு மாதத்தில் உள்ளதா? என்று! அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்: இல்லை., அது ரமளான் மாதத்தில் தான் உள்ளது.
  பிறகு, நபிமார்கள் வாழும் வரையில் அவர்களுடன் அது இருக்கும். அவர்கள் மரணம் அடைந்து விட்டால் அத்துடன் அந்த இரவும் எடுபட்டுவிடுமா? அல்லது மறுமை நாள் வரை நீடிக்குமா? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் சொன் னார்கள்: இல்லை., அது மறுமை நாள் வரையிலும் நீடிக்கும். (நூல்: முஸ்னத் அஹ்மத், நஸாஈ)
  (இமாம் ஹாகிம்; இதனை அறிவித்துள்ளார்கள். மேலும்சொன்னார்கள்: இது முஸ்லிம் இமாமின் நிபந்தனையின்படி ஸஹீஹ் ஆகும். ஆயினும் புகாரியும் முஸ்லிமும் இதனை அறிவிக்கவில்லை. தஹபி அவர்கள் இதனை ஆமோதித்துள் ளார்கள்.)
  ஆனாலும்(அல்லாஹ்வே மிக அறிந்தவன்) லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பும் கூலியும் இந்தச் சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தம். ஜும்ஆ நாளின் சிறப்பு உள்ளிட்ட சில சிறப்புகள் இந்தச் சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமாக இருப்பதுபோன்று! அல்லாஹ்வுக்கே எல்லாhப் புகழும்!
  ரமளான் மாதத்தில் கடைசிப்பத்து நாட்களில்தான் லைலத் துல் கத்ர் இரவு உள்ளது.ஏனெனில் நபி(ஸல்)அவர்கள் சொன் னார்கள்:
  லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் பிந்திய பத்து நாட்களில் முனைந்து தேடிப்பெறுங்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
  அந்த இரவு, இரட்டைப்படை இரவுகளைவிட ஒற்றைப் படை இரவுகளில் இருப்பதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவை முனைந்து தேடிப்பெறுங்கள். (நூல்: புகாரி)
  அதுவும் -அந்த இரவு கடைசி ஏழுநாட்களில் இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது. ஏனெனில் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: லைலத்துல் கத்ர் இரவு கடைசி ஏழு நாட்களில் இருப்பதாக நபித்தோழர்கள் சிலருக்கு கனவு காண்பித்துக் கொடுக்கப்பட்டது. அது குறித்து நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்கள் அனைவரின் கனவும் கடைசி ஏழு நாட்களில் என ஒத்திருப்பதை நான் காண்கிறேன். எனவே லைலதுல் கத்ர் இரவை முனைந்து தேடிப் பெறுபவர் கடைசி ஏழுநாட்களில் அதை முனைந்து தேடிப் பெற்றுக் கொள்ளட்டும்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  இப்னு உமர்(ரலி)அவர்களின் மற்றோர் அறிவிப்பு ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அதனை (லைலத்துல் கத்ர் இரவை) கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். ஆயினும் உங்களில் ஒருவர் பலவீனம் அடைந்தாலோ இயலாது போனாலோ மீதி எழுநாட்களில் அவர் தோற்றுப் போய்விட வேண்டாம்"
  லைலத்துல் கத்ர் இரவென்பது எல்லா ஆண்டுகளிலும் ஒரு குறிப்பிட்ட இரவுக்கு மட்டும் சொந்தமல்ல., அது மாறிமாறி வந்து கொண்டிருக்கிறது என்பiதே உண்மை! எடுத்துக்காட்டாக, ஒரு ஆண்டில் 27ம் இரவு லைலத்துல் கத்ர் இரவு என்றால் மறுஆண்டு 25ம் இரவில் வரும். இப்படி வருவது அல்லாஹ்வின் நாட்டப்படியும் அவனது அறிவுஞானத்தின் படியும் அமைவதாகும். பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கிறது:
  லைலதுல் கத்ர் இரவை எஞ்சியுள்ள ஒன்பதாவது நாளிலோ எஞ்சியுள்ள ஏழாவது நாளிலோ எஞ்சியுள்ள ஐந்தாவது நாளிலோ தேடுங்கள்! (நூல்: புகாரி)
  ஸஹீஹ{ல் புகாரியின் விரிவுரையான ஃபத்ஹ{ல் பாரி எனும் நூலில் சொல்லியுள்ளார்கள்: மிகையான கருத்து என்ன வெனில், கடைசிப் பத்தில் ஒற்றைப்படையில் லைலதுல் கத்ர் இரவு உள்ளது., அது (ஆண்டுக்கு ஆண்டு) மாறி வருகிறது என்பதாகும்.
  அது எந்த இரவு என்கிற விவரத்தை அல்லாஹ்தன் அடியார்களை விட்டும் மறைத்துவிட்டான். இது ஒருவகையில் அவர்களுக்குச் செய்த கருணையாகும். இதன் நோக்கம் சிறப்புக்குரிய அந்த இரவில் தொழுகை, திக்ர், துஆ ஆகியவற்றின் மூலம் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப்பெறுவதற்காக அவர்கள் அதிக அளவில் அமல்கள் செய்யவேண்டும்., அல்லாஹ்வின் பால் நெருக்கத்தையும் நன்மையையும் அவர்கள் அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகும்.
  அல்லாஹ் இந்த இரவை மறைத்து வைத்ததன் மற்றொரு நோக்கம் அவர்களைச் சோதிக்கவேண்டும் என்பதாகும். அந்த இரவைத் தேடுவதில் வினையமாகவும் ஆர்வத்துடனும் செயல்படுகிறவர் யார்? என்பது தெளிவாகத் தெரிய வேண்டும்! ஒரு பொருளில் ஆர்வம் கொள்பவர் அதைத் தேடுவதில் முனைப்பாக ஈடுபடுவார்., அதனை அடையும் வழியில் களைத்துப் போவதைப் பெரிதுபடுத்தமாட்டார்.
  லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை அடியார்களில் சிலருக்கு அல்லாஹ் வெளிப்படுத்துவான்., அவர்கள் காணக்கூடியதான சில அடையாளங்களின் மூலம்! நபி(ஸல்) அவர்கள் அதன் அடையாளத்தைக் கனவில் கண்டதுபோன்று! அந்த இரவின் அதிகாலையில் தண்ணீரிலும் மண்ணிலும் தாம் ஸ{ஜூது செய்வதாக நபி(ஸல்) அவர்கள் கனவு கண்டார்கள். அவ்வாறே அந்த இரவில் மழை பொழிந்தது! ஃபஜ்ர் தொழுகையில் மழை நீரிலும் மண்ணிலும் அவர்கள் ஸ{ஜூது செய்தார்கள்!
  அன்புச் சகோதரர்களே! லைலத்துல் கத்ர் இரவில் வாசல் திறக்கப்படுகிறது. நேசர்களுக்கு (இறைவன் பால்) நெருக்கம் ஏற்படுத்தப்படுகிறது. பிரார்த்தனைகள் செவியேற்கப்பட்டு பதிலும் அளிக்கப்படுகிறது. இந்த இரவில் அமல் செய்பவர்களுக்கு மகத்தான கூலி எழுதப்படுகிறது. லைலத்துல்கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது! எனவே அதனைத் தேடுவதில் அழுத்தமான முயற்சியை மேற்கொள்ளுங்கள்! இதுதான் தேடுவதற்கான காலம்! அலட்சியத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அலட்சியத்தில் அழிவு உள்ளது!

  மறதி பராமுகம் இழப்பு - என்றே
  கழிந்தது வாழ்நாள்! இப்படிக்
  கழித்த நாட்களெல்லாம்
  அந்தோ!
  வீணாகிப்போனதே!

  ஏன் வீணடித்தேன் வாழ்நாளை? - இதற்கு
  என்ன பதிலை நான் சொல்வேன்?

  நாயனைப் புகழ்ந்து நன்றி செலுத்தும்
  நற்கடமைகளை விட்டும்
  இத்துணை பராமுகம் - எமக்கு
  எங்கிருந்து வந்தது?
  எத்துணை சிறந்த மாதத்தை வழங்கி
  எம்மை அல்லாஹ் சிறப்பித்துள்ளான்!
  கவின்மிகு குர்ஆனை அருளினான்
  கருணைமிக்க நாயன் இம்மாதத்தில்!

  ரமளானுக்கு நிகர் மாதம் வேறெதுவுமில்லை
  ரம்;மியமான கதிரிரவு வேறெங்குமில்லை!

  இதன் நன்மைகளை எடுத்தியம்பும்
  ஏற்றமிகு நபிமொழிகள் ஏராளமுள.

  ஒற்றைப்படை இரவுகளில் - இந்த
  ஒளியிரவைத் தேடுவீரென
  நம்பகமான நபிமொழியை நாமுரைத்தோம்!

  உறுதியுடனிதனை
  இறுதிப் பத்தில் தேடும்
  இறையடியாருக்கே சோபனம்!

  அதிகாலை உதயம் வரை
  எங்கும் அமைதி!
  எங்கும் சாந்தி!
  என்றுரைத்ததே இறைவசனம்!

  தேடிக் கொள்வீர் இவ்விரவை
  சிறந்த புதையல் கிடைத்ததென்றே!
  கோடிக் கணக்கில் விடுதலை பெறுவர்
  கொடிய நரகிலிருந்து இவ்விரவில்!
  ஆயினும் அதனை அவரே அறியார்!

  யா அல்லாஹ்! யார் இம்மாதத்தில் நோன்பு நோற்று லைலத்துல் கத்ர் இரவை அடைந்து ஏராளமான நன்மைகளையும் நற்கூலிகளையும் வென்றார்களோ அவர்களின் குழுவில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக!
  யா அல்லாஹ்! நன்மையின் பக்கம் விரைந்த செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவனத்து மாளிகைகளில் நிம்மதியாகத் தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்ப்பாயாக! எவர்கள் மீது நீ கருணை பொழிந்தாயோ- தீமைகளை விட்டும் எவர்களைக் காத்தாயோ அவர்களின் குழுவில் எங்களைச் சேர்ப்பாயாக!
  யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்தக்கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்யாயாக! வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அனைத்து மானக்கேடான செயல்களை விட்டும் எங்களைத் தூரப்படுத்துவாயாக!
  யா அல்லாஹ்! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடிய, அழகாய் உனக்கு வழிபடும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! மேலும் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களை இணைத்து வைப்பாயாக! இம்மையிலும் எங்களுக்கு நன்மை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மை வழங்குவாயாக! மேலும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக! கருணைமிக்க இறைவனே! உனது கருணை கொண்டு - எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!