2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  குர்பானிச் சட்டங்கள்

  குர்பானிச் சட்டங்கள்
  ________________________________________
  குர்பானி கொடுக்கப்பட வேண்டிய நாட்கள் :
  அய்யாமுத் தஷ்ரீக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாளாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜுபைர் இப்னு முதஇம் (ரலி) அறிவிக்கின்றார்கள். இது இப்னு ஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  பெருநாளான துல்ஹஜ் 10 ஆம் நாள் அன்று மட்டும் தான் அறுக்க வேண்டும் என்று சிலர் விளங்கிக் கொண்டுள்ளனர். இதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது. அய்யாமுத் தஷ்ரீக் என்பது 10,11,12,13 ஆகிய நான்கு நாட்கள் குர்பானி கொடுக்கலாம்.

  குர்பானிப் பிராணிகள்
  நபி (ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தார்கள். வாய்-கால்கள்-கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக அந்த ஆடு இருந்தது என அயூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)
  நாங்கள் ஹ{தைபிய்யா உடன்படீக்கையின் போது ஏழு நபர் ஒரு ஒட்டகத்தையும், ஏழு பேர் ஒரு மாட்டையும் அறுத்தோம் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா).
  இந்த ஹதீஸ்கள் குர்பானி கொடுக்கத்தகுதி பெற்ற பிராணிகளாக ஆடு, மாடு, ஒட்டகத்தையே அறிவிக்கின்றது. இது அல்லாத வேறு பிராணிகளை குர்பானி கொடுக்கலாகாது.

  குர்பானி பிராணிகளின் வயது
  முஸின்னத் என்ற பருவமுடையதைத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்குச் சிரமமாக இருந்தால், ஜத்அத் எனும் பருவமுடைய பிராணியையே அறுக்கலாம் என்று நபி ச அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)
  முஸின்னத் என்றால் ஐந்து வயதான ஒட்டகத்திற்கும், இரண்டு வயது முடிந்த ஆடு, மாடுகளுக்குமே கூறப்படும். ஜத்அத் என்றால் நான்கு வயதான ஒட்டகத்திற்கும், ஒரு வயதை முழமையடைந்த ஆடு, மாடுகளுக்கும் கூறப்படும் என இப்னுல் அஸீர் கூறுகிறார்கள்.
  குர்பானி கொடுப்பது ஒட்டகமாக இருப்பின் அது ஐந்து வயதை முழமையாக்கியதாக இருக்க வேண்டும். ஆடு, மாடுகளாக இருப்பின் அவை இரண்டு வயதை முழமையாக்கியதாக இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாதிருப்பின் இது போன்ற வயதில் பிராணி கிடைக்காதிருப்பின் நான்கு வயது முடிந்த ஒட்டகத்தையோ ஒரு வயது பூர்த்தியடைந்த ஆட்டையோ, மாட்டையோ குர்பானி கொடுக்கலாம்.

  பிராணிகளைப் பராமரித்தல்
  நாங்களும் இதர முஸ்லிம்களும் மதீனாவில் குர்பானிப் பிராணியைக் கொழுக்கச் செய்வோம் என்று உமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
  இந்த ஹதீஸ்படி குர்பானி கொடுப்போர், குர்பானிப் பிராணிகளை முன்பே வாங்கி அதற்கு நன்கு தீவனம் தந்து கொழுக்கச் செய்ய வேண்டும். அல்லது கொழுத்த பிராணியாக இருக்க வேண்டும்.

  ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும் (ஹஜ் செய்பவர்களுக்கு அல்ல)
  குர்பானி என்பது, இன்று பெருமைக்காக செய்யப்படும் செயலாகி விட்டது. வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு வீதம், கணக்கிட்டு தற்பெருமை நிமித்தம் குர்பானி கொடுக்கப்படும்பழக்கம் இருந்து வருகின்றது. இது தேவையற்றதாகும். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடே போதும். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது
  நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களுடைய குர்பரின கொடுக்கும் பழக்கம் எப்படி இருந்தது? என்று அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அதை அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். இந்நிலை இன்று மக்கள் பெருமைக்காக செய்யும் வரை இருந்தது. தற்போது நாம் காணும் நிலை ஏற்பட்டு விட்டது (அதாவது ஒரு குடும்பத்தினரே பல ஆடகளை குர்பானி கொடுக்கும்நிலை ஏற்பட்டது) என்று பதில் கூறினார்கள். இதை அதாஉ இப்னு யஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, இப்னுமாஜா, அம்முஅத்தா)
  நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஒரு ஆட்டையோ, இரண்டு ஆட்டையோ குர்பானி கொடுத்தனர் என்ற சுன்னத்தை நான் அறிந்த பிறகு (நான் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதால்) என்னை என் குடும்பத்தினர் கல்நெஞ்சன் என்று கருதுகின்றனர். (நான் பல ஆடகளை கொடுக்காததால்) என்அண்டை வீட்டார் என்னை கஞ்சன் என்கின்றனர் என அபூஸ{ரைஹா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இப்னுமாஜா)
  ஒரு குடும்பத்தினர் ஒரு ஆடு குர்பானி கொடுத்தாலே போதுமானதாகும்.

  ஒரு மாட்டை ஏழுபேர் குர்பானி கொடுக்கலாம் (ஹஜ் செய்பவர்களுக்கு அல்ல)
  ஒட்டகம், மாடு ஆகியவற்றை ஒருவர் குர்பானி கொடுக்கலாம். எனினும் 7 நபர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கலாம்.
  ஒட்டகம், மாடு ஆகியவற்றில் எங்களை ஏழு நபர்களை கூட்டாகச் சேர்ந்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

  குர்பானி கொடுக்கத் தகுதியற்ற பிராணிகள்
  கொம்பில், காதில் பாதி அளவோ அல்லது அதை விட கூடுதலாகவோ உடைந்த அறுபட்டவைகளை (ஆடு, மாடுகளை) குர்பானி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா).
  முழுமையாக காதில்லாதவை, அடியோடு கொம்பில்லாதவை, பார்வையே தெரியாதவை, பலவீனத்தால் தானாக எழுந்து நடக்க இயலாதவை, கால் ஒடிந்தவை ஆகியவை குர்பானி கொடுத்திட நபி (ஸல்) அவர்கள் தடை செய்தனர் என்று உத்பா இப்னு அப்தஸ்ஸ{லமிய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், அபூதாவூத்)
  எனவே கீழ்க்கண்ட நிலையில் உள்ள பிராணிகளை குர்பானி கொடுக்கக் கூடாது.
  1. கொம்பில் பாதி ஒடிந்த பிராணி
  2. காதில் பாதி அறுபட்டது
  3. தெளிவாகத் தெரியும் மாறுகண் உள்ளவை
  4. நன்கு தெரியும் நோய் உள்ளவை
  5. நன்கு தெரியும்படியான நொண்டி
  6. கால் எலும்பு முறிந்து விட்ட நொண்டி
  7. காதில்லாதவை
  8. கொம்பில்லாதவை
  9. பார்வையில்லாதவை
  10. தானாக எழுந்து நடக்க முடியாத பலவீனமானவை
  இவைகளை கண்டிப்பாக குர்பானி கொடுக்கக் கூடாது.

  காயடிக்கப்பட்ட பிராணிகள் கூடும்.
  காயடிக்கப்பட்ட இரண்டு பெரிய கொம்புகளையுடைய இரண்டு ஆடகளை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தனர் என்று அபூராபிஉ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத், ஹாகிம்)
  இரண்டு பெரிய கொம்புகiளுடைய, நன்கு கொழுத்த இரண்டு ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தனர் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். (அஹ்மத, இப்னுமாஜா, பைஹகீ, ஹாகிம்)
  எனவே காயடிக்கப்பட்ட ஆடுகளைக் குர்பானி கொடுக்கலாம். அதானால் தவறில்லை.

  அறுக்கும் நேரம்
  குர்பானி என்பது பெருநாள் தொழுகை முடிந்த பிறகே நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு முன்பு நிறைவேற்றினால் அது குhபானியாகாது. அதோடு அதற்கு பரிகாரமாக வேறு ஒரு பிராணியை குர்பானி கொடுக்கவும் வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
  ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்து நபி (ஸல்) அவர்கள் திரும்பிய போது அங்கே, எலும்புகளும், அறுக்கப்பட்ட குர்பானிப் பிராணிகளும் கிடந்தன. தொழுகை முடியும் முன்பே இவை அறுக்கப்பட்டு விட்டன என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், தொழும் முன்பு அறுத்தவர், அதே இடத்தில் வேறு ஒன்றை அறுக்கட்டும். தொழும்வரை அறுக்கவில்லையானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று கூறினார்கள். இதை ஜுன்துப் இப்னு ஸ{ப்யான் வ அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
  தொழும் முன் குர்பானி கொடுத்தால் (அதற்குப் பகரமாக) மீண்டும் அறுக்கட்டும் என்று ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்கள் கூறியாதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).
  தொழும் முன்அறுத்தவர், தனக்கே அதை அறுத்துக் கொண்டார். தொழுகைக்கு பின்பு அறுத்தவர் தன் குர்பானியை நிறைவேற்றியவராவார். முஸ்லிம்களின் வழிமுறையை பேணியவராவார் என்று புகாரியில் உள்ளது.
  எனவே ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழும் முன்பே அறுத்திடல் வேண்டும். மீறி அறுத்தால் பகரமாக வேறு ஒன்றை அறுத்திடல் வேண்டும். தொழுத பிறகு அறுப்பதே குhபானியாகும், நபி வழியாகும்.

  அறுக்கும்போது கூற வேண்டியவை
  குர்பானிப் பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூற வேண்டும்.
  நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெரிய கொம்புகளையுடைய இரண்டு ஆடகளை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தன் பாதங்களை அந்த ஆடுகளின் கழுத்தில்வைத்து மிதித்துக் கொண்டு, பிஸ்மில்லாஹ் என்று கூறி, அல்லாஹ{ அக்பர் என்று கூறியும் அவ்விரண்டையும்தன் கையால் அறுத்ததை நான் பார்த்தேன் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா).
  ஒரு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸில் உள்ள வாசகத்தை குர்பானி கொடுக்கும்போது கூறுகின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
  நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடகளை ஹஜ்ஜுப் பெருநாள் அன்று குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் நோக்கியவர்களாக, வஜ்ஜஹ்து வஜ்ஹியலில்லதீ பதரஸ்ஸமா வாத்தி வல்அர்லி ஹனீஃபன் வமா அன மனில் முஷ்ரிகீன், இன்ன ஸலாதீ, வநுஸ{கி, வ மஹ்யாய வமமாதீ ரப்பில் ஆலமீன் லா ஷரீகலஹ{ வபிதாலிக உமிர்து வஅன அவ்வலுல் முஸ்லிமீன் அல்லாஹ{ம்ம மின்க-வலக அன் முஹம்மதின வ உம்மதி என்று கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (அபூதாவூது, பைஹகீ, இப்னுமாஜா)
  இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மது இப்னு இஸ்ஹாக், இப்னு இயாஷ் ஆகியோர் இடம்பெறுகின்றனர் என்பதால் பலவீனப்படுகிறது. எனவே இதை வைத்து செயல்படுத்த முடியாது.

  அறுத்த பிறகும் துஆச் செய்யலாம்
  ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா! அதை கல்லில் நன்கு தீட்டு! என்று கூறி நபி (ஸல்) அவர்கள் ஆட்டைப் பிடித்தார்கள். அதை சாய்த்துப் படுக்க வைத்தார்கள். பின்பு அதை அறுத்தார்கள். பின்பு
  பிஸ்மில்லாஹ் அல்லாஹ{ம்ம தகப்பல் மின் முஹம்மதின வஆல முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின்
  என்று கூறினார்கள். குர்பானி கொடுத்தார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். (இது முஸ்லிம், அஹ்மத், அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது)
  பொருள் : இறைவன் பெயர் கூறி அறுக்கின்றேன். இறைவா! இதை இந்த முஹம்மதிடமிருந்தும், முஹம்மதின் குடும்பத்தினர் - சமுதாயத்தினரிடமிருந்தும் ஒப்புக் கொள்வாயாக!
  இந்த ஹதீஸின்படி நாம் அறுத்த பிறகு இறைவனிடம் துஆச் செய்து கொள்ளலாம் என்பதை விளங்க முடிகின்றது.

  கூர்மையான கத்தியால் அறுத்தல் வேண்டும்.
  அறுத்தப் பிறகும் துஆச் செய்யலாம் என்ற தலைப்பின் கீழ்வரும் ஹதீஸின் விளக்கப்படி, கூர்மை தீட்டப்பட்ட கத்தியால் தான் குர்பானி பிராணியை அறுக்க வேண்டும் என்பதைப் புரியலாம்.
  ஆடு-மாடுகளை படுக்க வைத்தே அறுக்க வேண்டும்.
  இதற்கு மேற்கண்ட அதே ஹதீஸே ஆதாரமாகும்.
  ஒட்டகத்தை நிற்க வைத்து அறுக்க வேண்டும்
  ஒரு மனிதர் ஒட்டகத்தைப் படுக்க வைத்து அறுப்பதைக் கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், அதை நீ எழுப்பி நிற்க வைத்து முஹம்மத் (ஸல்) அவர்கள் வழியில் அறுப்பீராக! என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

  குர்பானி கொடுப்பவரே அறுத்தல் வேண்டும்
  அறுக்கும் போது கூற வேண்டியவை என்ற தலைப்பின் கீழ்வரும் அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளபடி குர்பானி கொடுப்பவரே அறுக்கச் சொல்வதால் தவறில்லை. சில ஊர்களில் ஊரின் பேஷ் இமாமோ, மோதினாரோ அறுத்தால் தான் உண்டு என்று மாலை வரை அறுக்காது காத்திருப்போர் உண்டு. இது சரியல்ல!

  அறுக்குமிடம்
  அறுத்த பிறகு துஆச் செய்யலாம் என்ற தலைப்பின் கீழ்வரும் ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸ் மூலம் வீட்டில் குர்பானி கொடுத்ததை விளங்க முடிகிறது. ஆனாலும் தொழுமிடத்திலேயே குர்பானி கொடுப்பது சிறந்தது.
  பெருநாள் தொழுத இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு ஆகியவற்றை அறுப்பவர்களாக இருந்தனர் என இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா).

  குர்பானி இறைச்சியை உண்ணலாம், சேமிக்கலாம்.
  குர்பானி கொடுப்போரில் பலர் குர்பானி கொடுத்த ஆட்டை முழமையாக பிறருக்குக் கொடுத்து விடுவர். பிறகு தங்களின் வீட்டிற்காக வேறு ஒரு ஆட்டை குர்பானி என்ற பெயரின்றி சாதாரணமாக அறுத்துக் கொள்வர். இது சரியல்ல!
  இது போல் மூன்று பங்கு போட்டு ஒரு பங்கு ஏழை, ஒரு பங்கு உறவினர், ஒரு பங்கு தமக்கு என்று கூறி பிரித்து செய்வர். இவ்வாறு செய்யவும் நிர்பந்தமில்லை.
  சில குடும்பத்தினரோ மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை வைக்கக் கூடாது என்று கருதி உடனே அதைத் தர்மம் செய்து விடுவர். இவ்வாறு செய்ய எந்தச் சட்டமும் இல்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கலாம்.
  மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை உண்ண நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தனர். பின்பு உண்ணுங்கள், சேமித்து வையுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம், நஸயீ)
  எனவே நாம் அறுக்கும் குர்பானி பிராணிகளிலிருந்து நாமும் உண்ணலாம். தர்மம் செய்யலாம். எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

  உரிப்பவருக்கு குர்பானி இறைச்சியை, தோலைக் கூலியாகத் தரக் கூடாது
  நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகங்களை மேற்பார்வையிட என்னை நியமித்தார்கள். அதன் இறைச்சி தோல்,அதன் மீது கிடந்த (கயிறு போன்ற) பொருட்களை தர்மம் செய்யுமாறும், அதை உரித்தவருக்கு அவற்றில் எதையும் கூலியாகக் கொடுக்கவும் கூடாது என்றும் கட்டளையிட்டனர். நாங்கள் அதற்குத் தனியாக கூலி கொடுப்போம் என்று அலீ (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

  குர்பானி கொடுப்பவர் கடை பிடிக்க வேண்டியவை
  உங்களில் குர்பானி கொடுக்க எண்ணியவர், துல்ஹஜ் பிறையைக் கண்டால் அவர் தமது நகங்களை,மயிர்களை (குர்பானி கொடுக்கும் வரை) களையக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா வ அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா).
  குர்பானி கொடுக்கும் வரை என முஸ்லிமிலும் தெளிவாகவே உள்ளது.
  எனவே குர்பானி கொடுப்பவர் இந்த ஒழுங்குகளை கடைபிடிப்பாரானால் குhபானியின் பயனையும், நன்மையையும், இறை திருப்தியையும் அடைந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை.
  அல்லாஹ் மிக அறிந்தவன்.