2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  பத்ரு போர்

  - பத்ரு போர்
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் வலிமை மிக்கவன். ஆற்றல் உடையவன். அனைவரையும் அடக்கி ஆள்பவன். வெளிப்படையானவன். அரசன். உண்மையானவன். உண்மையை உண்மையாக்கிக் காட்டுபவன்!
  மெல்லிய முனங்கல்கூட அவனது செவியாற்றலை விட்டும் மறைந்திடாது. கருவிலுள்ள சிசுவின் அசைவுகள் கூட அவனது பார்வையை விட்டும் தப்பிவிடாது. அவனது பெருமைக்கு எதிரில் ஆணவமிக்க அரசர்கள்கூட பணிந்தாக வேண்டும்! அவனே தன் விவேகத்தால் தீர்ப்பளித்தான். அவனே ஆட்சியாளர்கள் அனைவரினும் பெரிய ஆட்சியாளன். நன்றி செலுத்துவோர் புகழ்வதைப்போல் அவனைப் புகழ்கிறேன். பொறுமையாளர்களுக்குச் செய்யும் உதவியை அவனிடம் யாசிக்கிறேன்.
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி சொல்;கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணைதுணை இல்லை. முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள் அனைவரின் வணக்கத்திற்குரிய இறைவன் அவனே!
  முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். அவர்கள், அனைத்துத் தூதர்களிலும் முன்னுரிமை கொடுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வானத்தில் இருந்து இறக்கப்பட்ட மலக்குகளால் பத்ரு போரில் உதவி செய்யப்பட்டவர்கள்!
  நபியர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் தோழர்கள் மீதும் - வாய்மையுடன் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் மீதும் மறுமை நாள் வரையில் அல்லாஹ் கருணை பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  சகோதரர்களே! பாக்கிய மிக்க இந்த மாதத்தில் தான், பத்ருப் பேரில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாபெரும் உதவி அளித்தான். அவர்களின் எதிரிகளாகிய சிலைவணங்கிகளைத் தோல்வி அடையச் செய்தான். பாகுபடுத்தும் நாள் என்று அந்த நாளுக்குப் பெயர் சூட்டினான். ஏனெனில் அந்நாளில்தான் அல்லாஹ் தன் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உதவி புரிந்ததன் மூலமும் சிலைவணங்கிகளான நிராகரிப்பாளர்களைத் தோல்வி அடையச் செய்ததன் மூலமும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் பாகுபடுத்தினான்!
  இந்தப்போர் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமளான் மாதம் நடைபெற்றது. இந்தப் போருக்கான காரணம் இதுதான் :
  அபூ ஸ{ஃப்யானின் தலைமையில் குறைஷிகளின் வாணிபக் குழு ஒன்று ஷாம் தேசத்திலிருந்து மக்கா நோக்கி வந்து கொண்டிருந்த செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அந்த வாணிபக்குழு மீது தாக்குதல் தொடுக்கப் புறப்படுமாறு நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை அழைத்தார்கள். ஏனெனில் குறைஷிகள் நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுக்கும் குறைஷிகளுக்குமிடையே எந்த உடன்படிக்கையும் இருக்க வில்லை. மட்டுமல்ல இவர்கள் நபியவர்களையும் முஸ்லிம்களையும் வீடு,வாசல்கள் மற்றும் உடமைகளை விட்டும் வெளியேற்றி இருந்தார்கள்! முஸ்லிம்கள் மேற்கொண்டிருந்த சத்திய அழைப்புப் பணிக்குத்தடையாகவும் இருந்தார்கள். எனவே குறைஷிகளின் வாணிபக் குழுவை நேருக்கு நேர் சந்தித்திட நபியவர்களும் தோழர்களும் எடுத்த முடிவு முற்றிலும் நியாயமாதே!
  நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் புறப்பட்டார்கள்., அவர்களின் எண்ணிக்கை 310 க்கும் சற்று அதிகம்! அவர்களிடம் இருந்தது - இரண்டு குதிரைகளும் எழுபது ஒட்டகங்களும்தான்! ஒருவர் பின் ஒருவராக முறை வைத்து அவற்றில் பயணம் செய்தார்கள்! முஹாஜிர்கள் எழுபதுபேர்., மீதிப்பேர் அன்ஸாரிகள்! அவர்கள் வாணிபக் குழுவை நாடிச் சென்றார்களே தவிர போர் தொடுக்க வேண்டும் என்றல்ல! ஆயினும் அவர்களையும் அவர்களின் எதிரிகளையும் - எதிர்பாராத வகையில் சந்திக்க வைத்தான் அல்லாஹ்! தீர்மானிக்கப்பட்டிருந்த விஷயத்தை அல்லாஹ் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக!
  நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் பறப்பட்டு வருவதை அபூ ஸ{ஃப்யான் அறிந்த போது குறைஷிகளிடம் உதவி கேட்டு ஆள் அனுப்பினார். தங்களின் வாணிபக் குழுவை குறைஷிகள் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிறகு வழக்கமாகச் செல்லும் பாதையை விட்டு விட்டு கடற்கரை ஓரமாக நடையைக் கட்டினார்., பிழைத்தார்!
  ஆனால் குறைஷிகளோ - உதவி தேடி வந்த நபர் அவர்களிடம் வந்தபோது தங்களின் முக்கியமான தலைவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக எல்லாரும் போருக்காகக் கிளம்பி விட்டார்கள். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரம் ஆகும். நூறு குதிரைகளும் எழுநூறு ஒட்டகங்களும் அவர்களிடம் இருந்தன!
  இறுமாப்புடனும் (தங்களது பலத்தை) பிற மக்களுக்குக் காண்பிக்கும் வண்ணமும் புறப்பட்டார்கள். மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் மக்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்கள்! அல்லாஹ், அவர்கள் செய்பவை அனைத்தையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்!
  முஸ்லிம்களை ஏசிப் பேசிக் கவிதை பாடக் கூடிய அடிமைப் பெண்களும் அவர்களுடன் வந்திருந்தார்கள்.
  இவ்வாறு குறைஷிகள் புறப்பட்டு வருவதை அபூ ஸ{ஃப்யான் அறிந்தபோது தாம் தப்பி வந்துவிட்ட செய்தியை அவர்களிடம் அறிவிக்க ஆள் அனுப்பினார். போர் செய்ய வேண்டாம். திரும்பிச் சென்று விடுங்கள் என்றும் அவர்களுக்கு ஆலோசனை சொல்லி அனுப்பினார்.
  ஆனால் குறைஷிகள் இதனை ஏற்க மறுத்து விட்டார்கள்! அபூ ஜஹ்ல் சொன்னான்: "நாங்கள் பத்ரு மைதானத்தை அடைந்து அங்கே மூன்று நாட்கள் தங்கியிருப்போம். ஒட்டகங்கள் அறுத்து விருந்து பரிமாறுவோம். மது ஊற்றிக் கொடுப்போம். இப்படி எங்களுடைய செய்தியை அரபுகள் கேள்விப்பட்டால்தான் சதாவும் எங்களுக்கு அவர்கள் அஞ்சிக் கொண்டிருப்பார்கள்!
  ரஸ_லுல்லாஹ்(ஸல்) அவர்கள் குறைஷிகள் புறப்பட்டு வருவதை அறிந்தபோது தம்முடன் வந்திருந்த தோழர்களை ஒன்று திரட்டி ஆலோசனை கலந்தார்கள் சொன்னார்கள்: திண்ணமாக அல்லாஹ் இரண்டு கூட்டங்களில் ஒன்றைக் குறித்து எனக்கு வாக்களித்துள்ளான். ஒன்று வாணிபக் கூட்டம். மற்றொன்று குறைஷிகளின் படை!
  உடனே முஹாஜிர்களில் ஒருவராகியமிக்தாத் பின் - அல் அஸ்வத்(ரலி) அவர்கள் எழுந்து கூறினார்கள்: "இறைத்தூதரே! அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! பனூ இஸ்ராயீல்கள் மூஸா நபியிடம்-நீரும் உம் இறைவனும் சென்று போரிடுங்கள் நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறோம்!, என்று சொன்னது போல் நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால் உங்கள் வலது புறமும் இடது புறமும் நின்று - உங்களுக்கு முன்னும் பின்னும் நின்று நாங்கள் போரிடுவோம்!
  மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தின் தலைவர் ஸஅத்பின் முஆத்(ரலி) அவர்கள் எழுந்து கூறினார்:
  அல்லாஹ்வின் தூதரே! அன்ஸாரிகள் அவர்களது ஊருக்குள்ளே வைத்து தங்களுக்கு உதவுவதுதான் அவர்களின் கடமையெனக் கருதிவிடுவர்களோ எனத் தாங்கள் அச்சம் கொள்ளலாம். நிச்சயமாக! நான் அன்ஸாரிகள் சார்பாகக் கூறுகிறேன்: தாங்கள் விரும்பிய இடத்திற்குப் புறப்படுங்கள்! தாங்கள் விரும்பியவர்களோடு உடன்படிக்கை வைத்துக் கொள்ளுங்கள்! தாங்கள் விரும்பாதவர்களை விட்டும் உடன்படிக்கையைத் துண்டித்துக் கொள்ளுங்கள்! எங்களின் சொத்துகளில் இருந்து தாங்கள் விரும்பிய அளவு எடுத்துக் கொண்டுதாங்கள் விரும்பியதை எங்களுக்குத்தாருங்கள்! தாங்கள் எங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டதுதான் எங்களுக்குப் பிரியமானதாகும்! (அது பற்றி நாங்கள் அடையும் மகிழ்ச்சி) எங்களிடம் தாங்கள் விட்டு வைத்தது பற்றி அடையும் மகிழ்ச்சியை விட அதிகமாகும். (அல்லாஹ்வின் தூதரே!) எங்களது விஷயத்தில் தாங்கள் ஏதேனும் கட்டளையிட்டால் அதைப் பின்பற்றுகிறவர்களாகவே நாங்கள் இருப்போம்!
  அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஃகம்தான் எனும் ஊரின் தடாகம் வரை நீங்கள் எங்களை அழைத்துச் சென்றாலும் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் வருவோம். நீங்கள் எங்களை அழைத்து செல்லும் வழியில் கடல் குறுக்கிட்டு நீங்கள் அதில் குதித்தீர்களானால் நாங்களும் அதில் குதிக்கத் தயார்! எங்களோடு நாளைய தினமே நீங்கள் எதிரிகளைச் சந்தித்தாலும் அதனை நாங்கள் பாரமாகக் கருதமாட்டோம். நிச்சயமாக! நாங்கள் போரின்போது நிலை குலையாமல் நிற்பவர்கள்! வாய்மை யோடு களம் காண்பவர்கள்! தாங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடிய வீரதீரச் செயல்களை எங்களிடம் இருந்து அல்லாஹ் உங்களுக்குக் காண்பிக்க வேண்டும் என நாங்கள் ஆதரவு வைக்கிறோம்!"
  முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஆற்றிய இவ்வுரைகளைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். பிறகு சொன்னார்கள்: "புறப்படுங்கள்! மகிழ்வு கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எதிரிகள் வெட்டி வீழ்த்தப் படும் இடங்கள் எனது கண் முன் தெரிவதுபோல் உள்ளது!"
  அல்லாஹ்வின் படைகளை அழைத்துக்கொண்டு நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். பத்ரின் தண்ணீர் ஊற்றின் அருகில் தங்கினார்கள். அப்போது ஹிபாப் பின் முன்திர்(ரலி) என்கிற தோழர் கேட்டார்:
  அல்லாஹ்வின் தூதரே! நாம் முகாமிட்டுள்ள இந்த இடத்தைக் குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? இங்கு தங்குவது அல்லாஹ்வின் கட்டளையா? அப்படியாயின் இந்த இடத்தை விட்டுச்சற்று முன்னே செல்லவோ பின்னே நகரவோ நமக்கு அதிகாரம் இல்லை! அல்லது கருத்தின் அடிப்படையில் மற்றும் போர்த் தந்திரம் - போர்ச் சூழலின் அடிப்படையில் இங்கு தங்கியுள்ளோமா?
  நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: இல்லை., இது எனது கருத்துதான்;. போர்த் தந்திரமும் போர்ச் சூழலை ஒட்டிய விஷயமே "
  பிறகு அந்தத் தோழர் சொன்னார்: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இந்த இடம் நாம் தங்குவதற்கு ஏற்றதல்ல! எங்களை இன்னும் சற்று முன்னே அழைத்துச் செல்லுங்கள். ஜனங்களுக்கு நெருக்கமாக உள்ள கிணற்றருகே சென்று நாம் தங்குவோம். அது தவிர உள்ள ஏனைய கிணறுகளை நாசப்படுத்திவிடுவோம். பிறகு நமது நீரூற்றைச் சீர்படுத்தி அதில் தண்ணீர் நிறைத்துக் கொண்டு அதை நாம் குடிநீராகப் பயன்படுத்துவோம். எதிரிகளுக்கு இந்த வாய்ப்பு இல்லாது போய் விடும்!"
  நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருத்தைச் சரியென ஏற்று அங்கு புறப்பட்டார்கள்! நபியர்கள் திரு மதீனாவை அடுத்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கினார்கள். குறைஷிகள் திரு மக்காவை அடுத்தப் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கினார்கள். அல்லாஹ் அன்றைய இரவில் மழை பொழியச் செய்தான். சிலைவணங்கிகளின் பகுதியில் பெரும்அளவு மழைபெய்து அவர்களை முன்னேறிச் செல்ல விடாமல் தடுக்கும் அளவுக்குச் சேரும் சகதியுமானது! முஸ்லிம்களின் பகுதியில் லேசான மழை இருந்தது அது அவர்களைச் சுத்தப்படுத்தியது. அவர்களின் பகுதியை மென்மைப்படுத்தி மணலை இருக்கமாக்கியது. அவர்கள் தங்கியிருந்த பகுதியைச் சமதளமாக்கி பாதங்களை உறுதிப்படுத்தவும் செய்தது!
  போர்த் திடலில் சற்று உயரமான மேட்டின் மீது நபி(ஸல்) அவர்களுக்காக ஒரு பந்தல் அமைத்தார்கள் முஸ்லிம்கள். அதில் நபி(ஸல்) அவர்கள் தங்கினார்கள்.
  நபியவர்கள் தம் தோழர்களின் அணிகளைச் சரிப்படுத்தினார்கள். போர் மைதானத்தில்- எதிரிகள் வீழ்த்தப்படும் பகுதிகளையும் வெட்டிச்சாய்க்கப்படும் இடங்களையும் சுட்டிக்காட்டிய வண்ணம் சிறிது தூரம் நடந்து சென்றார்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ்வின் நாட்டப்படி) இது இன்னார் வீழ்த்தப்படும் இடம்! இன்ஷா அல்லாஹ் இது இன்னார் வீழ்த்தப்படும் இடம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள் நபியவர்கள்! சுட்டிக்காட்டிய இடங்களிலேயே எதிரிகள் வீழ்ந்தார்கள்., அவற்றைக் கடக்கவே இல்லை!
  பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களின் பக்கமும் குறைஷிகளின் பக்கமும் ஒரு பார்வை செலுத்தியவாறு சொன்னார்கள்- "யா அல்லாஹ்! இதோ! குறைஷிகள் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும்; படைகளைத் திரட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். உன்னை எதிர்ப்பதற்கும் உன் தூதரைப் பொய்யரெனத் தூற்றுவதற்கும் வந்து விட்டார்கள். யா அல்லாஹ்! நீ என்னிடம் வாக்களித்த உதவியைத் தருமாறு உன்னிடம் கோருகிறேன். யா அல்லாஹ்! நீ வாக்களித்த வெற்றியை எனக்கு நிறைவேற்றித் தருவாயாக! யா அல்லாஹ் உன்னுடன் செய்து கொண்ட உடன்படிக்கை மற்றும் வாக்கு உறுதியின் பேரில் உன்னிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்!
  நீ நாடியிருந்தால் உனக்கு வழிபாடு செலுத்தப்பட்டிருக்காது! யா அல்லாஹ்! இந்தச்சிறிய கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டாய் எனில் பிறகு உன்னை வணங்கி வழிபட யாரும் இருக்க மாட்டார்கள்"
  முஸ்லிம்கள் தம் இறைவனிடம் உதவியும் இரட்சிப்பும் தேடினார்கள். அவனும் அவர்களின் இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான்!
  இதனையும் நினைவு கூரும்: உம் இறைவன் மலக்கு மார்களிடம் அறிவித்துக் கொண்டிருந்தான்: நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதியாக இருக்கச் செய்யுங்கள். நான், இதோ! நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகிறேன். ஒவ்வொரு விரல் மூட்டுகிளிலும் அடியுங்கள் -இப்படி அறிவித்ததற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான்! மேலும் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் யார் எதிர்க்கிறார்களோ (அவர் களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாக இருக்கிறான் (அவர்களிடம் சொல்லப்படும்) இதுதான் உங்களுக்குரிய தண்டனை. இப்போது இதனைச் சுவையுங்கள். மேலும் நிராகரிப்பாளர்களுக்குத் திண்ணமாக நரக வேதனை இருக்கிறது!" (8 : 21 - 14)
  பிறகு இரண்டு படைகளும் மோதின! யுத்தம் சூடு பிடித்தது! போரின் அச்சாணி சுழன்றது! நபி(ஸல்) அவர்கள் தம் கூடாரத்தில் இருந்தார்கள். அங்கே அபூபக்ர்(ரலி) மற்றும் ஸஅத் பின் முஆத்(ரலி) இருவரும் நபியவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டும் இரட்சிப்பைத் தேடிக்கொண்டும் இருந்தார்கள்!
  அங்கே லேசாகக் கண்ணயர்ந்துவிட்டு- இந்தக் கூட்டத்தினர் அதி விரைவில் தோல்வியுற்று அனைவரும் புறமுதுகிட்டு ஓடப்போகிறார்கள்... என்று கூறியவாறு வெளியே வந்தார்கள்.
  போரிடுவதற்குத் தம் தோழர்களை உற்சாகப்படுத்தினார்கள். கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கை வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! இன்று எவர் நிலைகுலையாதவராய் மறுமைக் கூலியை எதிர்பார்த்து பின்வாங்காமல் முன்னேறிச் செல்பவராய் நின்று எதிரிகளுடன் மோதிப் போரிட்டுக் கொல்லப்படுகிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான்!
  உடனே உமைர் பின் ஹிமாம்(ரலி) என்கிற அன்ஸாரி தோழர் எழுந்தார். அவர் கையில் சில பேரீத்தம் பழங்கள் இருந்தன. அவற்றை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார் - அல்லாஹ்வின் தூதரே! வானம் - பூமி அளவுக்கு விசாலமான சுவனத்திலா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
  சபாஷ்! சபாஷ்! அல்லாஹ்வின் தூதரே! அந்தச் சுவனத்தில் நான் பிரவேசிப்பதற்கு (இந்தப் போரில்) இந்த எதிரிகள் என்னைக் கொலை செய்வது மட்டுமே தடையாக உள்ளது! எனது இந்தப் பேரீத்தம் பழங்களை நான் சாப்பிட்டு முடிக்கும் வரையில் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது நிச்சயமாக நீண்டதொரு வாழ்க்கைதான்! என்று கூறினார். பிறகு அந்தப் பேரீத்தம் பழங்களைத் தூக்கி எறிந்து விட்டுக் களம் புகுந்து போரிட்டவாறே கொல்லப்பட்டார் உமைர் பின் ஹிமாம்(ரலி) அவர்கள்!
  நபியர்கள் ஒரு பிடி மண்ணையோ சிறு கற்களையோ எடுத்து அதனை எதிரிகளை நோக்கி வீசியெறிந்தார்கள். அது அவர்களின் கண்களில் விழுந்தது! அந்த மண்ணால் கண்கள் தாக்கப்படாதவர்கள் அவர்களில் யாரும் இல்லை. கண்களில் விழுந்த மண்ணை அகற்றுவதற்வதிலேயே அனைவரும் ஈடுபட்டனர்! அல்லாஹ்வின் சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்!
  பிறகு சிலை வணங்கிகளின் கூட்டம் தோற்கடிக்கப்பட்டது. அவர்கள் புறமுதுகிட்டு ஓடினார்கள். அவர்களை முஸ்லிம்கள் விரட்டிச் சென்றார்கள். சிலரைக் கொன்றார்கள். வேறு சிலரைக் கைது செய்தார்கள். இவ்வாறு எதிரிகளில் 70 பேரை முஸ்லிம் கள் கொன்றார்கள். 70 பேரைக் கைது செய்தார்கள்.
  கொலை செய்யப்பட்டோரில் அபூ ஜஹ்ல், ஷைபா பின் ரபீஆ, அவனுடைய சகோதரன் உத்பா, அவனுடைய மகன் வலீது உட்பட பெரும் தலைவர்களாய்த் திகழ்ந்த 24 பேரின் சடலங்கள் பத்ரு மைதானத்தில் இருந்த ஒரு பாழ் கிணற்றில் வீசி எறியப்பட்டன!
  இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்)அவர்கள் கஅபாவை நோக்கி நின்று கொண்டு இந்நான்கு பேர் மீதும் கேடு விளையட்டுமென பிரார்த்தனை செய்தார்கள். மேலும் அவர்கள் சொல்கிறார்கள்: அல்லாஹ்வை சாட்சியாக்கி கூறுகிறேன்: "இவர்கள் வீழ்த்தப்பட்டுக் கிடந்ததை நான் பார்த்தேன். அன்றைய தினம் வெயில் கடுமையினால் அவர்களின் சடலங்கள்; உருமாறிப் போயிருந்தன!" (நூல்: புகாரி)
  புகாரியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் இந்த அறிவிப்பும் பதிவாகியுள்ளது: குறைஷி குலப் பெருந்தலைவர்கள் 24 பேரின் சடலங்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்., அதன்படி, பத்ரு மைதானத்தில் - மிகவும் நாற்றமெடுத்த, மோசமான நிலையிலிருந்த கிணறு ஒன்றில் அவை வீசி எறியப்பட்டன!
  நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தார் மீது வெற்றி கொண்டால் அதன் பிறகு விசாலமானதொரு மைதானத்தில் மூன்று நாட்கள் தங்கியிருப்பது வழக்கம். பத்றில் மூன்றாவது நாள் அன்று தங்களது வாகனத்தைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டார்கள். அதன்படி பயணச் சாதனங்கள் எல்லாம் அதில் வைத்துக் கட்டப்பட்டன. பிறகு தோழர்கள் பின்தொடர சிறிது தூரம் நடந்து சென்றார்கள். அங்கே சுற்றுச் சுவர் எழுப்படாதிருந்த கிணற்றின் ஓரத்தில் நின்று கொண்டு அங்கு வீசி எறியப்பட்ட சடலங்களின் பெயர்களையும் அவர்களின்பெற் றோரின் பெயர்களையும் கூறி அழைக்கலானார்கள். "ஓ! இன்னாரது மகன் இன்னாரே! ஓ! இன்னாரது மகன் இன்னாரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் உங்களுக்கு நலமாக இருந்திருக்குமே! திண்ணமாக எதை எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்திருந்தானோ அதை உண்மையில் நாங்கள் கண்கூடாகக் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்கள் இறைவன் வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டு கொண்டீர்களா? "
  அப்போது உமர்(ரலி) கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! உயிரில்லாத வெறும் சடலங்களிடம் நீங்கள் என்ன பேசு கிரீர்கள்?"
  அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: "முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் கூறுவதை உங்களை விடக்கூடுதலாக அவர்கள் செவிமடுப் பவர்களாய் உள்ளனர்!"
  கைது செய்யப்பட்வர்களைப் பொறுத்து ...அவர்கள் விஷயத்தில் தம் தோழர்களிடம் ஆலோசனை கலந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்! கைதிகளின் விஷயம், ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் சொன்னார்கள்:
  "இறைவனுக்கு இணைவைத்து வணங்குவோரின் விஷயத்தில் அல்லாஹ் நிகழ்த்திக் காட்டிய முதல் நிகழ்ச்சி இது! போரில் கைதான எதிரிகளை உயிரோடு விட்டுவைப்பதைவிட அவர்களை அடியோடு அழித்தொழிப்பதுதான் எனக்கு விருப்பமானதாக உள்ளது"
  நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி)சொன்னார்கள்: "எனது கருத்து இதுதான்: நீங்கள் எங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்., நாங்கள் இவர்களின் கழுத்துகளை வெட்ட வேண்டும்., அலீக்கு அதிகாரம் அளியுங்கள்., அவர் அவரது சகோதரர் உகைலின் கழுத்தை வெட்டுவார். எனக்கு அதிகாரம் அளியுங்கள்.. நான் இன்னார் (அதாவது உமரின் உறவினர்) உடைய கழுத்தை வெட்டுகிறேன். திண்ணமாக இவர்கள் இறைமறுப்புக்கு முன்னோடிகளாயும் தலைவர்களாயும் உள்ளனர்!"
  அபூ பக்ர்(ரலி)அவர்கள் சொன்னார்கள்:"எனது கருத்து இது தான்: இந்தக் கைதிகள் ஒன்றுவிட்ட சகோதரர்களாகவும் நமது உறவினர்களாகவும் இருக்கிறார்கள். நாம் இவர்களிடம் அபராதம் வசூலித்துக் கொள்ளலாம். நிராகரிப்பாளர்களுக்கு எதிரில் நமக்கு வலிமை சேர்ப்பதாக அது அமையும். அல்லாஹ் இவர்களுக்கு இஸ்லாத்தின்பால் நேர்வழி காட்டவும் செய்யலாம்!"
  இறுதியாக நபி(ஸல்) அவர்கள் அபராதம் வசூல் செய் தார்கள். கைதிகளில் பெரும்பாலோர் ஓராயிரம் முதல் நான்கு ஆயிரம் திர்கம் அபராதமாகச் செலுத்தினார்கள். வேறு சிலர் அபராதம் செலுத்துவதற்கு பதில் மதீனாவாசிகளின் பிள்ளைகளுக்கு எழுதத்தறிவு கற்றுக்கொடுத்தார்கள்! இன்னும் சிலர் அபராதம் செலுத்துவதற்கு பதிலாக குறைஷிகளிடம் பிடிபட்ட முஸ்லிம்களை விடுவித்துத் தர வேண்டும் என்று சொல்லப்பட்டது. வேறு சில கைதிகள் - முஸ்லிம்களுக்குக் கடும் துன்பம் இழைத்துக் கொண்டிருந்தவர்கள், அதன் காரணமாக அவர்களைக் கட்டி வைத்து மரண தண்டனைவழங்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்!
  இதுதான் பத்ரு யுத்தம்! இதில் சிறியதொரு குழு பெரியதொரு கூட்டத்தையே வெற்றி கொண்டது. (ஒரு குழுவினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றொரு குழுவினர் இறைவனை நிராகரிப்பவர்களாய் இருந்தார்கள்)
  சிறுகுழுவினர் வெற்றி கொண்டதற்குக் காரணம், அவர்கள் இறைமார்க்கதைக் கடைப்பிடித்து வாழ்பவர்களாய் இருந்தது தான். இறைவாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் இறை மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவும் போர் புரிந்தார்கள். ஆகையால் கண்ணியமும் மகத்துவமும் மிக்க இறைவன் அவர்களுக்கு உதவினான்!
  ஆகவே முஸ்லிம்களே! உங்களது இறைமார்க்கத்தை நீங்கள் கடைப்படித்து வாழுங்கள். உங்கள் எதிரிகளின் மீது உங்களுக்கு வெற்றிகிட்டும் பொருட்டு! மேலும் நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள்! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நில்லுங்கள்! சத்தியத்திற்குத் தொண்டாற்றிட எப்போதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்படுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள். நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும்!
  யா அல்லாஹ்! ஏங்களுக்கு இஸ்லாத்தின் மூலம் உதவி செய்வாயாக இஸ்லாத்தின் அழைப்பாளர்கள் மற்றும் அதன் உதவியாளர்களின் குழுவில் எங்களையும் சேர்ப்பாயாக! இஸ்லாத்தில் எங்களை நிலைத் திருக்கச் செய்வாயாக! உன்னை நாங்கள் சந்தித்திடும் நாள் வரையில்!