2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  ஜகாத் பெறத் தகுதியானவர்கள்;

  ஜகாத் பெறத் தகுதியானவர்கள்;
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தாழ்த்தியதை உயர்த்துபவர் யாருமில்லை.,அவன் உயர்த்தியதைத் தாழ்த்துபவர் யாருமில்லை! அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமி;ல்லை., கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை! அவன் சேர்த்து வைத்த உறவை துண்டிப்பவர் யாருமில்லை., அவன் துண்டித்த உறவைச் சேர்த்துவைப்பவர் யாருமில்லை!
  அல்லாஹ்வைத் தூயவன் என்று நான் துதிக்கின்றேன். திட்டமிட்டுச் செயல்படுத்தும் மகத்தான ஆற்றல்கொண்ட, தத்துவ ஞானம் உடைய, கிருபையுடைய இறைவன் அவன்! அவனது தத்துவத்தின் அடிப்படையிலேயே தீங்கு நிகழ்ந்தது. அவனது கிருபையைக் கொண்டே பயன் விளைந்தது. அவனுடைய அனைத்துச் செயல்களுக்காகவும் அவனை புகழ்கிறேன்! அவனுடைய விரிவான அருட்கொடைகளின் பேரில் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்!
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்று சாட்சியம் அளிக்;கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணைதுணை இல்லை. தான் வகுத்த ஷரீஅத் - சட்டநெறிகளை விவேகப்படுத்தி உறுதிப்படுத்தினான். தான் படைத்த படைப்புகளை நூதனமாக்கினான்!
  முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும்சாட்சியம் அளிக்கிறேன்! குஃப்ர் எனும் இறைநிராகரிப்புப் போக்கு வளர்ந்துமேலோங்கி இருந்தபோது அல்லாஹ் அவர்களைத் தூதராக அனுப்பினான். அதன் மீது நபியவர்கள் விரைந்து தாக்குதல் தொடுத்து உயரத்தில் இருந்து அதனைக் கீழிறக்கி உச்சியில் அறைந்தார்கள்! சூழ்ந்து வந்த அதன் தீமையைச் சிதறடித்தார்கள்!
  நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! இஸ்லாத்தை விட்டும் வெளியேறுதல் நிகழ்ந்த நாளில் வீர் கொண்டெழுந்து செயல்பட்ட நபித்தோழர் அபூபக்ர் மீதும் - எவரைக் கொண்டு இஸ்லாம் கண்ணியமும் பாதுகாப்பும் பெற் றதோ அப்படிப்பட்ட உமர் மீதும் - அநியாயமாகக் கொல்லப்பட்ட போதும் சத்தியத்திற்கு முரண்பாடான எந்தச் செயலும் செய்யாத உஸ்மான் மீதும் - குஃப்ர் எனும் நிராகரிப்பு போக்கின் மீது ஜிஹாதின் மூலம் தாக்குதல் தொடுத்து வீழ்த்திய அலீ மீதும் - நபியவர்களின் குடும்பத்தினர் மீதும் தோழர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக., தொழுது வழிபடு வோர் ஸ{ஜூதும் ருகூவும் செய்து கொண்டிருக்கும் காலம் எல்லாம்! - அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  அன்புச் சகோதரர்களே! அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
  "'இந்த (ஜகாத் எனும்)தர்மங்கள்- வறியவர்கள், ஏழை எளியவர்கள், இவற்றை வசூலிக்கவும் பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், இதயங்கள் இணைக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கும் அடிமைகளை விடுவிப்பதற்கும் கடனாளிகளுக்கும் இறைவழியில் போர் செய்கிறவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியனவாகும். இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கடமை. மேலும் அல்லாஹ்யாவற்றையும் அறிந்தவன். நுண்ணறிவாளன்"" (9 : 60)
  இந்த வசனத்தில், ஜகாத் யார் யாருக்குக் கொடுக்க வேண்டும்., அதைப் பெறத் தகுதியானவர்கள் யார் யார் என்பதை அல்லாஹ் விவரித்துள்ளான். இது அவனது ஞானம், விவேகம், நீதி மற்றும் அவனது கருணை ஆகியவற்றின் தேட்டத்திற்கு ஏற்ப அமைந்ததாகும்.
  இவர்கள் எட்டுப் பிரிவினர்., இவர்களுக்கு மட்டுமே ஜகாத் வழங்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதனை இவர்களுக்கு வழங்குவது இன்றியமையாக் கடமை என விளக்கியுள்ளான். இந்தப் பங்கீடு அல்லாஹ்வின் ஞானம் மற்றும் விவேகம் ஆகியவற்றில் இருந்து பிறந்ததாகும். எனவே இந்த எட்டுப் பிரிவினரை விடுத்து மற்றவர்களுக்கு ஜகாத் கொடுப்பது கூடாது! ஏனெனில் தன் படைப்பினமாகிய மனிதர்களின் நலன்களை அல்லாஹ்வே மிக அறிந்தவன். எந்தெந்தப் பொருளை எங்கெங்கு வைக்க வேண்டும் எனும் நியதியில் அவன் மிகவும் உறுதியானவன்!
  "அல்லாஹ்வை விட நல்ல தீர்ப்புவழங்கக்கூடியவன் யார்? (அவன்மீது) உறுதியான நம்பிக்கை உள்ள மக்களுக்கு! (5:50)
   முதல் இரண்டு பிரிவினர்: ஃபுகரா (வறியவர்கள்) மஸா கீன் (ஏழை எளியவர்கள்)
  இவர்கள் தங்களுடையவும் தங்கள் குடும்பத்தினருடையவும் அடிப்;படைத் தேவைகளை நிறைவு செய்யக்கூடப் போதிய வசதியில்லாதவர்கள். ரொக்கப் பணமோ, நிரந்தர ஊதியமோ, நிலையான தொழிலோ, போதிய அளவு வருமானமோ இல்லாதவர்கள்! செலவுக்குப் பணம் கொடுத்து உதவக் கடமைப்பட்டவர்கள் யாருமே இல்லாதவர்கள். இத்தகைய மக்கள், பிறரின் உதவியை எதிர்பார்த்தவர்களாய் உள்ளனர்!
  மார்க்க அறிஞர்கள் கூறுவர்: இவர்களுக்கு ஜகாத் வழங்கிட வேண்டும். இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தாருக்கும் ஓராண்டுக்குப் போதுமான பண உதவி செய்ய வேண்டும். மறுதடவை ஜகாத்தின் தவணை வரும் வரை போதுமான உதவி அளித்திடவேண்டும். திருமணம் செய்யும் நாட்டமும் தேவையும் உள்ள ஓர் ஏழைக்கு - திருமணத்திற்குப் போதுமான பணம் அளித்திட வேண்டும். ஏழைமாணவருக்கு - தேவையான நூல்கள் வாங்கிக் கொள்ள ஜகாத் வழங்கிட வேண்டும். ஒருவர் தனக்கும் தன் குடும்பத்திற்கும் போதுமாகாத வகையில் ஊதியம் பெறுகிறார் எனில் அவருடையவும் அவரது குடும்பத்தாருடையவும் பற்றாக்குறையை நிறைவேற்றக்கூடிய அளவில் ஜகாத் வழங்கிட வேண்டும். ஏனெனில் இவரும் தேவை உடையவரே ஆவார்!
  ஆனால் போதுமான வசதி வாய்ப்பு உடையவருக்கு ஜகாத் கொடுக்கக் கூடாது. தனக்கும் ஜகாத் வேண்டுமென அவர் கேட்டாலும் சரியே! மாறாக அவருக்கு அறிவுரை கூறுவது நமது கடமை. அவருக்குக் கூடாத ஒன்றை அவர் கேட்பது குறித்து அவரை எச்சரிக்கை செய்வதும் நமது கடமை!
  அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  உங்களில் ஒருவர் தொடர்ந்து யாசகம் கேட்டுக் கொண்டே இருந்தால் இறுதியில் முகத்தில் சதையின்றி அலங்கோலமான நிலையில்தான் அல்லாஹ்வை அவர் சந்திப்பார். (நூல்: புகாரி, முஸ்லிம்)
  அபூஹ{ரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அதிகப்படுத்திக் கொள்வதற்காக யார் மக்களின் பணத்தை யாசிக்கிறாரோ அவர் நெருப்புக் கனலைத் தான் யாசிக்கிறார். எனவே குறைத்துக் கொள்வதோ அதிகமாக்கிக் கொள்வதோ அவர் விருப்பம் (நூல்: முஸ்லிம்)
  ஹகீம் பின் ஹிஸாம்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: "திண்ணமாகஇந்த உலகச் செல்வம் பசுமையானது., இனிமையானது! எவர் அதனைத் தாராள மனத்துடன் பெற்றாரோ அவருக்கு அதில் பரகத் - அபிவிருத்தி அளிக்கப்படுகிறது! யார் அதனைப் பேராவலுடன் பெற்றாரோ அவருக்கு அதில் பரகத் அளிக்கப்படுவதில்லை! அவர் உணவு உட்கொண்டும் பசிதீராத மனிதனைப் போல் ஆகிவிடுகிறார். (வழங்கிட) உயர்ந்த கைதான் (வாங் கிடத்) தாழ்ந்த கையை விடச் சிறந்தது. (நூல்:புகாரி, முஸ்லிம்)
  அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
  "ஓர் அடியான் யாசித்தல் எனும் வாசலைத் திறப்பானாகில் அல்லாஹ் அவன் மீது ஏழ்மை எனும் வாசலைத் திறந்து விடுகிறான். (நூல் : முஸ்னத் அஹ்மத்)
  ஒரு மனிதர் ஜகாத் வேண்டுமெனக் கேட்கிறார். அவர் வசதியானவர் என்பதற்கான அறிகுறி அவரிடம் உள்ளது., ஆனாலும் அவருடைய நிலைமை சரியாகத் தெரியவில்லை எனில் அவருக்கு ஜகாத் கொடுப்பது கூடும். அத்துடன் - இந்த ஜகாத்தில் செல்வந்தர்களுக்கோ சம்பாதிக்க சக்தியுள்ளவனுக்கோ எந்தப் பங்கும் இல்லை என்பதை அவருக்கு அறிவித்திட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். ஜகாத் வேண்டுமெனக் கேட்டார்கள். நபி யவர்கள் அவ்விருவரையும் ஏற இறங்கப் பார்த்தார்கள். அந்த இருவரும் திடகாத்திரமாக இருக்கக் கண்டார்கள். பிறகு சொன்னார்கள்: நீங்கள் விரும்பினால் உங்களுக்கு ஜகாத் தருகிறேன். ஆனால்; செல்வந்தனுக்கோ சம்பாதிக்க சக்தியுள்ளவனுக்கோ எந்தப் பங்கும் இதில் இல்லை,, (நூல்: அஹ்மத், அபூ தாவூத், நஸாஈ)
   மூன்றாவது பிரிவினர் ஜகாத்துறை ஊழியர்கள்! இவர்கள் ஜகாத் கடமையானவர்களிடம் இருந்து ஜகாத்தை வசூலித்துப் பாதுகாத்து விநியோகிப்பதற்காக ஆட்சியாளர்களால் நியமிக்கப் பட்டவர்கள். இந்த ஊழியர்களுக்காக அவர்களின் பணிக்கேற்ப ஜகாத்திலிருந்து வழங்கிட வேண்டும். இவர்கள் வசதியுடைய வர்களாக இருந்தாலும் சரியே!
  ஆனால் ஜகாத்தை விநியோகிப்பதற்காக ஒரு தனிநபரால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஜகாத் துறை ஊழியர்கள் அல்லர். எனவே இவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதால் ஜகாத் பணம் பெற இவர்கள் தகுதி பெற மாட்டார்கள். ஆனால் ஜகாத்தை முறையாக விநியோகிக்கும் பணியில் நம்பிக்கையுடனும் நன்முயற்சியுடனும் ஊதியமின்றியும் இவர்கள் ஈடுபட்டால் அதற்கான மறுமைக் கூலியில் இவர்களுக்கும் பங்குண்டு. அபூ மூஸா -அல் அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
  நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: "முஸ்லிமான - நம்பிக்கைக்குரிய கருவூலக்காவலர் யாரெனில், அவர் தனக்கு இடப்பட்ட கட்டளையைச் செயல்படுத்துவார். (மற்றோர் அறிவிப் பில்) எவ்வளவு வழங்கவேண்டும் எனக் கட்டளையிடப்பட்டதோ அதனை நிறைவாக -முழு மன திருப்தியோடு வழங்கி விடுவார். தர்மம் கொடுத்தவர் யாருக்குக் கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிட்டாரோ அவருக்கு அதனைக் கொடுத்து விடுவார்! (நூல்: புகாரி)
  ஊதியமின்றி விநியோகிக்க அவர்கள் விரும்பவில்லை எனில் ஜகாத் கொடுப்பவர் தனது பணத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும்., ஜகாத் பணத்தில் இருந்தல்ல!
   நான்காவது பிரிவினர்., இதயம் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள்! இவர்கள் ஈமானில் - இறைவிசுவாசத்தில் பலவீனமானவர்கள் அல்லது தீமைவிளைவிப்பவர் என அஞ்சப்படுகிறவர்கள். எனவே இவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத் தும் அளவு ஜகாத்தில் இருந்து இவர்களுக்குக் கொடுத்திட வேண்டும். இவர்களுக்குக் கொடுப்பதன் மூலமே தவிர இவர்களின் தீமை விலகாது என்றிருக்கும் பட்சத்தில்!
   ஐந்தாவது பிரிவினர் அடிமைகள்! இவர்களுக்கு விடுதலை சாஸனம் எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கும். இவர்கள் தங்கள் எஜமானரிடம் பணம் கொடுத்துத் தங்களை விடுவிப்பவர்களாவர். இவர்களின் எஜமானர்களுக்கச் செலுத்துகிற பணத்தை ஜகாத்திலிருந்து இவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். அந்தப்பணத்தை எஜமானர்களுக்குக் கொடுத்துத் தங்களை அடிமைத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்வார்கள்!
  இதேபோன்று ஓர் அடிமையை விலைக்கு வாங்கி அவருக்கு விடுதலை அளிப்பதும் கூடும். ஜகாத் பணத்தை வழங்கி ஒரு முஸ்லிமைச் சிறையிலிருந்து விடுவிப்பதும் கூடும். ஏனெனில் இவை யாவும் ஃபிர்ரிகாப் - அடிமைகளை விடுவித்தல் எனும் பொதுச் சட்டத்தில் அடங்கும்.
   ஆறாவது பிரிவினர் கடனாளிகள்! இவர்கள் கடன் சுமையால் துன்பப்படுகிறவர்களாவர்! இவர்கள் இருவகையில் உள்ளனர்.
  (1) மக்களிடையே சமாதானம் செய்வதற்கும் சண்டை- சச்சரவுகளையும் குழப்பத்தையும் அடக்குவதற்கும் பொறுப்பேற்றிருப்பவர்கள். அவர்களின் பொறுப்புகளுக்கு ஏற்ப ஜகாத் பணத்திலிருந்து வழங்கலாம். இதன் நோக்கம் அந்தச் சிறப்பான பணியில் அவர்களை ஊக்குவிப்பதாகும். இவர்களது பணியில் மூலம் மக்களின் இதயங்கள் இணக்கமாக்கப்படுகின்றன. உறவு சீர் செய்யப்படுகிறது. குரோதங்களும் வெறுப்புணர்வுகளும் நீக்கப்படுகின்றன. குழப்பங்கள் அடக்கப்பட்டு சமாதானத்திற்கு வழி பிறக்கிறது!
  கபீஸா - அல் ஹிலாலி(ரலி) எனும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள்: "நான் பண ரீதியான பொறுப்புகளை ஏற்றிருந்தேன். அதற்காகப் பண உதவி கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபியவர்கள் சொன்னார்கள்: நீர் செல்லும்! தர்மப் பணம் வரட்டும். பார்க்கலாம். அதை உமக்கு வழங்கிட ஆணையிடலாம்,,
  பிறகு சொன்னார்கள்: கபீஸாவே! இந்த மூவரில் எவரேனும் ஒருவருக்கே தவிர வேறெவருக்கும் அது ஆகுமானதல்ல. ஒருவர் பணரீதியான பொறுப்புகளை ஏற்றிருப்பவர்., இவர் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக யாசகம் கேட்பது கூடும். அது கிடைத்து விட்டால் அதனை நிறுத்திக்க கொள்ள வேண்டும். (இந்த நபிமொழி நீளமாகச் செல்கிறது) (நூல்: முஸ்லிம்)
  (2) தனது சொந்தப் பிரச்னைக்காகக் கடன் சுமைக்கு ஆளானவர். அதை நிறைவேற்ற அவரிடம் எதுவும் இருக்காது. ஜகாத்திலிருந்து அவருக்குக் கொடுக்க வேண்டும். அது அதி கம் என்றாலும் சரியே! அவரிடம் நேரடியாகக் கொடுக்காமல் யாரிடம் அவர் கடன்பட்டிருக்கிறாரோ அவரிடம் கொடுத்தாலும் சரியே! ஏனெனில் இவரைக் கடன் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
   ஏழாவது பிரிவினர், அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் வீரர்கள். ஃபீ ஸபீலில்லாஹ் (அல்லாஹ்வின் பாதை) என்பது வெறித்தனமாக அல்லது இன மாச்சரியத்திற்காக இல்லாமல் இறைமார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காகப் போர் செய்வதைக் குறிக்கும்.
  இந்நோக்த்துடன் போர் புரியும் வீரனுக்கு, ஜகாத்திலிருந்து போதிய அளவு பணம் வழங்கிட வேண்டும். அல்லது இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக -இறைவாக்கை மேலோங்கச் செய்வதற்காக இறைவழியில் போர் புரியும் வீரர்களுக்கு ஆயுதங்களும் தளவாடங்களும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
   எட்டாவது பிரிவினர், கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்து போய் இடையிலேயே பயணம் தடைபட்டுவிட்ட பயணிகள் ஆவர். சொந்த ஊருக்குப்போய் சேரும் அளவு இவர்களுக்கு ஜகாத் பணம் வழங்கப்பட வேண்டும். இவர்கள் தம் சொந்த ஊரில் செல்வந்தர்களாக இருந்தாலும் சரயே!
  ஆனால் பணம் தீர்ந்து விட்டால் ஜகாத் வாங்கிக் கொள்ளலாம் எனக்கருதிப் பணத்தைக் குறைவாக எடுத்துக்கொண்டுப் பயணம் புறப்படுவது கூடாது! ஏனெனில் தனக்கு உரிமையில் லாததைப் பறித்துக் கொள்ளும் நோக்குடன் செய்யப்படும்தந்திரமாகும் இது!
  இறைநிராகரிப்பாளனுக்கு ஜகாத் கொடுக்கப்பட மாட்டாது., இதயம் இணைக்கப்பட வேண்டியவர்களுள் ஒருவனாக இருந்தாலே தவிர!
  இதேபோல ஜகாத் பெற வேண்டிய தேவையில்லாத வகையில் வியாபாரமோ தொழிலோ உற்பத்தியோ ஊதியமோ விவசாய வருமானமோ பொறுப்பேற்கப்பட்ட ஜீவனாம்சமோ - ஏதேனும் ஒன்று போதிய அளவு ஒருவருக்கு உள்ளதெனில் அவருக்கும் ஜகாத் கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அவர் ஜகாத் துறை ஊழியராகவோ இறைவழிப் போராளியாகவோ அல்லது மக்களின் பிணக்கைத்தீர்த்து வைப்பதற்காக் கடன் பட்டவராகவோ இருந்தால் அவருக்கு ஜகாத் கொடுக்கப்படும்.
  ஜகாத் அல்லாத வேறொரு கடமையிலிருந்து விடுபடுவதற்காக ஜகாத் வழங்குவது கூடாது.விருந்தாளிக்கு- விருந்து கொடுப்பதற்குப் பகரமாக ஜகாத் வழங்கக் கூடாது. மனைவி அல்லது உறவினர் போன்று யார் யாருக்குச் செலவுக்குப் பணம் கொடுப்பது தன் மீது கடமையோ அவர்களுக்கு-அந்தச் செலவினங்களுக்குப் பகரமாக ஜகாத் வழங்கப்பட மாட்டாது. ஆனால் மனைவிக்கும் நெருங்கிய உறவினருக்கும் கடமை யான செலவினங்கள் நீங்கலாக வேறு காரியங்களுக்கு ஜகாத் வழங்குவது கூடும்.
  இதன்படி மனைவியின் மீது கடன் சுமை இருந்து அவளால் அதனை நிறைவேற்ற இயலவில்லையென்றால் தனது ஜகாத்தின் மூலம் அந்தக் கடனைத் தீர்க்கலாம். இதைப் போன்று பெற்றோர் மற்றும் உறவினர் மீது கடன்சுமை இருந்து அவர்களால் அதனை நிறைவேற்ற இயலவில்லையானால் அப்பொழுது தனது ஜகாத்தின்மூலம் அந்தக் கடன்களைத் தீர்ப்பது கூடும். ஒருவர் தன் உறவினர்களுக்கு -அவர்களின் செல வினங்களை அடைத்திட ஜகாத் வழங்குவது கூடும்., அந்தச் செலவினம் அவர்மீது கடமையில்லை எனும் பட்சத்தில்! ஏனெனில் அவரது பணம் அவர்களின் மீதுள்ள செலவினங்களுக்கோ பிற காரியங்களுக்கோ பொறுப்பேற்றிருக்கவில்லை!
  மனைவி தனது ஜகாத் பணத்தைத் தன் கணவருக்குக் கொடுப்பது கூடும்., அவரது கடனையோ அதுபோன்ற பிற தேவைகளையோ நிறைவேற்றுவதற்குக் கொடுக்கலாம்! ஏனெனில் அல்லாஹ்,ஜகாத் பெறுவதற்கான தகுதியைச் சில பொதுவான தன்மைகளுடன் தொடர்புபடுத்தியுள்ளான். மேலே நாம் குறிப்பிட்டவர்கள் அனைவரையும் அவை உட்படுத்தும்!இந்தத் தன்மை உயவர்கள் ஜகாத் பெறத்தகுதியானவர்களே! எனவே இந்தத் தன்மைகளை உடைய எவரையும் - ஜகாத் பெறும் தகுதி இல்லை எனக் கூறி வெளியேற்ற முடியாது., நேரடியான ஆதாரமோ இஜ்மாவு எனும் கருத்தொற்றுமையோ இருந்தாலே தவிர!
  நபித்தோழராகிய இப்னு மஸ்வூது(ரலி) அவர்களின் மனைவிஜைனப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "தர்மம் செய்ய வேண்டும் என்று பெண்களுக்குக் கட்டளையிட்டார்கள் நபி(ஸல்)அவர்கள்! அப்பொழுது நான் நபியவர்களிடம் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டீர்கள். என்னிடம் சிறிது நகைகள் உள்ளன., அவற்றைத் தர்மம் செய்யலாம் எனக் கருதுகிறேன். ஆனால் என் கணவர் இப்னு மஸ்லூத் சொல்கிறார்: நான் தர்மம் செய்வ தற்கு அவரும் அவருடைய பிள்ளைகளும்தான் தகுதியானவர்கள் என்று!
  அதற்கு நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: இப்னு மஸ்வூது சொல்வதே உண்மை. உன் கணவரும் உன் பிள்ளைகளும் நீ தர்மம் செய்வதற்கு மிகவும் தகுதியானவர்கள் ஆவர்!
  ஸல்மான் பின் ஆமிர்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
  ஏழைக்குச் செய்யும் தர்மம் ஒரு தர்மமே! ஆனால் உறவினர்களுக்குச் செய்யும் தர்மம் தர்மமாகவும் உறவின் இணைப்பாகவும் உள்ளது,, உறவினர் என்பவர்கள் சொந்தக்காரர்களாவர். நேருங்கிய உறவினர்களானாலும் சரி. தூரத்து உறவினர்களானாலும் சரியே!
  ஓர் ஏழை மீதுள்ள கடனை விட்டுக்கொடுத்து விட்டு - ஜகாத் கொடுத்ததாக நிய்யத் - எண்ணிக் கொள்வது கூடாது. ஏனெனில் ஜகாத் என்பது வசூல் செய்வதும் வழங்குவதுமாகும். அல்லாஹ் கூறுகிறான்: "அவர்களின் பொருள்களில் இருந்து தர்மத்தை வசூல் செய்வீராக. (9:103) - நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
  திண்ணமாக அல்லாஹ் அவர்கள்மீது ஜகாத்தை கடமை யாக்கினான். அவர்களில் செல்வந்தர்களாய் உள்ளவர்களிடம் இருந்து அதனை வசூல் செய்து அவர்களின் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
  ஓர் ஏழையின் மீதுள்ள கடனை விட்டுக்கொடுப்பதில் - வாங்குதல் என்பதுமில்லை.,வழங்குதல் என்பதுமில்லை! மட்டு மல்ல ஏழையின் மீது கடனாக உள்ள பணம் தற்போது அவன் கைவசமில்லாத ஒன்று.அதனை அவன் பயன்படுத்தாத நிலை யில் இருக்கிறான். எனவே தற்போது அவன் பயன் படுத்த வேண்டிய பணத்துக்கு அது ஈடாகாது! மேலும் கடன் என்பது தற்போது கைவசமுள்ள பணத்தை விட மதிப்புக் குறைந்ததும் தரம் தாழ்ந்ததுமாகும். எனவே கைவசமுள்ள பொருளுக்குப் பகரமாக கை வசத்தில்லாததை ஈடாக்குதல் என்பது - நல்ல பொருளுக்குப் பகரமாகக் கெட்ட பொருளைக் கொடுப்பது போன்றதாகும்.
  - ஜகாத் கடமையான ஒருவர் நன்கு சிந்தித்துச் செயல்பட்டார். ஜகாத் பெறுவதற்குத் தகுதியானவர் எனக்கருதி ஒருவருக்கு ஜகாத் வழங்கினார்., ஆனால் அவர் தகுதியற்றவர் என்பது பிறகுதான் தெரிய வந்தது என்றால் அவர் ஜகாத் வழங்கியதாகவே கருதப்படும். ஏனெனில் தன்னால் இயன்ற அளவு அல்லாஹ்வுக்கு அஞ்சியே அவர் செயல்;பட்டுள்ளார்! அல்லாஹ் எந்த மனிதரையும் அவருடைய சக்திக்கு அதிகமாக பொறுப்புகளைச் சுமத்தி சிரமப்படுத்துவதில்லை!
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
  நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்: "ஒருமனிதர் - அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தர்மம் செய்யப் போகிறேன் என்று கூறினார். (இந்த நீளமான அறிவிப்பில் தொடர்ந்து வருகிறது) அவன் தனது தர்மத்தை ஒரு செல்வந்தன் கையில் வைத்து விட்டு வந்தான். காலையில், ஒரு செல்வந்தனுக்கே தர்மம் வழங்கப்பட்டது என்று மக்கள் பேசிக் கொண்டனர்! செல்வந்தனுக்குத் தர்மம் கொடுத்தாலும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று தர்மம் கொடுத்த அந்த மனிதன் சொன்னான். - பிறகு அவனிடம் (கனவில்) சொல்லப்பட்டது: தர்மத்தைப் பெற்ற செல்வந்தன் படிப்பினை பெறலாம். அல்லாஹ் அவனுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து அவனும் (இறைவழியில்) செலவு செய்யலாம். (நூல்: புகாரி, முஸ்லிம்) - ஸஹ{ஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஒரு அறிவிப்பில் வந் துள்ளது: "உனது தர்மம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட் டது (என்று கனவில் அவனிடம் சொல்லப்பட்டது).
  மஅன் பின் யஜீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
  என் தந்தை சில தங்க நாணயங்களை - தர்மம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றார். அவற்றைப் பள்ளி வாசலில் இருந்த ஒரு மனிதரிடம் கொடுத்து விட்டு வந்தார். நான் சென்று அவற்றை வாங்கிக் கொண்டேன். பிறகு அந்தத் தங்க நாணயங்களை என் தந்தையிடம் கொண்டு வந்தேன். அவர் சொன்னார்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்குக் கொடுக்க வேண்டும் நான் நினைக்கவில்லை,, நான் இந்தப் பிரச்னையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்பொழுது நபியவர்கள் சொன்னார்கள்: யஜீதே! (தர்மம் கொடுக்க வேண்டுமென) நீர் எண்ணியது உமக்கு கி;ட்டும். மஅனே! நீ எடுத்துக் கொண்டது உனக்கே! (நூல்: புகாரி)
  சகோதரர்களே! ஜகாத்தை யார் யாருக்கு வழங்கிடவேண்டும் எனஅல்லாஹ் குறிப்ட்டுச் சொல்லியுள்ளானோ அவர்களுக்கு வழங்கவில்லை என்றால் ஜகாத் வழங்கியதாக ஆகாது! அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!
  எனவே நன்கு சிந்தித்துச் செய்படுங்கள்! அல்லாஹ் உங்கள் மீது அருள்பாலிப்பானாக! ஜகாத், அதற்குரிய இடங்களுக்கு முறையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் ஆர்வம் கொள் ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் மீதுள்ள பொறுப்புகள் நீங்கும்.மேலும் உங்கள் செல்வங்களை நீங்கள் தூய்மையாக்கியவர்களாகவும் உங்கள் இறைவனின் கட்டளையைச் செயல்படுத்தியவர்களாகவும் ஆகுவீர்கள்! மேலும் உங்கள் தர்மங்களும் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்டும்! நல்லுதவி செய்திட அல்லாஹ் போதுமானவன். அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!